Wednesday, November 13, 2024

" தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்.". (லூக்கா நற்செய்தி 17:33)

''தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்."
(லூக்கா நற்செய்தி 17:33)

நமது உடலும் ஆன்மாவும் சேர்ந்திருக்கும் போது நாம் உலகில் உயிரோடு இருக்கிறோம்.

ஆன்மா உடலை விட்டுப் பிரியும் போது உயிரை இழக்கிறோம்.

ஆக உலக வாழ்வுக்கு நமது உயிர் நமது ஆன்மா.

நாம் உயிரோடு இருக்கும் போது உடலைச் சார்ந்த மூச்சும் இருதயமும் இயங்கிக் கொண்டிருக்கும்.

அவை இயங்குவதை நிறுத்தி விட்டால் நாம் உயிர் விடுகிறோம்.

இது நமது உடல் சார்ந்த வாழ்வும், மரணமும்.

நமது ஆன்மா அழியாது.

ஆனால் அதன் வாழ்வும், மரணமும் வித்தியாசமானவை.

ஆன்மாவில் இறைஉறவு அருள் ( தேவ இஷ்டப் பிரசாதம்) இருந்தால் அது வாழ்கிறது.

ஆன்மா இறை உறவு அருளை இழந்தால் அது உயிர் விடுகிறது, அதாவது மரணம் அடைகிறது.

ஆனாலும் நமது உடல் மரணம் அடைந்தவுடன் அழிவது போல் ஆன்மா மரணம் அடைந்தாலும் அழியாது.

இறை உறவு அருளை இழந்த நிலையைத்தான் ஆன்மாவின் மரண நிலை என்கிறோம்.

கடவுள் நம்முடைய முதல் பெற்றோரை இறை உறவு அருளோடு படைத்தார்.

ஆனால் அவர்கள் பாவம் செய்த போது இறை உறவு அருளை இழந்தனர், அதாவது ஆன்மீக மரணம் அடைந்தனர்.

ஆனாலும் உலகில் உயிர் வாழ்ந்தனர்.

அவர்களுடைய வாரிசுகள் இறை உறவு அருள் இல்லாத நிலையில் உற்பவித்துப் பிறந்தனர், அதாவது, சென்மப் பாவத்தோடு உற்பவித்துப் பிறந்தனர்.

இயேசுவின் அன்னை மரியாள் மட்டும் கடவுளின் விசேட வரத்தால் சென்மப் பாவம் இல்லாமல் உற்பவித்துப் பிறந்தாள்.

மனுக் குலத்தின் மரணநிலையில் இருந்த ஆன்மாக்களுக்கு உயிர் கொடுக்கவே 

இறைவன் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்துப் பாவப் பரிகாரம் செய்தார்.

நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக நாம்  சென்மப் பாவத்தோடு, அதாவது மரணித்த ஆன்வோடு உற்பவித்தோம்.

நாம் திருமுழுக்குப் பெற்றபோது நமது ஆன்மா சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற்றது, அதாவது இறை உறவு அருள் பெற்று உயிர் பெற்றது.

உயிர் பெற்ற நமது ஆன்மாவைத் திரும்பவும் மரணிக்காமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

சாவான பாவம் ஆன்மாவைச் சாகடிக்கும்.

ஆகவே சாவான பாவம் செய்யாமல் வாழ வேண்டியது நமது கடமை.

திருமுழுக்கின்போது பெற்ற இறை உறவு அருளை நமது புண்ணிய வாழ்வினால் 
பாதுகாக்க வேண்டும்.

''தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்." இது இறைவாக்கு.

"தம் உயிரைக் காக்க வழிதேடுவோர்" 

அதாவது உலகில் வாழ்வதற்காகப் பாவம் செய்பவர்கள்,

"அதை இழந்துவிடுவர்" 

அதாவது ஆன்மீக உயிரை இழந்து விடுவர்.

ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலிக்கு வேண்டுமென்றே போகாதிருப்பது சாவான பாவம்.

ஞாயிறு திருப்பலிக்குப் போகாமல் உயிர் வாழ்வதற்காகப் பணம் தேடி வேலைக்குப் போகின்றவர்கள் சாவான பாவம் செய்கிறார்கள்.

அப்படிச் செய்கிறவர்கள் தங்கள் உடல் சார்ந்த உயிரைக் காப்பாற்றலாம், ஆனால் ஆன்மீக உயிரை இழந்து விடுவார்கள்.

"தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்."

தம் உயிரை இழப்பவர்கள்

 அதாவது தங்கள் ஆன்மீக நலனுக்காக உடல் சார்ந்த உயிரை இழப்பவர்கள்,

அதைக் காத்துக் கொள்வர்.

 தங்கள் ஆன்மீக உயிரைக்  காத்துக் கொள்வார்கள்."

உடல் சார்ந்த உயிரும், ஆன்மீக உயிரும் நம்முடையவைதான்.

வேத சாட்சிகள் தங்கள் ஆன்மீக உயிரைக் காத்துக் கொள்வதற்காக  உடல் சார்ந்த உயிரைத் தியாகம் செய்தார்கள்.

இயேசு தனது உடல் சார்ந்த மரணத்தால் நமது ஆன்மீக மரணத்தை வென்றார்.

வேத சாட்சிகள் தங்கள் உடல் சார்ந்த மரணத்தால் ஆன்மாவை நித்திய காலம் வாழச் செய்தார்கள்.

உயிருள்ள ஆன்மாவோடு இறப்பவர்கள் நித்திய காலம் மோட்சத்தில் வாழ்வார்கள்.

மரணித்த ஆன்மாவோடு இறப்பவர்கள் நித்திய காலம் நரகத்தில் வாழ்வார்கள்.

ஆன்மாவுக்கு அழிவு கிடையாது.

நித்திய காலமும் எங்கே வாழ வேண்டும் என்பதை அந்தந்த ஆன்மாதான் தீர்மானிக்க வேண்டும்.

உலகில் வசதியாக வாழ்வதற்காக சாவான் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள் 

மரணத்துக்குப் பின் நித்திய பேரிடர் வாழ்வுக்குள் நுழைவர்.

உலகில் இறைவனுக்காகப் புண்ணிய வாழ்க்கை வாழ்பவர்கள்

மரணத்துக்குப் பின் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவர்.

நாம் நித்தியமும் பேரின்ப வாழ்வு வாழவே இயேசு இவ்வுலகில் சிலுவை வாழ்வு வாழ்ந்து, சிலுவையிலே மரித்தார்.

நாமும் இவ்வுலகில் இயேசுவைப் பின்பற்றி வாழ்வோம்,

மறுவுலகில் இயேசுவோடு நிலை வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment