Monday, November 18, 2024

அவரோ, "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். (லூக்கா நற்செய்தி 19:26)

 அவரோ, "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 19:26)

ஒரு செல்வந்தர் தனது பணியாளர்களிடம் பணம் கொடுத்து, 

"இதை வைத்து ஏதாவது வாணிகம் செய்யுங்கள்."
என்று சொன்னார்.

கொஞ்ச நாள் கழித்து அவர்களை அழைத்து தான் கொடுத்த பணத்தைக் கொண்டு என்ன செய்தார்கள் என்பது பற்றி விசாரித்தார்.

அதைக் கொண்டு பணம் ஈட்டியவர்களுக்கு ஈட்டிய அளவு சன்மானம் கொடுத்தார்.

ஒரு நபர் பணம் எதுவும் ஈட்டவில்லை.

அவரிடம் கொடுத்த பணத்தை வாங்கி ஈட்டியவரிடம் கொடுத்தார்.

இயேசு இந்த உவமையைச் சொன்ன பின்,

''உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். 

கொடுத்த பணத்தைக் கொண்டு பணம் ஈட்டி வைத்திருப்பவர்களுக்கு இன்னும் பணம் கொடுக்கப்படும்.

ஈட்டாதவர்களிடமிருந்து ஆரம்பத்தில் கொடுத்திருந்த பணமும் பிடுங்கப்படும்.

உள்ளவர்கள் = ஈட்டிய பணம் உள்ளவர்கள்.

இல்லாதோர் = ஈட்டிய பணம் இல்லாதவர்கள், அதாவது எதுவும் ஈட்டாதவர்கள்.

இருந்ததும் எடுக்கப்படும்= ஆரம்பத்தில் இருந்ததும் எடுக்கப்படும்.

இந்த உவமையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

இறைவன் நம்மைப் படைக்கும் போது ஒவ்வொருவரையும் சில திறமைகளோடு படைக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான திறமைகள் இருக்கும்.

ஆனால் திறமையே இல்லாத யாரும் கிடையாது.

ஒவ்வொருவரும் தனக்குக் கிடைத்த திறமைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையின் வெற்றிகளைப் பெற வேண்டும்.

நாக்கு இருக்கும் அனைவராலும் பேச முடியும்.

சிலருக்கு இயல்பாகவே மற்றவர்களைக் கவரும் வகையில் பேசும் திறமை இருக்கும்.

அதை அரட்டை அடிக்க மட்டும் பயன்படுத்தக் கூடாது.

மேடைப் பேச்சாளராக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆன்மீகப் பேச்சாளராக மாறி, இயேசுவின் நற்செய்தியை உலகுக்கு அறிவிப்பவராகச் சேவை செய்ய தன் திறமையைப் பயன்படுத்தினால் 

 விண்ணகத்திதில் ஆண்டவர்  அளிக்கும் சன்மானம் மிக அதிகமானதாக இருக்கும்.

இவ்வாறே சிந்தனைத் திறன், எழுத்துத் திறன், பாடும் திறன் போன்ற திறமைகளை இறைப் பணிக்காகப் பயன்படுத்த வேண்டும்.

அரசியல்வாதிகள் 
பொய் சொல்லவும், 
மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்கவும், 
அதன் மூலமாக பணம் ஈட்டவும், ஈட்டிய பணத்தைக் கொண்டு மாட மாளிகைகள் கட்டவும், 
உலக சிற்றின்பத்தில் மிதக்கவும்
தங்கள் திறமைகளைப்  பயன்படுத்துகிறார்கள்.

அவர்களுடைய திறமைகள் பயன்பாடு ஆன்மீக ரீதியாக எந்தப் பயனும் தராது.

மக்கள் ஆன்மீக ரீதியாக  வளரவே கடவுள் அவர்களுக்குத் திறமைகளைத் தருகிறார்.

ஆனால் சிலர் அவற்றைத் தங்களது லௌகீக வாழ்க்கைக்குப் பயன்படுத்துகிறார்கள்.

அவர்கள் உலக ரீதியாகப் பயன்படுத்தும்‌‌  திறமைகள் உலக ரீதியாக அழிந்து போகக் கூடிய சிற்றின்ப வசதிகளைப் பெற்றுத் தரலாம்.

ஆனால் அவர்கள் மரணத்தோடு அவைகளும் மரணித்துவிடும்.

ஆனால் இறைவன் தந்த திறமைகளை இறைவனின் அதிமிக மகிமைக்காகப் பயன்படுத்தினால் இறைவன் தரும் பேரின்ப வாழ்வு நித்தியமானது, ஒருபோதும் அழியாதது.

இறைவன் அளவில்லாதவர், அவர் தரும் பேரின்ப சன்மானத்தையும் அளக்க முடியாது.

இறைவன் தந்த திறமைகளைப் பயன்படுத்தாவிட்டால் காலப் போக்கில் நம்மை விட்டுப் போய் விடும்.

ஆகவே திறமைகளைப் பயன்படுத்துவோம்.

அவற்றைத் தந்தவரின் மகிமைக்காகவே பயன்படுத்துவோம்,

அவர் நமது தந்தை என்பதற்காக.

தந்தைக்கு உரியவை அனைத்திலும் மகனுக்கும் பங்கு உண்டு,

விண்ணகம் இறைவன் வாழும் வீடு.

அதில் நமக்கு பங்கு உண்டு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment