அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, "இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(மாற்கு நற்செய்தி 12:43)
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.
செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.
அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, "இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். " என்றார்.
(மாற்கு நற்செய்தி 12:41,42,43)
கடவுள் அகில உலகத்துக்கும் அதிபர். உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அவரால் படைக்கப்பட்டவை. அனைத்தும் அவருக்கு உரியவை.
நாமும் நமக்குரிய அனைத்தும் அவருக்கு உரியவை.
நம்மிடம் இருப்பதில் எதுவும் நமக்கு உரியது அல்ல.
அவருக்கு உரியதை ஏன் அவருக்கே காணிக்கையாகக் கொடுக்கிறோம்?
அவருக்கு தேவை என்பதாலா கொடுக்கிறோம்?
அவர் எல்லாம் உடையவர்.
அவர் நினைத்தால் போதும், நினைத்தது அவர் கையில் இருக்கும்.
ஒரே சொல்லால் உலகைப் படைத்தவர் அவர்.
எல்லாம் உள்ள அவருக்கு நாம் ஏன் காணிக்கை கொடுக்கிறோம்?
அம்மா நமக்கு ஒரு முத்தம் கொடுக்கிறாள்.
நாம் பதிலுக்கு முத்தம் கொடுக்கிறோம்.
எதற்கு?
நமது அன்பைக் காண்பிப்பதற்கு.
முத்தம் அன்பின் அடையாளம்.
கடவுள் நம்மைப் படைத்தது அவர் நம்மீது கொண்டுள்ள அன்பின் அடையாளம்.
அவர் நமக்குத் தருவதெல்லாம் அவரது அன்பின் அடையாளம்.
நாம் கொடுக்கும் காணிக்கை நமது அன்பின் அடையாளம்.
இரு உள்ளங்களுக்கு இடையில் உள்ள இணைப்பு தான் அன்பு.
அன்பின் தாராளத்துக்கு ஏற்ப கொடுப்பதன் தாராளமும் இருக்கும்.ன
தாராளம் பொருளில் அல்ல, உள்ளத்து அன்பில்.
ஏழைக் கைம்பெண் காணிக்கையாகப் போட்டது இரண்டு காசுகள் தான்.
ஆனால் அவளிடம் இருந்ததே அவ்வளவு தான்.
உள்ளம் நிறைந்த அன்பினால் தன்னிடம் உள்ளதை எல்லாம் போட்டு விட்டாள்,
அவள் உள்ளத்தை முழுவதும் அப்படியே போட்டு விட்டாள்.
இங்கே காணிக்கை என்பது காசல்ல, உள்ளம்.
ஏழைக்குக் கொடுப்பவரும் அவர்தான்,
வசதி படைத்தவர்களுக்குக் கொடுப்பவரும் அவர்தான்.
ஏழைக் கைம்பெண்ணின் அன்றைய இருப்பு இரண்டு பைசா தான்.
செல்வந்தனிடம் இரண்டு இலட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஏழைக்கு நிகராகக் கொடுக்க வேண்டுமென்றால் செல்வந்தன் இரண்டு இலட்சம் கொடுக்க வேண்டும்.
கடவுள் கொடுப்பவரின் தாராள குணத்தைப் பார்க்கிறார்.
இரண்டு பைசா கொடுக்கும் ஏழை நூற்றுக்கு நூறு தாராள குணம் உள்ளவள்.
செல்வந்தன் கொடுக்கும் காணிக்கை யின் அளவுக்கு ஏற்ப அவனது தாராள குணத்தின் சதவீதம் மாறும்.
இயேசு இவ்வளவு போடுங்கள் என்று சொல்லவில்லை, தாராள மனதுடன் போடுங்கள் என்கிறார்.
தாராள மனதில் அளவு அதற்குக் காரணமான அன்பின் அளவைக் காட்டும்.
தேர்வில் நூறு சதவீதம் மதிப்பெண் வாங்குபவன் கெட்டிக்காரன்.
எண்பது சதவீதம் மதிப்பெண் வாங்குபவனும் கெட்டிக்காரன்தான்.
இருவருள் ஒருவன் அதிக கெட்டிக்காரன்.
ஆனாலும் இருவரும் கெட்டிக்காரர்கள் தான்.
ஆனால் பத்து சதவீதம் வாங்குபவன்?
செல்வந்தன் பத்து சதவீதம் மதிப்பெண் வாங்குபவனைப் போல் காணிக்கை போடக்கூடாது.
கடவுளை முழு இருதயத்தோடு நேசிப்பவர்கள் முழு மனதோடு காணிக்கை போடுவார்கள்.
கோவிலில் போடுவது மட்டும் காணிக்கை அல்ல, ஏழைகளுக்கு உதவுவதும் காணிக்கை தான்.
ஏழைகளும் இறைவனின் ஆலயங்கள் தான்.
கோவிலில் போடும் காணிக்கையை கடவுள் எடுத்துச் செலவழிப்பதில்லை, அது ஆலயப் பணிகளுக்காகத்தான் செலவழிக்கப் படுகிறது.
ஏழைகளுக்கு உதவுவதும் பரிசுத்த ஆவியின் ஆலயங்களுக்காகத்தான் செலவழிக்கப்படுகிறது.
ஆகவே தேவையில் உள்ள ஏழைகளுக்கும் தாராளமாக உதவுவோம்.
ஏழைகளுக்கு கொடுப்பதை இறைவனுக்கு தான் கொடுக்கிறோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment