Wednesday, November 27, 2024

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா." (லூக்கா நற்செய்தி 21:33)

 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. " 
(லூக்கா நற்செய்தி 21:33)

நாம் வாழும் இந்த மண்ணுலகும்,
ஆகாயத்தில் மின்மினிப் பூச்சிகள் போல் மின்னிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களும் ஒரு நாள் ஒழிந்து போகும்.

ஆனால் இறைவாக்கின் ஒவ்வொரு புள்ளியும் நிறைவேறும்.

அதை வாசிக்க வேண்டிய விதமாக வாசித்து, தியானிக்க வேண்டிய விதமாக தியானித்து, புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப் புரிந்து கொண்டால் அது நிறைவேறுவதை நாம் அறியலாம்.

சிலர் புரிய வேண்டிய விதமாகப் புரியாது,
Cover to cover வாசித்து முடிக்க வேண்டும் என்பதற்காக வேகமாக கதை வாசிப்பது போல வாசிப்பார்கள்.

பைபிள் முழுவதையும் பல முறை வாசித்து விட்டேன் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

ஆனால் அதில் ஆன்மீக ரீதியாக எந்த பயனும் இல்லை.

இந்த வசனத்தை வாசிக்கும்போது என் மனதில் தோன்றிய எண்ணங்கள்.

படைக்கப்பட்டவை நிரந்தரமானவை அல்ல.

இறைவாக்கும் அதன் பயனும் நிரந்தரமானவை, நித்தியமானவை.

உதாரணத்திற்கு, ஒரு இறை வாக்கை எடுத்துக் கொள்வோம்.

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே."

உலகில் பிறந்தவுடன் முதலில் மூச்சுக் காற்றைத் தேடுகிறோம்.

அடுத்து உணவைத் தேடுகிறோம்.
முதலில் கிடைப்பது தாய்ப்பால்.

அடுத்து இருப்பிடத்தைத் தேடுகிறோம். முதலில் கிடைப்பது தாயின் மடி.

அடுத்து உடையைத் தேடுகிறோம்.

எத்தனை ஆண்டுகள் உலகில் வாழ்ந்தாலும் இவற்றைத் தேடியே வாழ்கிறோம்.

படிக்கிற படிப்பு, பார்க்கும் வேலை, வாங்கும் சம்பளம் பேசும் பேச்சு எல்லாம் இவற்றுக்காகத்தான்.

உணவு வகைகள் மாறலாம்.
இருப்பிடங்கள் மாறலாம்.
உடைவகைகள் மாறலாம்.

ஆனால் இவற்றைத் தேடியே வாழ்கிறோம்.

ஆனால் ஒரு நாள் வரும். வந்தே தீரும். அன்று நம் மூச்சு நின்று விடும்.

தேடிவைத்த அனைத்தும் நம்மை விட்டுப் போய் விடும்.

நாம் உணவூட்டி, உடை உடுத்தி, மெத்தையில் உறங்கிய நமது உடல் மண்ணுக்குள் இறங்கி மண்புழுக்களுக்கு இரையாகிவிடும்.

நாம்?

நாம் என்றால்?

நமது அழியாத ஆன்மா?

அதற்கு உயிர் மூச்சு, உணவு , உடை, இருப்பிடம்?

இயேசு, இயேசு மட்டுமே.

நமது ஆன்மா படைக்கப் பட்டது முடிவில்லா காலம் விண்ணகத்தில் வாழ்வதற்கு.

நாம் வாழ்ந்த உடல் மண்ணுக்குள் போய்விடும். அதற்கான வழியை நாம் தேட வேண்டியதில்லை.

நமது ஆன்மா விண்ணகம் செல்ல ஒரு வழிதான் இருக்கிறது. அது இயேசு மட்டும்தான்.

அதற்காக நாம் அறிய வேண்டிய உண்மை இயேசு மட்டும் தான்.

நமது நித்திய வாழ்வு இயேசு மட்டும் தான்.

''வழியும், உண்மையும், வாழ்வும் நானே." என்ற இயேசுவின் வாக்கை பைபிளில் வாசித்திருக்கிறோம்.

நமது உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இயேசுவுக்குக் கொடுத்திருக்கிறோமா?

ஒரு ஒப்புமையோடு ஆரம்பிப்போம்.

மகன் பணியின் நிமித்தம் சென்னையில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

மகனைப் பார்த்து, அவனோடு ஓரிரு நாட்கள் தங்கி விட்டு ஊருக்குத் திரும்ப வேண்டும்.

கேள்வி.

மகனைப் பார்க்கச் சென்னைக்குப் போகிறோமா?

அல்லது 

சென்னைக்குப் போகும் போது மகனைப் பார்க்கிறோமா?

மகனைப் பார்க்க வருவதாகச்  சொல்லிக் கொண்டு சென்னைக்குப் போய் 

மகனைப் பார்க்காமல் சென்னையைச் சுற்றிப் பார்த்து விட்டு 

ஊருக்குத் திரும்பினால் மகன் நம்மைப் பற்றி என்ன நினைப்பான்?

திருமணம் ஒரு சமூக நிகழ்வா? ஆன்மீக நிகழ்வா?

கடவுள் முதல் மனிதனைப் படைக்கும் போது அவனின் உடலையும் ஆன்மாவையும் நேரடியாகப் படைத்தார்.

அடுத்து அவனது வம்சங்களைப் படைக்கும் போது உடலை  உண்டாக்கும் பொறுப்பை மனிதரிடம் கொடுத்து விட்டு ஆன்மாவை மட்டும் நேரடியாகப் படைத்தார் 

அதற்காகத்தான் திருமண அமைப்பைப் படைத்தார்.

திருமணம் முழுக்க முழுக்க ஒரு ஆன்மீக நிகழ்வு, குருத்துவத்தைப் போல.

அதன் ஆன்மீக நோக்கம் மனிதர்களைப் படைப்பதில் கடவுளுக்கு உதவிகரமாக இருப்பது.

திருமணம் ஒரு தேவத் திரவிய அனுமானம், கடவுளால் நிறுவப்பட்டது.

அது தேவத் திரவிய அனுமானமாக இருப்பதால் கோவிலில் குருவானவர் முன்னிலையில் நடத்துகிறோம்.

ஆனால் நடைமுறையில் அதில் கடவுளின் படைப்புப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

உடல் சார்ந்த சிற்றின்ப அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

இன்றைய திருமணம் என்ற வீடு அழகு, பணம், நகை, வேலை, சம்பளம், சாப்பாடு ஆகிய அஸ்திவாரத்தின் மீது தானே கட்டப்படுகிறது.‌ அவற்றில் ஒன்றுக்குப் பிரச்சினைகள் என்றால் வீடு ஆட்டங்காண்கிறது.

இறையன்பு, பிறரன்பு, தியாகம் ஆகியவை பற்றி யார் கவலைப் படுகிறார்கள்?

குழந்தைப் பேறு செபம் கலந்த இன்பத்தின் விளைவாக ஏற்பட வேண்டும், வெறும் சிற்றின்பத்தின் விளைவாக அல்ல.

எத்தனை பெற்றோர் இறையன்பு என்னும் பாலூட்டி பிள்ளைகளை வளர்க்கிறார்கள்?

ஆக குடும்ப வாழ்வில் கடவுளுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை விட

 உலக வாழ்வுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

வழியும், உண்மையுமான இயேசுவின் ஒன்றிப்பில் வாழப்படும் திருமண வாழ்வுதான் நிலை வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.
 
இயேசு தான் வாழ்வு.

நாம் அநேக சமயங்களில் நமது ஆன்மீகம் சார்ந்த செயல்களிலும் லௌகீகத்துக்கு முதல் இடத்தையும், கடவுளுக்கு இரண்டாவது இடத்தையும் கொடுத்து விடுகிறோம்.

நமது வழிபாட்டை எடுத்துக் கொள்வோம்.

எதற்காகத் திருப்பலிக்குப் போக வேண்டும்?  எதற்காகப் போகிறோம்?

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறை இயேசுவைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுக்க,

நம்மைப் பராமரித்து வரும் இறைவனுக்கு நன்றி கூற,

ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் கேட்டுப் பெற,

இவைதான் திருப்பலிக்குச் செல்வதன் நோக்கம்.

இவைகளை நாம் மறுப்பதில்லை.

ஆனால், திருப்பலியின்போது லௌகீகம் சார்ந்த மன்றாட்டுக்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

நல்ல உடல் நலனுக்காக, பிள்ளைகள் நன்கு படிக்க,  நல்ல வேலை கிடைக்க, சம்பளம் அதிகரிக்க, நல்ல பெண் கிடைக்க, ஆண் குழந்தை பிறக்க 

இவை போன்றவைதான் நமது மன்றாட்டுகள்.

பாவ மன்னிப்புப் பெறுவதற்காக வேளாங்கண்ணிக்கு நடைப்பயணம் போவதில்லை.

அதற்கு நம்மூர்ப் பங்குத் தந்தையிடம் போனால் போதும்.

மேற்கூறப்பட்ட கருத்துக்களுக்காக அன்னைக்கு நேர்ச்சை செய்திருப்போம்.

அதற்காகத்தான் நடைப் பயணம்.

காய்ச்சலுக்கு ஊசி போட டாக்டரைப் பயன்படுத்திக் கொள்வது போல உலகைச் சார்ந்த உதவிகளைப் பெற இறைவனைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

உலகைச் சார்ந்த உதவிகளைக் கடவுளிடம் கேட்கக் கூடாது என்று சொல்லவில்லை.

எதற்கு முதலிடம் கொடுக்கிறோம்?

பள்ளிக்கூடத்தில் படிப்புக்கு முதலிடம்.

சில மாணவர்கள் முதல் பிரிவு வேளையிலேயே ஏழாவது பிரிவில் வரும் PET வகுப்பையே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

வழிபாட்டில் இறைவனுக்கு மட்டும் தான் முதலிடம்.

மற்ற விண்ணப்பங்கள் நிறைவேறாவிட்டாலும் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

நாம் வாழ வேண்டியது இறைவனுக்காக, நமக்காக அல்ல.

நாம் வாழும் பிரபஞ்சமே அழிந்தாலும், இறைவாக்கு நம்மில்  நிறைவேற வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment