தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?
(லூக்கா நற்செய்தி 18:7)
"கேளுங்கள் கொடுக்கப் படும்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப கேட்டேன்,
ஆனால் கிடைக்கவில்லை" என்று அங்கலாய்ப்பவர்கள் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்டவர் கேட்கச் சொன்னது நமது ஆன்மீக வளர்ச்சிக்கான உதவிகளை.
நமது ஆன்மீக வளர்ச்சிக்கான உதவிகளைக் கேட்டால் இயேசு கட்டாயம் கொடுப்பார், கொடுக்க வேண்டிய நேரத்தில்.
நாம் நமது உடல் சார்ந்த உதவிகளைக் கேட்டாலும் கொடுப்பார், அவை நமது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்குமானால்.
நம்மிடம் வேண்டாத குணம் ஒன்று இருக்கிறது,
கேட்டது கேட்டவுடன் கிடைக்க வேண்டும்.
அதிசயப் பிறவி ஒருவன் அம்மாவிடம் கேட்டானாம்,
'"அம்மா, எனக்கு ஒரு மகன் வேண்டும்."
''அதற்கு நீ கல்யாணம் முடிக்க வேண்டும்.''
"முடித்தால்?"
"கட்டாயம் கிடைக்கும்."
"அப்போ கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்"
கல்யாணம் முடிந்தது.
முதல் இரவில் மனைவியிடம் கேட்டான்,
''இப்போ எனக்கு ஒரு மகன் வேண்டும்."
"அதற்கு குறைந்து பத்து மாதங்கள் வேண்டும்."
"அதெல்லாம் முடியாது. கல்யாணம் முடிந்தால் மகன் கிடைப்பான்னு அம்மா சொன்னாங்க. மகனுடன் வந்தால் தான் பேசுவேன்."
இப்படிப்பட்ட ஆசாமிகள் தான் நினைத்தது நினைத்தவுடன் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இறை மனித உறவு சார்ந்த ஒரு அடிப்படை உண்மையை மனதில் கொள்ள வேண்டும்.
நாம் கேளாமலேயே கடவுள் நம்மைப் படைத்தார்.
எப்போது படைக்க வேண்டும்,
எங்கே படைக்க வேண்டும்,
எப்படிப் படைக்க வேண்டும்,
யாருக்குப் பிள்ளையாய்ப் படைக்க வேண்டும்
என்ற விபரங்களை நம்மிடம் கேட்டுப் படைக்கவில்லை.
இதெல்லாம் அவருடைய சொந்த முடிவு.
படைக்கப்பட்ட பின்புதான் நமக்குத் தெரியும்.
ஆனால் அவர் நம்மைப் பற்றி நித்திய காலமாய்த் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
நித்திய காலம் தொட்டு நம் ஒவ்வொருவரையும் ஒரு வினாடி கூட அவர் மறந்ததில்லை.
அது அவர் சுபாவம். அவரால் மறக்க முடியாது.
ஆனால் நமது சுபாவம்?
எப்படி குழந்தை பசிக்கும் போது மட்டும் அம்மாவை நினைக்கிறதோ,
அப்படியே நாமும் நமக்கு ஏதாவது வேண்டுமென்றால் மட்டும் கடவுளை நினைப்போம்.
அவர் நம்மைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது போல நாமும் அவரைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அப்படியானால் நமக்கு எப்போதும் தேவைகள் இருக்க வேண்டும் என்பது அவர் ஆசை.
நமது எல்லா ஆசைகளும் பூர்த்தியாவது நாம் மோட்சத்துக்கு சென்ற பிறகு தான்.
நாம் செபிக்கும்போது மட்டும் தான் அவரை நினைக்கிறோம்.
நாம் இடைவிடாது அவரை நோக்கி செபிக்க வேண்டும் என்று அவர் ஆசைப் படுவதே நாம் அவரை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதற்காகத்தான்.
அதனால் தான் நாம் கேட்டவுடன் எதையும் தந்து விடுவதில்லை.
ஆனால் நம்மால் கேட்கப்டுவது உறுதியாக நமக்குக் கிடைக்கும்.
நாம் கேட்டதை உடனே தராவிட்டால் தான் நாம் அவரைக் கேட்டுக் கொண்டேயிருப்போம்.
நாம் அவரை எதுவும் கேட்காமல் அவரை நினைத்துக் கொண்டிருந்தால்?
அவர் மிகவும் சந்தோசப்படுவார்.
அவரே சொல்லியிருக்கிறாரே,
"ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
(மத்தேயு நற்செய்தி 6:33)
நாம் நம்மைப் பற்றிக் கவலைப் படாமல் கடவுளையும்,
அவரது ஆட்சியைப் பற்றியும், அவருக்கு விருப்பமானதைப் பற்றியும் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால்
நமக்கு வேண்டிய அனைத்தையும் நாம் கேளாமலேயே தருவார்.
அன்னை மரியாள் தன் மகனிடம் தனக்கென்று எதுவும் கேட்கவில்லை.
கடவுள் அவளை விண்ணக, மண்ணக அரசியாக நியமித்தார்.
நாம் அல்லும் பகலும் அவரை நோக்கிக் வேண்டுவோம்.
அவரது வார்த்தையைக் காப்பாற்ற நாம் வேண்டியதைத் தருவார், இது உறுதி.
இறைவனிடம் கேட்பது மட்டுமல்ல, அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதும் செபம் தான்.
அல்லும் பகலும் செபிப்போம்.
ஆசைகள் அத்தனையும் நிறைவேற அது ஒன்றுதான் வழி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment