Saturday, November 16, 2024

மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். (மத்தேயு நற்செய்தி 14:23)

 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். 
(மத்தேயு நற்செய்தி 14:23)


ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்து விட்டு, மக்களையும், சீடர்களையும் அனுப்பி விட்டு 

இயேசு தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். 

இந்த இறை வாக்கைத் தியானிக்கும் போது என் மனதில் பட்ட கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இறை வசனங்களைத் தியானிக்கும் போது ஏதாவது ஒரு மறை உண்மையின் பின்னணியில் தியானிப்பது என் வழக்கம்.

வார்த்தைகளை அப்படியே தியானிப்பதற்கும் ஒரு பின்னணியில் தியானிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஒரு மாணவன் அடிபட்டு அழுது கொண்டு அப்பாவின் முன் நிற்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பா "யார் அடித்தார்கள்" என்று கேட்டுவிட்டு தான் விசாரணையை ஆரம்பிப்பார்.

அம்மாவா, அண்ணனா, ஆசிரியரா, தெருவில் போகிற ஆளா போன்ற விபரங்களைத் தெரிந்து கொண்டு அந்த பின்னணியில் தான் விசாரணையைத் தொடர்வார்.

பின்னணிக்கு ஏற்றபடி விசாரணை வித்தியாசமாக இருக்கும்.

இயேசுவைப் பற்றி தியானிக்கும் போது அவர் பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாவது ஆள் என்ற பின்னணி மனதில் இருக்க வேண்டும்.

அந்த பின்னணியில் இந்த வசனத்தை தியானிக்க ஆரம்பிக்கும் போது என் மனதைத் தொட்ட வார்த்தைகள்,

1.இறைவனிடம்
 வேண்டுவதற்காக .

2.அவர் தனியே இருந்தார். 

பரிசுத்த தம திரித்துவத்தின் பின்னணியில் தியானித்தால்

இறைவனிடம் என்ற வார்த்தை தந்தை இறைவனைக் குறிக்கும்.

மூன்று ஆட்களும் ஒரே கடவுள், ஆனால் வெவ்வேறு ஆட்கள்.

Three distinct persons.

தந்தை மகன் அல்ல.
மகன் தந்தை அல்ல.

அதனால் தான் இருவரும் ஒரே கடவுளாக இருந்தாலும் 

தந்தை மகனை அனுப்பினார் என்று சொல்கிறோம்.

இருவருக்கும் ஒரே சித்தமாக இருந்தாலும்,

இயேசு கெத்சமனித் தோட்டத்தில்  "தந்தையே, 
 என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று செபித்தார். 
(லூக்கா நற்செய்தி 22:42)

ஆக 
"இறைவனிடம்
 வேண்டுவதற்காக"

 என்ற வார்த்தைகள் பரிசுத்த தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் வெவ்வேறானவர்கள் என்ற மறை உண்மையை வெளிப்படுத்துகின்றன.

These words reveal that the Three persons of the Holy Trinity are three distinct persons.

2.அவர் தனியே இருந்தார். 

மகன் தந்தையிடம் வேண்டும் போது அங்கே எத்தனை பேர் இருக்க வேண்டும்?

தூய ஆவியும் அங்கே தான் இருந்தார்.

மூவரும் தனித்தனி ஆட்களானாலும் மூவரும் ஒருவருள் ஒருவர் இருக்கிறார்கள்.

"நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். "
(அரு. 14:11)

ஏன் அவர் தனியே இருந்தார் என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்?

இதுவும் ஒரு மறை உண்மையைத் தெளிவு படுத்த.

ஒருவர்தான் தனியாக இருக்க முடியும்.

அங்கு இருந்தது மூவர், (ஆட்கள்)
ஆனால், ஒருவர் தான்.(கடவுள்)

அங்கு இருந்தது "மூவொரு" கடவுள்.  (மூவொருவர்)

''ஆதியில் வார்த்தை இருந்தார்;

 அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்; 

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்;"
(அரு. 1:1)

ஆதியிலிருந்து கடவுள் தனியாகத் தான் இருந்தார்.

ஒரே கடவுள்.

அவரோடு வேறு கடவுள்கள் இல்லை.

ஒரே கடவுள் தான் மூன்று ஆட்களாக இருக்கிறார்.


ஆக இந்த சிறிய இறை வசனத்தில் நற்செய்தியாளர் மிகப்பெரிய மறை உண்மையைப் பொதிந்து வைத்திருக்கிறார்.

இந்த இறை வசனத்தைத் தியானித்து விட்டு அதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்.

இயேசு தனது ஒவ்வொரு செயலையும் நமக்கு முன்மாதிரிகையாகச் செய்தார்.

அவர் செபிப்பதற்கு மலை மேல் ஏறியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர் கடவுள். அவருடைய இயல்பான வாழ்க்கையே செப வாழ்க்கை தான்.

கடவுளோடு ஒனாறித்திருப்பதுதான் செபம்.

தம‌ திரித்துவத்தின் மூன்று ஆட்களும் எப்போதும் ஒருவருள் ஒருவர் ஒன்றித்துதான் வாழ்கிறார்கள்.

இருந்தாலும் நமக்கு முன் மாதிரிகை காட்டவே மலை மேல் ஏறி செபித்தார்.

மலை தனிமையைக் குறிக்கிறது. 

நாம் பிறருடைய தொந்தரவு இல்லாமல் ஏதாவது முக்கியமான வேலை செய்ய வேண்டுமென்றால் மாடிக்குச் சென்று விடுவதில்லை?

சிலர் மொட்டை மாடிக்கே சென்று விடுவார்கள்.

அதுபோல

நாம் செபம் சொல்லும் போது மற்ற தொந்தரவுகள் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மற்ற தொந்தரவுகள் என்றால் ஆள் தொந்தரவு மட்டுமல்ல, செபம் தவிர மற்ற எல்லாம் அதற்குத் தொந்தரவு தான்.

சில மாணவர்கள் T.V யைப் பார்த்துக் கொண்டே படிப்பார்கள்.

 Cell Phone ஐப் பார்த்துக் கொண்டே திருப்பலி காணும் பெரிய மனிதர்களும் இருக்கிறார்கள்.

வெளித் தொந்தரவு இல்லாத நிலையில் செபம் செய்ய வேண்டும் 

செபம் சொல்லும் போது இறைவனிடம் தான் வேண்டுகிறோம்.

இறைவனோடு தனியாக இருக்க வேண்டும்.

குடும்ப செபம் சொல்லும் போது குடும்பம் முழுவதும் இறைவனோடு தனியாக இருக்க வேண்டும்.

வாயினால் சப்தமாகச் சொல்லும் போது மனதில் வேறு யாரோடும் பேசிக்கொண்டிருக்கக் கூடாது.

இரவு‌ செபம் சொல்லும் போது மனதில் மறுநாள் வேலைக்கான திட்டம் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

வாயால் அன்னை மரியாளிடம் பேசிக் கொண்டு கற்பனையில் வேறு யாரோடும் பேசிக்கொண்டிருக்கக் கூடாது.

சிலர் கோவிலில் அமர்ந்து திருப்பலி கண்டு கொண்டிருப்பார்கள். மனது மட்டன் கடையை வலம் வந்து கொண்டிருக்கும்.

நாம் தனித்து இறைவனோடு ஒன்றித்து செபிக்க வேண்டும் என்பதற்காகத்தான்

முன்மாதிரியாக இயேசு மலைமீது ஏறி தனியாக இருந்து செபித்தார்.

பராக்குகளின் துணை இல்லாமல் தனிமையில் இறைவனோடு ஒன்றித்திருப்போம்.

அதுதான் உண்மையான செபம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment