Tuesday, November 12, 2024

இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது" என்றார். (லூக்கா நற்செய்தி 17:21)

 இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது" என்றார். 
(லூக்கா நற்செய்தி 17:21)

இயேசுவின் காலத்தில் யூதர்களை ஆண்டு கொண்டிருந்தவர்  ரோமைப் பேரரசன் சீசர்.

யூதர்கள் அவரை பிலாத்துவின் முன் கொண்டு வந்து நிறுத்தி,

"சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; 
தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான்."

 என்று அவர் மேல் என்று   குற்றம் சாட்டினார்கள்.

பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்டார்.

அவர் மறுமொழியாக, "அவ்வாறு நீர் சொல்கிறீர்.

எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல."

சீசர் இவ்வுலகைச் சார்ந்த அரசர்.

இயேசுவும் அரசர் தான்.

உலகம் அவருடையது, உலகுக்கு அவர்தான் அரசர் 

ஆனால் உலக அரசர் அல்ல. உலகைச் சார்ந்த லௌகீக அரசர் அல்ல.

விண்ணுலக அரசர்.

 விண்ணுலகில் வாழ்வதற்கென்றே மண்ணுலகில் படைக்கப்பட்ட நம்மை ஆளும் ஆன்மீக அரசர்.

பொருளால் அல்ல, தன் அருளால் நம்மை ஆளும் அரசர்.

நமது உள்ளத்தை ஆளும் அரசர்.

அதனால் தான்

 "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல." என்கிறார்.

இவ்வுலக அரசர்கள்  மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆள்வார்கள்.

இயேசு நமது அருள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக ஆள்கிறார்.

அருள் ஆன்மீகம் சார்ந்தது.

அவரது ஆட்சி நமது உள்ளத்தில் இருக்கிறது.

இறையாட்சியைத் தேடி எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, 

அது நம்மிடையே இருக்கிறது, 

நம் உள்ளத்தில் இருக்கிறது.

இவ்வுலக அரசர்களுக்கு எதிர் மாறானவர் இயேசு அரசர்.

இவ்வுலக அரசர்கள் அழிவுக்கு உட்பட்ட நிலப்பரப்பையும், அதில் வாழும் அழிவுக்கு உட்பட்ட மக்களையும் ஆள்கிறார்கள்.

மகா அலெக்சாண்டர் ஆண்ட நிலப்பரப்பு அவர் காலத்தில் இருந்தது போல் இப்போது இல்லை.

அலெக்சாண்டரும் இல்லை, அவர் ஆண்ட மக்களும் இல்லை.

இயேசு அரசர் ஆள்வது அழியாத ஆன்மாக்களை.

அவரால் ஆளப்படும் ஆன்மாக்கள் நித்திய காலம் வாழ்வார்கள்.

விண்ணக அரசில் மரணமே கிடையாது.


இவ்வுலக அரசர்கள் அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த சிம்மாசனங்களில் அமர்கிறார்கள்.

சிலுவை தான் இயேசு அரசரின் சிம்மாசனம்.

இவ்வுலக அரசர்கள் அரண்மனைகளில் வாழ்கிறார்கள்.

இயேசு அரசருக்கு இவ்வுலகில் தலை சாய்க்கக் கூட இடமில்லை.

அவர் குடிமக்களின் உள்ளங்களில் வாழ்கிறார்.

இவ்வுலக அரசர்கள் போர்கள் மூலம் தங்கள் அரசை விரிவு படுத்துகிறார்கள்.

இயேசு அரசர் சமாதானத்தின் மூலம் தனது ஆன்மீக அரசை விரிவு படுத்துகிறார்.

இயேசு அரசருக்கு நமது உள்ளம் தான் அரண்மனை.

அவரது அன்புதான் நமது சட்டம்.

அரசரையும் சக குடிமக்களையும் அன்பு செய்ய வேண்டியதுதான் நமது முழுநேர வேலை.

நித்திய பேரின்ப வாழ்வுதான் அதற்குரிய சம்பளம்.

இயேசு அரசரின் ஆட்சியில் முழு நேரமும் அன்பு செய்வோம்.

நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment