அன்பு இதயத்தில் பிறக்கிறது,
உள்ளத்தில் அல்ல.
ஒரு அழகான சிறு குழந்தை தவழ்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
அதன் அழகு நம்மை ஈர்க்கிறது.
பார்த்துக் கொண்டேயிருக்கிறோம்.
ஆனால் அந்தக் குழந்தையைப் பற்றி எந்த விபரமும் தெரியாது.
உள்ளத்தில் அதைப் பற்றி எந்த விபரமும் இல்லை.
ஆனால் அது இதயத்தில் இடம் பிடித்துவிட்டது.
ஒரு இளைஞன் ஒரு அழகான இளம்பெண்ணைப் பார்க்கிறான்.
பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.
திரும்பத் திரும்ப பார்க்க ஆசைப் படுகிறான்.
இதயத்தை அவளிடம் பறிகொடுத்து விட்டான்.
ஆனால் மனதில் அவளைப் பற்றி எந்த விபரமும் இல்லை.
அவள் யாரென்றே தெரியாது.
அழகில் இதயத்தைப் பறி கொடுப்பது மனித இயல்பு.
எதற்காக இந்த இதய விவகாரம்?
இந்து நண்பர் ஒருவர் ஒரு முறை என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
எந்த அடிப்படையில் நீங்கள் மனதிற்குப் புரியாத விடயங்களை எல்லாம் உண்மை என்று விசுவசிக்கிறீர்கள்.
நான் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டேன்.
"உங்கள் தந்தை யார்?"
பெயரைச் சொன்னார்.
"அவர்தான் உங்கள் தந்தை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"இதென்ன கேள்வி. அம்மா சொன்னாங்க."
"அதை எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?"
"அம்மா உண்மையைத்தான் சொல்வார்கள் என்ற நம்பிக்கையில் தான்."
"நாங்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் பிள்ளைகள். தாய் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம்."
"வேறு ஆதாரம் தேவை இல்லையா?"
"நீங்கள் எப்போதாவது உங்களுக்கும், அப்பாவுக்கும்
DNA Test எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா?"
"தாயை நம்பாதவன்தான் அதைச் செய்வான்."
''உங்களுக்கு மட்டும் தான் தாய் மேல் நம்பிக்கை இருக்குமா?
நாங்கள் தாய்த் திருச்சபையை நம்புகிறோம். அவள் கூறுவதையும் நம்புகிறோம்.''
*. *. *. *. *. *. *. *
விவாதத்தின் (Debate )மூலம் நமது விசுவாச சத்தியங்களை யாருக்கும் புரிய வைக்க முடியாது.
வாக்கு வாதம் வாய்ச் சண்டையில் தான் முடியும்.
விசுவாச சத்தியம் பட்டிமன்றப் பொருள் அல்ல.
நமது விசுவாச வாழ்வின் மூலம் மற்றவர்களின் இருதயத்தைத் தொடுவதன் மூலமே நமது விசுவாசத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்.
வாழ்பவர்களின் வாய்ச் சொல்லுக்கு தான் நம்ப வைக்கும் சக்தி உண்டு.
வாழ்க்கை வேறாகவும் வாய்ப் போதனை வேறாகவும் இருந்தால் நாம் சொல்வதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
இயேசு வாழ்ந்து தான் போதித்தார், வாழ்ந்ததைத்தான் போதித்தார்.
ஆரம்ப காலத்தில் இயேசுவின் பன்னிரு சீடர்களும் அப்படித்தான் போதித்தார்கள்.
இப்போது நாமும் அப்படிச் செய்தால் தான் நமது நற்செய்தி அறிவிப்புப் பணி வெற்றி பெறும்.
நாம் தாய்த் திருச்சபையின் போதனையை விசுவசிக்கிறோம்.
விசுவசித்தபடி வாழ வேண்டும்.
நாம் வாழ்வதைப் பார்த்து மற்றவர்கள் பின் பற்ற வேண்டும்.
பைபிள் மட்டும் போதும் என்று கருதும் நண்பர்களோடு வாக்குவாதம் செய்யக்கூடாது.
நாம் பைபிள் வாசிக்க வேண்டும்,
வாழ்வதற்காக, தர்க்கம் செய்வதற்காக அல்ல.
நற்செய்தியைப் போதிக்கும் போது இதயத்தைத் தொடும் படி போதிக்க வேண்டும்.
*. *. . *. . *. *. *
கடவுளுக்கு ஆதாரம் கடவுள்தான்.
விசுவாசத்துக்கு ஆதாரம் விசுவாசம்தான்.
பைபிளை வாசிக்கும்போது கடவுளைப் பற்றிய அறிவு கிடைக்கிறது.
ஆனால் அறிவு விசுவாசம் அல்ல.
நாமும் இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களைப் பள்ளியில் படித்திருகிறோம்.
தேர்வு எழுதி மதிப்பெண்களும் பெற்றிருக்கிறோம்.
ஆனால் அவற்றை நாம் விசுவசிக்கவில்லையே!
மகாத்மா காந்தி கூட பைபிளைப் படித்திருக்கிறார்.
ஆனால் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்ளவில்லையே!
அறிவு வேறு, விசுவாசம் வேறு.
என்னுடைய அம்மாவுக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாது.
ஆனால் அவர்களைப் போன்ற ஒரு விசுவாசியை நான் எங்கும் பார்த்ததில்லை.
நம்மை விட சாத்தானுக்கு கடவுளைப் பற்றி அதிக அறிவு இருக்கும். ஆனால் அவன் விசுவாசி ஆக முடியாது.
இயேசுவை அறிவது விசுவாசம் அல்ல. இயேசுவை வாழ்வதுதான் விசுவாசம்.
ஆகவே நற்செய்தியை அறிவித்தல் என்றால் நற்செய்தியை அறிய வைப்பது அல்ல, நற்செய்தியை வாழ வைப்பது.
அன்பு இல்லாமல் வாழ முடியாது.
யாருக்காக வாழ்கிறோமோ அவருக்கு நமது இதயத்தைக் கோடுக்க வேண்டும்.
ஏனெனில் இதயம் தான் அன்பின் இருப்பிடம்.
அறிவு மனதில் இருக்கும், அன்பு இதயத்தில் இருக்கும்.
விசுவாச வாழ்வு அறிவின் வாழ்வல்ல, அன்பின் வாழ்வு.
அறிவு அதிகமானால் ஆணவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அன்பு அதிகமானால் நம்மை அன்பருக்காகத் தியாகம் செய்வோம்.
இறைவனுக்கு நம் முழு இதயத்தைக் கொடுப்போம்.
இறைவனைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்திருக்கிறோம் என்பது அல்ல கிறிஸ்தவ வாழ்வு,
எந்த அளவுக்கு வாழ்ந்திருக்கிறோம் என்பதில் தான் கிறிஸ்தவ வாழ்வின் மேன்மை இருக்கிறது.
இயேசுவுக்கு நம் இதயத்தில் இடம் கொடுப்போம்,
ஆனால் அது போதாது,
இதயத்தையே கொடுப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment