இயேசு, அவரைப் பார்த்து, "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
(லூக்கா நற்செய்தி 17:17)
பத்து தொழுநோயாளர்கள் தூரத்தில் நின்று கொண்டே,
இயேசுவை நோக்கி,
"ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்" என்று உரக்கக் வேண்டினார்கள்.
அந்தக் காலத்திய வழக்கப்படி அவர்கள் இயேசுவின் அருகில் வரவில்லை.
இயேசு அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்றார்.
அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.
போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.
அவர்களுள் சமாரியரான ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் வந்தார்;
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார்.
இயேசு, அவரைப் பார்த்து, "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? என்று கேட்டார்.
இயேசு அவர்களைத் தன்னிடம் வரச் சொல்லவில்லை. குருக்களிடம் தான் போகச் சொன்னார்.
ஆனாலும் ஒருவர் நன்றி உணர்வின் மிகுதியால் இயேசுவிடம் வந்து
தன்னைக் குணமாக்கியமைக்கு அவருக்கு நன்றி கூறினார்.
இவ்வளவுக்கும் அவர் ஒரு யூதர் அல்ல, சமாரியர்.
எதற்காக நற்செய்தி ஆசிரியர் இந்திகழ்வைத் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்?
நாம் வாசிக்க.
வாசித்து?
தியானித்து, அதன்படி வாழ.
அநேக சமயங்களில் நாம் நற்செய்தியை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்.
பிரசங்கத்தைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்.
திருப்பலியைக் காண்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்.
திரு விருந்தை உண்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்.
திருமணத்தைத் தாலி காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறோமா?
உணவைச் சமைப்பததோடு நிறுத்திக் கொள்கிறோமா?
உடல் சார்ந்த வாழ்வை நடைமுறை ரீதியாக வாழ்கிறோம்.
ஆனால் ஆன்மீக வாழ்வை ஏற்றுக் கொள்கிறோம், ஏற்றுக் கொண்டதை நடைமுறைப் படுத்துவதில்லை.
L. K. G படிக்க பள்ளிக்கூடம் போன பிள்ளைக்கு ஆசிரியை நான்கே நான்கு வார்த்தைகளைச் சொல்லக் கற்றுக் கோடுத்தார்.
Please, thanks, sorry. OK.
பிள்ளை வீட்டுக்கு வந்ததும் அம்மா முன் கையை நீட்டி,
"Pleaseமா.'' என்றான்.
அம்மா கையில் ஒரு முத்தம் கொடுத்தாள்.
பிள்ளை, "Thanksமா. என்றான்.
அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
''என் புள்ள என்னமா படிச்சிருக்கு!"
பிள்ளையை வாரி எடுத்து முத்தமாரி பொழிந்தாள்.
நாம் மேற்படிப்பு படித்து விட்டோம்.
விண்ணகத் தந்தையைப் பார்த்து,
"Please பா" என்று கேட்கத் தெரிகிறது.
"Thanks பா" என்று சொல்லத் தெரியவில்லை.
அந்தச் சின்னக் குழந்தைக்கு இருக்கும் அறிவு அநேகருக்கு இல்லை.
கடவுளின் நித்திய வாழ்வை ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம்.
"அன்பு."
கடவுள் நித்திய காலமாக அன்பு செய்கிறார்.
அன்பு மட்டும் தான் அவரது வாழ்க்கை.
அவரது ஒவ்வொரு செயலும் அன்பின் விளைவு.
அவரால் படைக்கப்பட்ட இயற்கை நம் மீது அவர் கொண்டுள்ள அன்புக்கு சான்றாக விளங்குகிறது.
அவரது அன்பின் விளைவாகிய நமது வாழ்வு "நன்றி '' என்ற சொல்லுக்கு இலக்கியமாய்த் திகழ வேண்டும்.
அவரது அன்புக்கு நன்றியாய் நாம் வாழ வேண்டும்.
நமது சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் நன்றி பிரதிபலிக்க வேண்டும்.
என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்.
ஒன்றும் இல்லாமல் இருந்த நமக்கு உருக் கொடுத்த அவருக்கு நன்றி கூற வேண்டும்.
நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நன்றியின் வினாடியாக இருக்க வேண்டும்.
''இறைவா, இன்றைய இரவில் நிம்மதியான தூக்கத்தைத் தந்தமைக்காக நன்றி கூறுகிறேன்.
இன்றைக்கு எனது ஒவ்வொரு சிந்தனையும் சொல்லும் செயலும் நன்றியின் விளைவாக இருக்கும்."
என்ற உறுதிப்பாட்டுடன் நாளை ஆரம்பித்தால் அன்றைய நாள் பாவம் அற்றதாகவும், பரிசுத்தமானதாகவும் இருக்கும்.
நன்றி கூறினால் மட்டும் போதாது.
நன்றியாக வாழ வேண்டும்.
அன்பால் நம்மைப் படைத்த இறைவன் விருப்பப்படி வாழ்வதுதான் நன்றி வாழ்க்கை.
இறையன்புடனும் பிறர் அன்புடனும் வாழ வேண்டும் என்பதுதான் கடவுள் விருப்பம்.
நம்மில் உள்ள இறைவனின் சாயலுக்குப் பழுது ஏற்படாமல் வாழ வேண்டும்.
இறைவன் நல்லவர்.
அவர் என்ன செய்தாலும் அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.
ஆகவே என்ன நடந்தாலும் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.
கேட்டது கிடைத்ததா,
"இறைவா உமக்கு நன்றி."
கிடைக்கவில்லையா,
"இறைவா உமக்கு நன்றி."
சுமக்க சிலுவை வருகிறதா,
"இறைவா உமக்கு நன்றி."
மரணம் நெருங்கி விட்டதா,
"இறைவா உமக்கு நன்றி."
நன்றி வாழ்வில் துன்பங்கள் வரலாம்,
ஆனால் மகிழ்ச்சி குறையாது.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment