Thursday, November 28, 2024

இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். (மத்தேயு நற்செய்தி 4:19)

 இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 4:19)

ஒரு ஊர்ல ஒரு அரசர் இருந்தார்.

அரசர் மட்டுமா இருந்தார்?

மக்களும் இருந்தார்கள்.

அவர் மக்களை நேசித்தார், மக்கள் அவரை நேசித்தார்கள்.

அவருக்குப் பிள்ளை இல்லை.

மக்களையே தன் பிள்ளைகளாகக் கருதினார்.

வழக்கமாக அரசர்கள் மக்களிடம் வரி வசூலிப்பார்கள்.

இவரும் வரி வசூலித்தார், ஆனால் வரி வசூலிப்பதில் காட்டிய ஆர்வத்தை விட அதை மக்கள் நலனுக்காக செலவழிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.

ஒரு முறை அவரது பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

அவர் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து கூற நிறைய பேர் வந்திருந்தார்கள்.

ஒவ்வொருவரும் ஒரு பரிசுப் பொருளைக் கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு நன்றி கூற எழுந்த அரசர் இவ்வாறு கூறினார்,

''அன்பார்ந்த மக்களே, நீங்கள் என்னைத் தேடி வந்து என்னை வாழ்த்தியமைக்கு நன்றி கூறுகிறேன்.

உங்களுக்கு நன்றியாக நானும் பரிசுப்பொருட்கள் தர விரும்புகிறேன்.

அரண்மனையில் நிறைய பொருட்கள் இருக்கின்றன.

நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட பொருளை உங்களுக்கான பரிசாக எடுத்துக் கொள்ளலாம்."

உடனே மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுக்க ஆரம்பித்தார்கள்.

ஒவ்வொருவரும் விலை மதிப்புள்ள பொருளாக எடுத்தார்கள்.

ஒரு பத்து வயது பையன் எந்தப் பொருளையும் எடுக்கச் செல்லவில்லை.

நேரே அரசரிடம் சென்று அவரது கால்களைப் பற்றிக் கொண்டான்.

அரசர் கேட்டார்,   "தம்பி, உனக்கு ஒரு பரிசுப் பொருளும் வேண்டாமா?"

''வேண்டும், அரசே. நான் உங்களை எனது பரிசாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

மற்றவர்களுக்கு அவர்கள் எடுத்தது தான்  சொந்தம்.

 எனக்கு நீங்கள்  சொந்தம், அதாவது உங்களுக்குச் சொந்தமான அனைத்தும் எனக்குச் சொந்தம்."

அவனது புத்திசாலித்தனத்தைப் பார்த்து மன்னர் மகிழ்ந்தார்.

உடனே அவனைத் தன் மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்.

*.          *.        *.       *.          *.        *

இராயப்பரும் அவருடைய சகோதரர் அந்திரேயாவும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

 இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். 

இருவரும் தங்கள் வலைகளை விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

"நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்"  என்று இயேசு சொன்னார்.

அவர்கள் மனிதரைப் பிடிப்பதற்கு முன் இயேசுவின் கால்களைப் பற்றிக் கொண்டார்கள்.

இனி இயேசுதான் அவர்களுக்கு எல்லாம்.

உலகையும் அதில் வாழும் அனைத்து மக்களையும் படைத்தவர் அவர்தான்.

இங்கு ஒரு இறையியல் உண்மையை நினைவு படுத்த வேண்டும்.

இயேசு பாவிகளைத் தேடி உலகுக்கு வந்தார்.

அவருடைய சீடர்களாகிய நாமும் அவருடைய கட்டளைப்படி அவரது நற்செய்தியை அறிவிக்கிறோம்.

நாம் அறிவிப்பதைக் கேட்டு மக்கள் மனம் திரும்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

மக்களை மனம் திருப்பியது யார்?

நாமா?

நிச்சயமாக இல்லை.

மனம் திருப்பியவர் இயேசு. நாம் கருவிகள் மட்டுமே.

மனம் திருப்ப கடவுளால் மட்டுமே முடியும். இது இறையியல் உண்மை.

"நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார்."
(1 கொரிந்தியர் 3:6)

சீடர்கள் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்தார்கள். ஆனாலும் மக்களை மனம் திருப்பியவர் தூய ஆவியானவரே.

அவரே மனம் திருப்பும்போது எதற்காக சீடர்களின் போதனை?

ஏனெனில் அது தான் கடவுளின் விருப்பம்.

முதல் மனிதனைக் கடவுள் நேரடியாகப் படைத்தார்.  ஆனால் தொடர்ந்து மனிதர்கள் மூலமாகத் தானே குழந்தைகளைப் பிறக்க வைக்கிறார். அது அவரது சித்தம்.

பாவங்களை மன்னிப்பது அவராக
 இருந்தாலும் அதை குருக்கள் மூலமாகத்தானே செய்கிறார். அது அவரது சித்தம்.

நம்மைக் கேளாமலே நம்மைப் படைத்த கடவுள் நாம் கேட்டால் தானே நம்மை மீட்கிறார். அது அவரது சித்தம்.

நாம் சுய உணர்வோடு தான் விண்ணகப் பாதையில் நடக்க வேண்டும். ஆனாலும் சுய உணர்வைக் கடவுள் தான் தர வேண்டும்.

அதைக் கேட்டால்தான் தருவார்.
அது அவரது சித்தம்.

மனிதன் கடவுளோடு இணைந்து இயங்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

அவரோடு ஒன்றித்து நாம் வாழ வேண்டும் என்று அவர் ஆசைப் படுகிறார்.

ஆகையினால்தான் அவராலேயே தர முடிந்தாலும் "கேளுங்கள், தரப்படும்" என்கிறார்.

நாம் அவருடைய பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டால் அவருடைய அருள் வரங்கள் அனைத்தும் நமக்குச் சொந்தமாகிவிடும்.

அனைத்து அருள் வரங்களுக்கும் சொந்தமானவர் நமக்குச் சொந்தமாக இருக்கும் போது நாம் உலகில் வேறு எதற்கு ஆசைப்பட வேண்டும்?  .

நாம் அவரிடம் கேட்க வேண்டியதெல்லாம்,

"ஆண்டவரே, நான் உம்மை விட்டுப் பிரிந்து விடாதபடி என்னைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும். எனக்கு நீர் போதும்.

'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்' என்பதற்கு ஏற்ப நான் பெற்ற உம்மை அகில உலகுக்கும் அளிப்பதே என் ஒரே பணி."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment