அவர்களிடம், "என் இல்லம் இறைவேண்டலின் வீடு" என்று மறைநூலில் எழுதியுள்ளதே.
(லூக்கா நற்செய்தி 19:46)
இந்த இறை வசனத்தைத் தியானிக்கும்போது உள்ளத்தில் எழுந்த எண்ணங்கள்.
நாம் வாழ பயன்படுத்தும் இடத்தை வீடு என்கிறோம்.
கல்வி கற்கும் இடத்தை பள்ளிக்கூடம் என்கிறோம்.
இறைவனை வேண்டப் பயன்படுத்தும் இடத்தை ஆலயம் என்கிறோம்.
கடவுள் வாழும் இடம் ஆலயம்.
கடவுள் எங்கே வாழ்கிறார்?
எங்கும் வாழ்கிறார்.
ஒரு வகையில் நாம் வாழும் உலகம் மட்டுமல்ல, இயற்கை வாழும் பிரபஞ்சமே ஒரு ஆலயம்தான்.
இயற்கை இரவும் பகலும் இறைவனின் புகழைப் பாடிக்கொண்டிருக்கிறது.
எப்படி?
இறைவன் வகுத்துக் கொடுத்த விதிகளின்படி இயங்குவதன் மூலம் இயற்கை இறைவனின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறது.
அளவிட முடியாத பரப்பளவு உள்ள விண்வெளியில் (Space) சூரியனை விட பன்மடங்கு பெரிய கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்
அததன் நீள் வட்டப் பாதையில் ஒன்றோடொன்று மோதாமல் வலம் வந்து கொண்டிருப்பதன் மூலம்
இறைவனின் அளவு கடந்த ஞானத்தையும், வல்லமையையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
உன்னதங்களில் தேவனுக்கு மகிமை என்று பாடிக் கொண்டிருக்கின்றன.
இறைவன் தனது வல்லமையால் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நாம் வாழும் பூமி மாபெரும் பிரபஞ்சத்தில் ஒரு சிறிய பகுதி.
இறைவன் தான் நம்மை பூமியில் வாழ விட்டிருக்கிறார்.
நாம் பூமியில் எப்படி வாழ வேண்டும்?
நம்மைப் படைத்தவரோடு ஒன்றித்து செப வாழ்வு வாழ வேண்டும்.
இறைவனோடு ஒன்றித்திருப்பதே செபம் தான்.
செபம் என்றாலும் இறை வேண்டல் என்றாலும் ஒரே பொருள் தான்.
இறைவனோடு ஒன்றித்து அவருக்காக வாழ வேண்டும்.
உண்பது உயிர் வாழ,
உயிர் வாழ்வது இறைவனுக்காக. ஆக உண்பது இறைவனுக்காக.
உழைப்பது உயிர் வாழ.
உயிர் வாழ்வது இறைவனுக்காக.
ஆக உழைப்பது இறைவனுக்காக.
சம்பாதிப்பது உயிர் வாழ.
உயிர் வாழ்வது இறைவனுக்காக.
ஆக சம்பாதிப்பது இறைவனுக்காக.
மூச்சு விடுவது உயிர் வாழ.
உயிர் வாழ்வது இறைவனுக்காக.
ஆக மூச்சு விடுவது இறைவனுக்காக.
உலகில் நாம் என்ன செய்தாலும் அது இறைவனுக்காகத்தான்.
நாம் மரணம் அடைவது?
அதுவும் இறைவனுக்காகத்தான்.
உலகில் ஒவ்வொரு வினாடியும் இறைவனுக்காக செயல்படுவதால்,
நாம் வாழும் உலகம் இறைவன் வாழும் ஆலயம்.
நாம் ஒவ்வொருவரும் ஒரு சிற்றாலயம்.
உலகம் ஒரு பேராலயம்.
ஆலயத்தில் நமது வேலை என்ன?
இறைவனை வழிபடுவது.
ஆக இறைவனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு வினாடியும் நாம் இறைவழிபாடு செய்து கொண்டிருக்கிறோம்.
இறைவழிபாடு என்றால் பலி கொடுக்க வேண்டுமே.
நாம் வாழும் ஒவ்வொரு வினாடியையும் இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
நமது ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு செயலையும் இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
இப்படிச் செய்யும்போது நாம் ஒவ்வொரு வினாடியும் செபிக்கிறோம்.
ஒவ்வொரு வினாடியும் இறை வேண்டல் செய்கிறோம்.
நமது வாழ்வே செபம் தான்.
உலகமாகிய ஆலயத்தில் ஒவ்வொரு வினாடியும் இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்தால் நமக்குள் பாவம் நுழைய இடமே இல்லை.
நமது வாழ்வே புண்ணியம்தான்.
ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குச் சென்று, திருப்பலி கண்டு திரு விருந்து அருந்துவதோடும்,
திரு அருட்சாதனங்களை ஒழுங்காகப் பெறுவதோடும்
கோவிலுக்கு வெளியேயும் வாழ்க்கையையே இறை வழிபாடாக வாழ்வதுதான் கிறித்தவ வாழ்வு.
கோவிலில் மட்டுமல்ல வீட்டிலும், அலுவலகத்திலும், வயல் வெளியிலும், ஏன், தெருவிலும் கூட நாம் கிறித்தவர்கள் தான்.
நாம் எங்கு சென்றாலும் அங்கே கடவுள் இருக்கிறார்.
ஆகவே தான் உலகத்தையே ஆலயம் என்கிறோம்.
இறை அன்பையும் பிறர் அன்பையும் எங்கும் எப்போதும் வாழ வேண்டும்.
இயேசு ஆலயத்திலும் போதித்தார்,
வீடுகளிலும் போதித்தார், கடற்கரையிலும் போதித்தார், மலை மேலும் போதித்தார்,
மலை அடிவாரத்திலும் போதித்தார்,
தெருக்களில் கூட போதித்தார்,
எங்கெல்லாம் மக்களைப் பார்த்தாரோ அங்கெல்லாம் போதித்தார்.
அவரே தேடிச்சென்றும் போதித்தார்.
அவரைத் தேடி வந்தவர்களுக்கும்
போதித்தார்.
நாமும் இயேசுவைப் பின்பற்றி எங்கும் எப்போதும் கிறித்தவர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment