இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!
(லூக்கா நற்செய்தி 19:9)
ஒரு நாள் இயேசு எரிகோ நகர் வழியே போய்க் கொண்டிருந்த போது
சக்கேயு என்னும் வரிதண்டுவோர் தலைவர்
அவரைப் பார்க்க விரும்பினார்.
மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் குட்டையான அவரால் இயேசுவை பார்க்க முடியவில்லை.
அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார்.
அவ்வழியே வந்த இயேசு
அவரை, அண்ணாந்து பார்த்து,
"சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார்.
அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இதைக் கண்ட மக்கள், "இவர் பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே " என்று முணுமுணுத்தனர்.
சக்கேயு இயேசுவிடம்
"ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்றார்.
இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!
இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" என்று இயேசு சொன்னார்.
இயேசு தற்செயலாக சக்கேயுவைப் பார்த்தாரா?
அல்லது, திட்டப்படி பார்த்தாரா?
உலக ரீதியாகப் பார்த்தால் சக்கேயுக்கு இயேசுவைப் பார்க்க ஆசை, ஆகவே மரத்தின் மேலே ஏறி இயேசு வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவ்வழியாக வந்த இயேசு அவனைப் பார்த்து, அவரை இறங்கி வரச் சொன்னார்.
சக்கேயுவே இப்படித்தான் நினைத்திருப்பார்.
ஆனால் இயேசுவைப் பற்றிய எந்த சிந்தனையாக இருந்தாலும் அவர் கடவுள் என்ற கோணத்நில்தான் பார்க்க வேண்டும்.
முக்காலமும் அறிந்த கடவுள்.
நித்திய காலமாகத் திட்டமிட்டு நிறைவேற்றுகிற கடவுள்.
"இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" என்று சொன்னார்."
(லூக்கா நற்செய்தி 19:10)
இறைமகன் மனு மகனாகப் பிறந்ததே அவரது நித்திய காலத் திட்டத்தின் செயலாக்கம்தான்.
தான் படைக்கப் போகிற மனிதன் பாவம் செய்வான் என்று அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.
அவனை மீட்க மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதும் அவரது நித்திய காலத் திட்டம்.
மனிதனாகப் பிறந்தபின் ஒவ்வொரு வினாடியும் என்ன செய்ய வேண்டும் என்பது அவரது நித்திய காலத் திட்டம்.
அவர் சக்கேயுவைப் பார்க்க வேண்டும், அவன் இல்லத்துக்குச் செல்ல வேண்டும், அவரை மீட்க வேண்டும் என்பது எல்லாம் அவரது நித்திய காலத் திட்டம் தான்.
பாவியாகிய சக்கேயுவுக்கு அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியவரே அவர்தான்.
அவர் இறைத் தூண்டுதலை ஏற்று செயல்பட்டார்.
குடும்பத்தோடு மீட்கப் பட்டார்.
"இவர் பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே " என்று மக்கள் முணுமுணுத்தனர்.
அது அவர்களது அறியாமை.
பாவியைத் தேடியே அவர் வந்திருப்பதுதான் நிதர்சனம்.
பாவி மனஸ்தாபப்படவும் ஆவியானவரின் தூண்டுதல் வேண்டும்.
எல்லா பாவிகளுக்கும் அந்த தூண்டுதல் கிடைக்கும்.
அதோடு ஒத்துழைப்பவர்கள் மன்னிக்கப்படுவர்.
சக்கேயு ஒத்துழைத்தார்.
மனம் திரும்பினார்.
அப்படியே நம்மைப் பார்ப்போம்.
Self reflection and self examination of conscience.
நாம் எல்லோரும் பாவிகள். முதலில் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தான் ஒரு நோயாளி என்பதை ஏற்றுக் கொள்ளாதவன் மருத்துவம் பார்க்க மாட்டான்.
தான் ஒரு நோயாளி என்பதை என்பதை ஏற்றுக் கொள்பவன் மருத்துவரை அணுகுவான், அவரோடு ஒத்துழைப்பான், சுகம் பெறுவான்.
நமக்கு துன்பங்கள் வரும்போது, நோய் நொடிகள் வரும்போது
அவை நாம் மனம் திரும்பவும், கடவுளின் உதவியை நாட அவர் கொடுக்கும் தூண்டுதல்கள் என்பதை ஏற்றுக் கொண்டு
பாவங்களுக்காக வருந்தி, இறைவனின் உதவியை நாட வேண்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான உட்தூண்டுதல்களைக் கடவுள் கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்.
அவற்றை ஏற்றுச் செயல்பட்டால் நாம் மீட்கப் படுவோம்.
நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இறைவன் தனது ஆவியானவரின் மூலம் வழி நடத்துகிறார்.
நாம் நல்லதை நினைக்கவும், நல்லதைச் சொல்லவும், நல்லதைச் செய்யவும் தூண்டிக் கொண்டிருப்பவர் தூய ஆவியானவர் தான்.
அதே சமயத்தில் தீய ஆவியும் சுறுசுறுப்பாக இருப்பான்.
அவனைப் படைத்த ஆண்டவரையே சோதித்தவன் அவன்.
நம்மை விட்டு வைப்பானா?
நமது உள்ளத்தில் பாவச் சோதனையைத் தூண்டுபவன் தீய ஆவி.
பாவச் சோதனைகள் வராமலிருக்க ஒரே வழி எப்போதும் நல்லதையே நினைத்துக் கொண்டிருப்பதுதான்.
அதற்கு உதவுபவர் தூய ஆவியானவர்.
பாவச் சோதனைகள் ஏற்படும் போது அவற்றை எதிர்த்து நின்று போராடக் கூடாது.
தப்பித்து ஓடி விட வேண்டும்.
சோதனை வரும் போது நமது மனதைத் தூய ஆவியின் பக்கம் திருப்ப வேண்டும்.
தீய ஆவியை மறந்து விட வேண்டும்.
இந்த விடயத்தில் மறதி நல்ல மருந்து.
பாவிகளாகிய நம்மைத் தேடி வரும் மீட்பரைக் கட்டிப் பிடித்துக் கொள்வோம்.
மீட்பு உறுதி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment