Sunday, November 24, 2024

இயேசு, "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்றார். (லூக்கா நற்செய்தி 21:6)

 இயேசு, "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 21:6)

எருசலேம் நகரத்தில் இருந்த யூதர்களின் கோவிலின் எதிர்காலம் பற்றி இயேசு கூறிய வார்த்தைகள் இவை.


கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு இவ்வாறு கூறினார். 

இறை வசனத்தைத் தியானிக்கும் போது இரு வகையாகத் 
தியானிக்கலாம்.

இறை வசனம் கூறப்பட்டதன்  சூழலை கருத்தில் கொண்டு அதன் பொருளைத் தியானிக்கலாம்.

அல்லது அந்த வசனம் நாம் வாழ வேண்டிய விதத்தைப் பற்றி ஏதாவது சொல்கிறதா என்பதைப் பற்றி தியானிக்கலாம்.

எருசலேம் ஆலயத்தின் அழிவு பற்றி சரித்திரப் பூர்வமாக ஆராய்ந்து தியானிப்பதை விட

இறைவனின் ஆலயமாகிய நமது உடலைப் பற்றித் தியானித்தால் நமக்கு ஆன்மீக ரீதியாக உதவியாக இருக்கும்.

இந்த வசனத்தை வாசிக்கும்போது நமக்கு நம்மைப் பற்றிய ஒரு‌ உண்மை நினைவுக்கு வர வேண்டும்.

நாமும் இறைவன் வாழும் ஆலயம்தான்.

ஆனால் நமது உடலை இறைவன் தங்கும் ஆலயம் போலவா பராமரிக்கிறோம்?

அதை உலகோடு கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருக்கும் வியாபார‌ மண்டியாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

எருசலேம் ஆலயத்தைக்கூட வியாபாரிகள் அப்படிச் செய்து கொண்டிருந்ததையும், இயேசு அவர்களைச் சாட்டையால் அடித்து விரட்டியதையும் நாம் பைபிளில் வாசிக்கிறோம்.

முறைப்படி நாமும் நம்மையே அப்படிச் செய்து, ஆண்டவரின் ஆலயமாகிய நமது ஆலயத்தைப் பரிசுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

உடலுக்குள் வாழும் நமது ஆன்மாவைப் பற்றிக் கவலைப் படாமல் 

அதை உலக முறைப்படி அழகு படுத்துவதிலும், அலங்காரம் செய்வதிலுமே  ஆர்வம் காட்டுகிறோம்.

ஒரு காலம் வரும்.  அனைவருக்கும் வரும். 

அப்போது நாம் சிங்காரித்து அழகு பார்க்கும் நமது உடல் என்ன‌ ஆகும்?

நமது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து விடும்.

இப்போது அழகிய பெயர் சூட்டி அழைக்கப்படும் நமது உடல் பிணம் என்று அழைக்கப்‌ படும்.

நடந்தும், அழகிய வாகனங்களிலும் பயணித்த நமது பிணத்தை நான்கு பேர் தூக்கிச் செல்வார்கள்.

இப்போது களியாட்டக் கூட்டங்களுக்குச் சென்று வரும் நமது உடல் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

மெத்தையில் படுத்துச் சுகம் காணும் நம் உடலை ஆழக்குழி தோண்டி மண்ணுக்குள் புதைத்து விடுவார்கள்.

மண்ணிலிருந்து வந்தது மண்ணுக்கே திரும்பிவிடும்.

அங்கே அதற்கு உணவு கிடைக்காது, அதுவே உணவாகி விடும், மண்புழுக்களுக்கு.

அன்று எருசலேம் ஆலயத்துக்கு ரோமையர்களின் படையெடுப்பால் என்ன ஆனதோ

அதுவே மரணத்தின் படையெடுப்பால் நமது உடலுக்கும் ஆகும்.

அதைப் பற்றித் தியானிப்பதால் நமக்கு என்ன பயன்?

லௌகீக ரீதியாக எந்தப் பயனும் இல்லை.

அதற்கு ஏற்படப்போகும் அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது.

ஆனால் ஆன்மீக ரீதியாக மிகவும் பயன் அடையலாம்.

இறைவன் நமது உடலைப் படைத்தது அதில் குடியிருக்கும் நமது ஆன்மாவின் ஆன்மீக வாழ்வுக்காக.

God created our body to be helpful to the spiritual life of our soul.

நாம் வசதியாக வாழ்வதற்காக வீடு கட்டுகிறோம்.

வீடு இருக்கிறதே என்பதற்காக அதில் வாழவில்லை.

நமது ஆன்மாவுக்காக உடல்,
உடலுக்காக ஆன்மா இல்லை.

நமது உடலை  ஆலயமாக இறைவன் தந்தது அதில் அவர் குடியேற்றிய ஆன்மாவின் வாழ்வுக்காக.

நமது உடலில் நமது ஆன்மாவுக்குத் துணையாக இறைவன் வாழ்கிறார்.

ஆகவே நமது ஆன்மா தன்னோடு இருக்கும் இறைவனின் உதவியோடு நமது உடலைத் தன்னுடைய ஆன்மீகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

அதாவது மனிதன் தன்னைப் படைத்து, தன்னோடு வாழ்கின்ற இறைவனுக்குப் பணி செய்ய தன் உடலைப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் அநேக சமயங்களில் இறைவனுக்குப் பிடிக்காத உடல் இச்சைகளுக்கு நமது ஆன்மா சம்மதம் தெரிவிப்பதன் மூலம் 

 இறைவனுக்கு எதிராகச் செயல்படுகிறது, அதாவது பாவம் செய்கிறது.


நமது முதல் தாய் எப்படிப் பாவம் செய்தாள்?

"அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும்

 கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் 

அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, 

பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள்." 
(தொடக்கநூல் 3:6)

ஆக அவளது உடல் விரும்பிய ருசிக்காக விலக்கப்பட்ட கனியைத் தின்றாள்.

போசனப் பிரியம் தலையான பாவம்.

அதைச் செய்ய வைப்பது எது?

நாவின் சுவையை அளவுக்கு மீறி பூர்த்தி செய்ய ஆன்மா எடுக்கும் முயற்சி.

ஆன்மா இறைவனுக்காக அந்த முயற்சியைக் கட்டுப் படுத்தினால் மட்டசனம் என்னும் புண்ணியம்.

பாவ இச்சைகளுக்கு இடம் கொடாமல்,  புண்ணியங்களால் நம் உடலாகிய ஆலயத்தை அழகு படுத்த வேண்டும்.

அந்த அழகுதான் இறைவனுக்குப் பிடிக்கும்.

நமது உடலைச் சார்ந்த ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலம் அவற்றால் ஏற்படும் பாவங்களைத் தடுத்து,

புண்ணிய வாழ்வு வாழ்வதன் மூலம் 

எருசலேம் ஆலயம் அழிந்ததுபோல நமது உடலாகிய ஆலயம் அழிந்தாலும் நமது ஆன்மா இறைவனோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழும்.

இறைவன் வாழும் ஆலயத்துக்குள் கள்வர்களையும்,
வணிகர்களையும் நுழைய விடாமல் பரிசுத்தமாகக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

நுழைய நேரிட்டால் தவமுயற்சிகளாகிய சாட்டையால் அவர்களை அடித்து விரட்டுவோம்.

இது இயேசுவுக்கு ரொம்ப பிடிக்கும்.

எருசலேம் ஆலயத்தில் அவர் அதைத் தான் செய்தார், நமக்கு முன் மாதிரிகையாக.

அவருடைய ஆலயமாகிய நமது உடலை பாவ இச்சைகளிலிருந்து காப்பாற்றுவோம்.

இறுதி நாளில் நாம் உயிர் பெற்று எழும்போது ஆன்மீக உடலோடு சம்மனசுக்களைப் போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment