அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்" எனச் சொல்லுங்கள். "
(லூக்கா நற்செய்தி 17:10)
வாழ்க்கை நிலை எதுவாக இருந்தாலும் கட்டளைகளுக்கு, விதிகளுக்குக் கட்டுப் பட்டு நடப்பது கடமை.
கட்டளை இல்லாத விடயங்களில் செயல் புரிவது விருப்பம்.
மாணவர்கள் காலை 9.30 க்கு Assembly க்கு வந்து விட வேண்டும் என்பது பள்ளி விதி. அதன்படி நடக்க வேண்டியது மாணவர்களின் கடமை.
நடந்து வரவேண்டுமா, சைக்கிளில் வரவேண்டுமா,
பேருந்தில் வரவேண்டுமா
அவரவர் விருப்பப்படி வரலாம்.
நமது முழு இருதயத்தோடு இறைவனையும்,
நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டியது நமது கடமை.
கடமையைச் செய்வதில் நாம் பெருமைப் படுவதற்கு எதுவும் இல்லை.
காலையில் எழுந்ததும்
"தந்தை மகன் தூய ஆவியின் பெயரால், ஆமென்."
என்று செபிக்க வேண்டியது நமது ஆன்மீகக் கடமை.
இதில் பீத்திக் கொள்வதற்கு ஒன்றுமில்லை.
"நான் என் கடமையைச் செய்தேன்." என்று தாழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளலாம்.
"நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்"
என்ற இயேசுவின் வார்த்தைகள் நாம் கடமையைத் தாழ்ச்சியுடன் செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன.
நம்மைப் படைக்க வேண்டும், நம்மை நேசிக்க வேண்டும் என்று கடவுளுக்கு யாரும் கட்டளை கொடுக்கவில்லை.
அவர் தானாகவே நம்மைப் படைத்தார், நம்மை அளவுகடந்த விதமாய் நேசிக்கிறார்.
அதற்காக நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும்.
தன்னையே நமக்கு உணவாகத் தர வேண்டும் என்று அவருக்கு கடமை எதுவும் கிடையாது.
ஆனாலும் நம்மீது அவராகவே கொண்டுள்ள அன்பின் மிகுதியால் நமக்குத் தன்னையே உணவாகத் தருகிறார்.
திவ்ய நற்கருணையை நாவில் வாங்கும் போது நமக்குள் நன்றி உணர்ச்சி சுரக்க வேண்டும்.
நமது ஊழியத்தால் இறைவனுக்கு எந்த பயனும் இல்லை.
இறைமகன் உலகுக்கு வந்ததால் நாம் பயன் பெற்றோம்.
நாம் மோட்சத்துக்குப் போவதால் இறைவனுக்கு என்ன பயன்?
அவர் நித்திய காலமாக அளவில்லாத பேரின்பத்தில் வாழ்கிறார்.
அவருடைய பேரின்பத்தை நம்மால் சிறிய அளவு கூட கூட்ட முடியுமா?
மோட்சத்துக்குப் போவதால் பயன் பெறுவது நாம் தான்.
அவரது பேரின்பத்தில் நமக்கும் பங்கு கிடைக்கும்.
நாம் செபம் சொல்லும் போது பயன் பெறுவது நாமா? கடவுளா?
நாம் தான்.
கடவுள் தன் அன்பின் மிகுதியால் நமக்குச் செய்யும் எல்லா உதவிகளாலும் பயன் பெறுவது நாம் தான்.
நாம் கடமையின் அடிப்படையில் கடவுளுக்குச் செய்யும் எல்லா சேவைகளாலும் பயன்பெறுவது நாம் தான்.
பெற்றோர் பிள்ளைகளைப் பெறுவது அன்பின் காரணமாகவா, கடமையின் காரணமாகவா?
அன்பின் காரணமாக.
தாய் தனது பிரசவ வேதனையைத் தாங்கிக் கொள்வதும் அன்பின் காரணமாகத்தான்.
பிள்ளைகளை வளர்ப்பதில் அன்பும் இருக்கிறது, கடமையும் இருக்கிறது.
பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் பெருமைப் படுவதற்கு ஏதாவது இருக்கிறதா?
"நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்"
என்ற நற்செய்தியின் மனப்பக்குவம் பெற்றோருக்கு இருந்தால் அவர்கள் எப்போதும் மன மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
அதாவது தங்களது முதுமைக் காலத்தில் பிள்ளைகள் தங்களைக் கவனிக்காவிட்டாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
ஆனால் பிள்ளைகளை அன்புடன் வளர்த்ததற்குப் பிரதிபலனாக பிள்ளைகள் தங்களைக் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதால்தான்
அநேக பெற்றோர் ஏமாற்றத்துக்கு உள்ளாகி இறுதிக் காலத்தை மகிழ்ச்சி இல்லாமல் கழிக்க வேண்டியிருக்கிறது.
பெற்றோரைக் கவனிக்க வேண்டிய கடமை பிள்ளைகளுக்கு இருக்கிறது.
அதை நிறைவேற்றினால் கடவுள் அவர்களுக்கு நித்திய பேரின்ப சன்மானம் அளிப்பார்.
பெற்றோரைப் பொருத்த மட்டில் அவர்களது அன்பு கடமைக்கு அப்பாற்பட்டது.
கடவுள் நம்மை அன்பு செய்வது போல பெற்றோரும் பிள்ளைகளை அன்பு செய்ய வேண்டும்.
"நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்"
என்ற இறைவாக்கின்படி வாழ்பவர்களை இறைவன் ஆசீர்வதிப்பார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment