"அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ''
(லூக்கா நற்செய்தி 15:7)
நான் சிறுவனாக இருந்த போது சுகமில்லாதிருக்க ஆசைப் படுவதுண்டு.
ஏனெனில் சுகமில்லாதிருக்கும் போது அம்மா வழக்கத்தை விட அதிக அக்கறையுடனும் அன்புடனும் நடந்து கொள்வார்கள்.
நமது கையால் சாப்பிட முடிந்தாலும் அவர்கள் கையால் ஊட்டி விடுவார்கள்.
"என் கண்ணுல்ல, சாப்பிடும்மா'' என்பார்கள்.
அப்படிச் சொல்லும் போது என் மனதில் மகிழ்ச்சி அலை பொங்கும்.
அதை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நம்மால் நடக்க முடிந்தாலும் இடுப்பில் எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
இது விடயத்திலும் நாம் கடவுளின் சாயலில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
கடவுள் நம்முடைய அன்புத் தந்தை.
பரிசுத்தவான்கள் மீது காட்டும் அக்கறையையும் அன்பையும் விட பாவிகளாகிய நம்மீது அதிக அக்கறையையும் அன்பையும் காட்டுகிறார்.
நாம் பாவத்திற்கு மன்னிப்பு பெறும்போது அதிக மகிழ்ச்சி அடைகிறார்.
மனிதன் பாவம் செய்யும் வரை அவர் கடவுளாக மட்டும் இருந்தார்.
மனிதன் பாவம் செய்தவுடன் அவர் அவரது அன்பை அவனுக்கு வெளிப்படையாகக் காட்டுவதற்காக மனிதனாகப் பிறந்தார்.
பாவிகள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக,
நாம் பாவம் செய்யும் வரை தேவ சுபாவத்தோடு மட்டும் வாழ்ந்த கடவுள்
நமக்காக மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.
விண்ணகத்தில் வாழும் கடவுள் நமக்காக மண்ணகத்திற்கு வந்தார்.
தேவ சுபாவத்தில் துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள்
மனித சுபாவத்தில் பிறப்பையும் இறப்பையும் ஏற்றுக் கொண்டார்.
துன்பப்படவே முடியாத கடவுள் பாவிகளாகிய நமக்காக வேதனை மிகுந்த பாடுகளை ஏற்றுக் கொண்டார்.
அகில உலகத்துக்கும் உரிமையாளராகிய கடவுள் பாவிகளாகிய நமக்காக பரம ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.
நமது பாவத்தினால் நமது ஆன்மா இறைஉறவு அருளை இழந்து மரிக்கிறது.
இறைஉறவு அருளை அளித்து நமது ஆன்மாவை வாழ வைப்பதற்காக கடவுள் நமக்காக சிலுவையில் தனது உயிரையே தியாகம் செய்தார்.
நமது மரணத்தை தன் மரணத்தால் வென்றார்.
தன் நண்பனுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்ய வைக்கும் அன்பை விட மேலான அன்பு இருக்க முடியுமா?
நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தன் மகனையே பலியாக ஒப்புக் கொடுத்தவள் அன்னை மரியாள்.
அவள் விண்ணக மண்ணக அரசியாக பதவி ஏற்ற போது விண்ணகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட
பூமியில் ஒரு சாதாரண பாவி மனம் திரும்பும் போது விண்ணகத்தில் அதிக மகிழ்ச்சி ஏற்படும்.
மனுக்குலத்தை மீட்க மனிதனாகப் பிறந்த இறைமகன் ஒரே ஒரு மனிதன் மட்டும் பாவம் செய்திருந்தால் கூட அவனை மீட்க மனிதனாகப் பிறந்திருப்பார். .
அந்த அளவுக்குக் கடவுள் பாவியை நேசிக்கிறார்.
நம்மீது இறைவன் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பை நினைத்துப் பார்ப்போம்.
பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்போம்.
நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்வோம்.
விண்ணகவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம்.
அவர்கள் மகிழ்ச்சியில் பங்கு பெற நாமும் விண்ணகம் செல்வோம்.
நம்மை வரவேற்க விண்ணகவாசிகள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"இறைவா, என்னை ஏற்றுக் கொள்ளும்.''
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment