உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!
(1 தெசலோனிக்கர் 3:12)
1.உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல
2.நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும்
3.ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!
தியானிப்பதற்கு எளிதாக இருப்பதற்காக வசனத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளேன்.
1. புனித சின்னப்பர் தெசலோனிக்கே நகர் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்திருந்தார்.
அந்நகர் மக்களை அன்பு செய்து அதன் விளைவாக அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
இயேசு நற்செய்தியை நமக்கு அறிவிக்க உலகுக்கு வந்தது நித்திய காலமாக நம்மீது அவர் கொண்டிருந்த அன்பின் காரணமாகத்தான்.
அன்பு இல்லாதிருந்திருந்தால் அவர் ஏன் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிக்க வேண்டும்?
புனித சின்னப்பரும் இயேசுவை அன்பு செய்தார், அவரால் படைக்கப்பட்ட மனிதர்களையும் அன்பு செய்தார்.
உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல
என்று சொல்வதிலிருந்து அவர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பு வளர்ந்து கொண்டிருந்தது என்பது புரிகிறது.
இந்த வார்த்தைகளில் இருந்து நாமும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
பிறரன்பின் விளைவாகத்தான் நமது நற்செய்தி பணி இருக்க வேண்டும்.
ஆசிரியர் மாணவர்களை உண்மையிலேயே அன்பு செய்து அவர்களுக்குப் பாடம் போதிப்பதற்கும், பெறுகின்ற சம்பளத்திற்காக மட்டுமே பாடம் போதிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
அன்பு மாணவர்களின் நலனுக்காக பாடம் போதிக்கும்.
சம்பளம் தன் நலனுக்காக பாடம் போதிக்கும்.
அன்பே இல்லாத குடும்பத்தில் பிள்ளைகளின் வளர்ப்பு எப்படி இருக்கும்?
அரசியல்வாதிகளின் மேற்பார்வையில் நாம் வாழ்வது போலிருக்கும்.
இறையன்பின் செய்திதான் நற்செய்தி.
அன்பின் செய்தியை எப்படி அன்பு இல்லாமல் போதிக்க முடியும்?
போதிக்க வேண்டும் என்ற கட்டளைக்காக அல்ல,
போதிக்க வேண்டும் என்ற ஆன்மீக பசியினால் போதிக்க வேண்டும்.
பசி இல்லாமல் உண்ணும் உணவு ஜீரணிக்காது.
பசி உள்ளவனால் சாப்பிடாமல் இருக்க முடியாது.
இறையன்பு உள்ளவரால் நற்செய்தியை அறிவிக்காமல் இருக்க முடியாது.
கடவுள் அன்புமயமானவர். அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம்.
ஆகவே அன்பு நமக்கு இயல்பானதுதான்.
நாமும் உலகில் அன்பாக வாழ வேண்டும்.
அன்பாக வாழ்ந்தால்தான் நம்மால் நற்செய்தியை அறிவிக்க முடியும்.
நாம் காட்டும் அன்பு நற்செய்தி அறிவிக்கப் படுகின்றவர்களிடம் பிரதிபலிக்க வேண்டும்.
அவர்களும் அன்பில் வளர வேண்டும்.
உண்மையில் நற்செய்திப் பணி என்றாலே அன்பைப் பகிர்ந்து கொள்ளும் பணிதான்.
2. நற்செய்தியைப் பெறும் மக்கள் ஒருவர் ஒருவரையும், அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.
மக்கள் கோவிலில் அரைமணி அன்பைப் பற்றிய பிரசங்கத்தைக் கேட்டு விட்டு வீட்டில் போய் சண்டை போட்டால்
அவர்கள் கோவிலுக்குப் போனதே வீண்.
சிலர் கையில் பைபிளோடு கோவிலுக்குப் போவார்கள்.
வாசகங்கள் வாசிக்கப்படும் போது பைபிளைப் புரட்டிக் கொண்டிருப்பார்கள்.
வாசகத்தைக் கவனிக்க மாட்டார்கள்.
சுவாமியார் பிரசங்கம்
வைக்கும் போதும் பைபிளைப் புரட்டிக் கொண்டுதானிருப்பார்கள். பிரசங்கத்தைக் கேட்க மாட்டார்கள்.
அவர்களுக்கு பிரசங்கம் வீண்.
எல்லா நற்செய்தி வசனங்களும் இறையன்பையும், பிறரன்பையும் தான் மையமாகக் கொண்டிருக்கும்.
நாம் அனைவரும் பரிசுத்த தம திரித்துவத்தின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம்.
பரிசுத்த தம திரித்துவத்தில் மூன்று ஆட்களும் ஒருவரையொருவர் நித்திய காலமாக நேசித்து ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.
மனிதர்களும் ஒருவரையொருவர் நேசித்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
என்று ஒரு தமிழ்ச் சொல்லாடல் உண்டு.
கடவுள் ஒருவர், அவர் படைத்த மனுக் குலமும் ஒன்று தான்.
மனிதர்களை ஒரே குலமாக்குவது அன்பு என்ற ஈர்ப்பு விசைதான்.
மனிதர் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும், மொத்த மனுக்குலத்தையும் நேசிக்க வேண்டும்.
அதனால் தான் புனித சின்னப்பர்
"நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும்" என்கிறார்.
கோடானுகோடி நட்சத்திரங்களைக் கொண்ட விண்வெளி ஒரே பிரபஞ்சமாக இயங்குவது ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான்.
கோடானுகோடி மனிதர்கள் ஒரே குலமாக வாழ வேண்டுமென்றால் அதற்கு அன்பு என்ற ஈர்ப்பு விசைதான் காரணமாக இருக்க முடியும்.
நற்செய்தியைப் போதிப்பவர்களும் அன்பினால் உந்தப்பட்டு போதிக்க வேண்டும்.
நற்செய்தியைக் கேட்பவர்களும் நற்செய்தியின் விளைவாக அன்பில் வளர வேண்டும்.
3.ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக"
நம்மில் அன்பு வளர்வது எப்படி?
நிலத்தில் தாவரங்கள் தானாக முளைத்து வளராது.
யாராவது விதையைத் தூவியிருந்தால் மட்டுமே நீர் விழுந்தவுடன் அது முளைத்து வளரும்.
அன்பின் ஊற்று இறைவன். நாம் என்ன முயற்சி செய்தாலும் இறைவன் உதவி இருந்தால் மட்டுமே நமது முயற்சி பலன் தரும்.
நற்செய்தியைப் போதிப்பவர்களும் இறைவனை வேண்ட வேண்டும். நற்செய்தியைக் கேட்பவர்களும் இறைவனை வேண்ட வேண்டும்.
அதனால்தான் அன்பை
ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக என்று புனித சின்னப்பர் மக்களை வாழ்த்துகிறார்.
அன்பின் விளைவு நற்செய்திப் போதனை.
நற்செய்திப் போதனையின் விளைவு அன்பின் வளர்ச்சி.
இரண்டையும் பிரிக்க முடியாது.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment