அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், "வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்" என்றார்.
(லூக்கா நற்செய்தி 14:18)
இயேசு விண்ணகத்தில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
தந்தையால் படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் விருந்துக்கு அழைத்திருக்கிறார்.
கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்றுக் கொண்டால் மட்டும் போதுமா?
விருந்துக்குச் செல்லத் தங்களைத் தயாரிக்க வேண்டாமா?
ஒரு பையனை அப்பா பள்ளியில் பேர் சேர்த்திருக்கிறார்.
மறுநாள் காலையில் பையன் பள்ளிக்குப் போக வேண்டும்.
காலையில்,
"அப்பா இன்றைக்குப் பள்ளிக்கூடம் போக மாட்டேன். நாளைக்குப் போகிறேன்."
"ஏண்டா?"
"இன்றைக்கு உங்களுடன் இருப்பேன்.''
"என்னோடு என்ன செய்யப் போகிறாய்?"
"நீங்கள் மட்டும் TV யில் Match பார்ப்பதற்காக லீவ் போட்டிருக்கீங்க!"
அப்பாவுக்கு ஏற்ற மகன்!
*****
திருமுழுக்கு பெற்றதால் மட்டும் விண்ணக விருந்துக்குப் போய் விட முடியுமா?
கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டாமா?
"ஏங்க கோவிலுக்குப் புறப்படவில்லையா?"
"இன்றைக்கு நீயும் பிள்ளைகளும் மட்டும் போய்விட்டு வாங்க."
"இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமைங்க."
"இன்று மட்டும் தான் எனக்கு லீவு. நீங்கள் போய்விட்டு வாங்க."
கோவிலில் பெண்கள் பக்கம் நிறைந்திருக்கும், ஆண்கள் பக்கம் வெறிச்சோடிக் கிடக்கும்.
கல்யாண வீட்டு விருந்துக்கு குடும்பமே போகிறது.
திருப்பலி திருவிருந்துக்கு மனைவியும் பிள்ளைகளும் மட்டும்.
விண்ணக விருந்துக்கு?
****
"இன்று ஏன் பையன் பூசைக்கும் ஞானோபதேச வகுப்புக்கும் வரவில்லை?"
"சுவாமி, காலை பூசை நேரத்தில் தான் Tution க்குப் போக வேண்டியிருக்கிறது. பையன் +2 படிக்கிறான். Tution க்குப் போகாவிட்டால் மார்க் எடுக்க முடியாது."
''ஆன்மாவுக்கு அருள் வேண்டாமா?"
"பொதுத் தேர்வு முடிந்தபின் பார்த்துக் கொள்ளலாம்."
பிள்ளைகளின் ஆன்மீகத்தில் அக்கறை இல்லாத பெற்றோர்!
விண்ணக விருந்துக்குச் சாக்குப் போக்கு.
. ****
''பெண்ணுக்குத் திருமணம்."
"திருமணம் நமது கோவிலில் இல்லையா?"
"பெந்தகோஸ்தே மாப்பிள்ளை.''
"நீங்கள் கத்தோலிக்கர்தானே!"
"எல்லா பக்கமும் ஒரே ஆண்டவர் தானே!"
"ஆமா, ஆமா, கடவுள் எங்கும் இருக்கிறார். மோட்சத்திலும் இருக்கிறார், நரகத்திலும் இருக்கிறார்.
ஆனால் நரகத்தில் உள்ளவர்கள் கடவுளைப் பார்க்க முடியாது.''
****
"நீங்கள் ஏன் கோவிலுக்கு வருவதில்லை?"
"நீங்கள் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று சாமியார் சொன்னாரே."
"கோவிலுக்கு வர வேண்டாம் என்று சொல்லவில்லையே."
சாக்குப் போக்கு சொல்பவர்கள் இறை வார்த்தைக்கும் விருப்பம் போல் அர்த்தம் கொடுப்பார்கள்.
****
கடவுள் நம்மை இவ்வுலகில் படைத்தது இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.
விண்ணுலக வாழ்வுக்கு நம்மைத் தயாரிப்பதற்காக.
அதற்காகத்தான் தேவத்திரவிய அனுமானங்கள்.
அதற்காகத்தான் வழிபாடுகள்.
அநேகர் தேவத்திரவிய அனுமானங்களை ஆன்மீக நோக்கில் பார்ப்பதை விட விழாவாகக் கொண்டாடுவதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
திருமுழுக்கு, புது நன்மை, திருமணம் ஆகியவை விருதினர்களோடு கொண்டாடப் படுகின்ற விழாக்களாக மாறி விட்டன.
ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி பூசை ஆரம்பித்த பிறகு வந்து, முடியுமுன் வெளியேறி விடுகின்றனர்.
வருடக்கணக்காக பாவ சங்கீர்த்தனம் செய்யாமல் நற்கருணை நாதரை ஒவ்வொரு திருப்பலியிலும் தின்பண்டம் வாங்குவது போல வாங்குவது சிலருடைய பழக்கம் ஆகிவிட்டது.
விளக்கம் கேட்டால் ஏதாவது சாக்குப் போக்கு சொல்வார்கள்.
எது உண்மையான காரணம், எது சாக்குப் போக்கு என்று கடவுளுக்குத் தெரியும்.
விண்ணக விருந்துக்கான அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள நாம் அதற்காக ஒவ்வொரு வினாடியும் தம்மைத் தயாரிக்க வேண்டும்.
தகுந்த தயாரிப்புடன் தேவத் திரவிய அனுமானங்களைப் பெற வேண்டும்.
நமது ஒவ்வொரு சிந்தனையும், சொல்லும், செயலும் விண்ணகத்தை நோக்கியே இருக்க வேண்டும்.
உண்மையான விருப்பம் இல்லாதவர்கள்தான் சாக்குப் போக்கு சொல்வார்கள்.
நிலை வாழ்வாகிய விண்ணக விருந்தை நினைத்து அதற்காக மட்டுமே வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment