அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை .ஆக்காதீர்கள்" என்று கூறினார்.
(அரு. 2:16)
எருசலேம் ஆலயத்தில் இயேசு ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டு,
அவர்களை நோக்கி "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார்.
எருசலேம் ஆலயம் பற்றி அவர் கூறிய வார்த்தைகள் தூய ஆவியின் ஆலயமாகிய நமக்கும் பொருந்தும்.
'' உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல.
(1 கொரிந்தியர் 6:19)
நாம் தங்கியிருக்கும் இடத்தை வீடு என்கிறோம்.
இறைவன் பிரசன்னமாயிருக்கும் இடத்தை ஆலயம் என்கிறோம்.
நமது உடல் கடவுள் தங்கியிருக்கும் ஆலயம்.
கடவுள் பரிசுத்தர்.
அவர் தங்கியிருக்கும் ஆலயத்தை பரிசுத்தமாகப் பேணிக் காக்க வேண்டிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
நம்மைப் படைக்கும் போது தனக்கேற்ற பரிசுத்த ஆலயமாகத் தான் படைத்தார்.
ஆனால் நாம் நமது பாவத்தினால் அதைப் பாழ் படுத்தி விட்டோம்.
கடவுள் மனிதனாகப் பிறந்து நம்மை தனது சிலுவை மரணம் என்னும் விலை கொடுத்து மீட்டு
பரிசுத்த ஆவியினால் நமது திருமுழுக்கு மூலம்
தான் வாழ்வதற்கு ஏற்ற பரிசுத்த ஆலயமாக மாற்றினார்.
நாம் நமது உடலைப் பரிசுத்தமாக பேணுவதன் மூலம் கடவுளின் அருள் உதவியால் அதன் தூய நிலை மாறாமல் பராமரிக்க வேண்டும்.
"கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்."
(1கொரிந்தியர் 6:,20)
நமது உடலின் தூய நிலை மாறாமல் பராமரிப்பது எப்படி?
நாம் திருமுழுக்குப் பெறும்போது நமது உடல் தூய ஆலயமாக மாறியது.
தூய நிலை மாறாமல் பராமரிக்க நாம் பாவம் செய்யாதிருக்க வேண்டும், புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.
பாவம் செய்வது நமது வீட்டுக்கு நாட்டின் முதல்வரை அழைத்து விட்டு, அவர் அமர வேண்டிய நாற்காலியில் சாணத்தைப் போட்டு வைத்திருப்பதற்குச் சமம்,
கல்யாண விருந்தில் சாம்பாருக்குப் பதில் சாக்கடை நீரை ஊற்றுவதற்குச் சமம்.
திரு விருந்தின்போது நமது ஆன்மா பாவ மாசின்றி பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
பாவம் செய்யாதிருக்க என்ன செய்ய வேண்டும்?
பாவம் செய்யாதிருக்க பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.
பாவச் சோதனைகள் வருவதற்குக் காரணமே பாவ சந்தர்ப்பங்கள்தான்.
மதுக்கடை அருகில் சென்றால் மது அருந்த சோதனை வரத்தான் செய்யும்.
நமது மனதைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், எப்போதும் நல்லதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால்
கெட்டதைப் பேசவோ, கெட்டதைச் செய்யவோ சோதனை வராது.
மனதில் இருப்பதுதான் சொல்லிலும், செயலிலும் பிரதிபலிக்கும்.
பிறரைப் பற்றி புறணி பேசக்கூடாது என்றால் பிறரிடம் உள்ள நல்லதை மட்டும் பார்க்க வேண்டும்.
பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் பிறர் படும் கஷ்டங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நமது பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்பட வேண்டுமென்றால் இயேசுவின் பாடுகளைத் தியானிக்க வேண்டும்.
மனதில் எப்போதும் கடவுளும், அவரைப் பற்றிய எண்ணங்களும் இருந்தால் பாவம் பக்கத்திலேயே வராது.
நண்பன் முன்னால் அமர்ந்து அவன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தால் அவன் மீது அன்பு ஊறும்.
சிலுவையில் தொங்கும் இயேசுவின் முகத்தையே மனதில் உற்று நோக்கிக் கொண்டிருந்தால் பாவ எண்ணங்கள் எப்படி வரும்?
இயேசுவின் மேலுள்ள அன்பு அதிகமாகும்.
அன்பு இருக்கும் இடத்தில் தூய்மையின் மணம் வீசும்.
ஏன் திருமணத் தம்பதியர் பூமாலையை மாற்றிக் கொள்கிறார்கள்?
திருமணம் நறுமணம் வீசுவதற்காகத்தான்.
நாமும் புண்ணியங்களால் ஆன மலர் மாலைகளால் நமது உடல் என்னும் இறை ஆலயத்தை அலங்கரிப்போம்.
இறைவன் எப்போதும் நம்முடனே இருப்பார்.
நாமும் அவர் உள்ளத்தில் என்றென்றும் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment