Thursday, November 21, 2024

"இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள்."(லூக்கா நற்செய்தி 20:36)

 "இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள்."
(லூக்கா நற்செய்தி 20:36)

மரணம் ஒரு முறை தான் வரும், அதுவும் இவ்வுலகில் மட்டும் தான்.

விண்ணக வாழ்வு நித்திய வாழ்வு, நிலையான வாழ்வு.

இவ்வுலகில் நாம் மரணம் அடைந்த பின் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நமது உடலை மண்ணிலேயே விட்டு விட்டு 

நமது ஆன்மா மட்டும் விண்ணகம் செல்லும்.

நமக்கு முன் விண்ணகம் சென்று விட்ட நமது உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் இறைவனில் வாழ்வதைக் கண்டு மகிழும்.

உலக இறுதியில் சடப் பொருளாக மண்ணில் போட்டு விட்டு வந்த நமது உடல் ஆன்மீக உடலாக மாறி உயிர் பெறும். நமது ஆன்மா ஆன்மீக உடலோடு சேர்ந்து கொள்ளும்.

விண்ணக வாழ்வு இடத்துக்கும் நேரத்துக்கும் அப்பாற்பட்டது.

மனிதர்களான மோட்சவாசிகள் அனைவருமே ஆன்ம சரீரத்தோடு நம் விண்ணக வாழ்வை வாழ்வோம்.

ஆனால் உலகில் வாழ்ந்தது போல் வாழ மாட்டோம்.

சம்மனசுக்களைப் போல் வாழ்வோம்.

சம்மனசுக்களுக்கு இரத்த உறவு கிடையாது.

இறை உறவு மட்டுமே இருக்கும்.

நமக்கும் அப்படித்தான்.

கணவனும் மனைவியும் இருப்பர், ஆனால் பூமியில் இருந்த உறவு அங்கே இருக்காது.

எல்லோரும் இறைவனில் சகோதரர் சகோதரிகளாக வாழ்வோம்.

விண்ணக வாழ்வில் உடல் சார்ந்த சிற்றின்பத்துக்கு இடமில்லை.

ஆன்மீகம் சார்ந்த பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

"ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. 

இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே."
(லூக்கா நற்செய்தி 20:35,36)

விண்ணுலகில் பூமியில் உள்ளது போல எந்த வேலையும் இருக்காது.

நித்திய காலமும் அன்பு செய்வதும், இறைவனைப் புகழ்வது மட்டுமே நமது வேலையாக இருக்கும்.

கடவுள் நித்திய காலமும் அன்பு செய்து வாழ்வது போல் நாமும் வாழ்வோம்.

கடவுள் நித்திய காலமும் பேரின்பத்தில்  வாழ்வது போல் நாமும் வாழ்வோம்.

ஆனால் பேரின்பத்தின் அளவு மாறுபடும்.

கடவுள் அளவில்லாத பேரின்பத்தில் வாழ்கிறார்.

நாம் அளவுள்ளவர்கள்.

நமது ஆன்மீக வாழ்வின் அளவும் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

இயேசுவின் அன்னை மரியாள் அருள் நிறைந்தவளாய் உலகில் வாழ்ந்தாள்.

ஆகவே அவளது பேரின்பம் அனைத்து மக்களின் பேரின்பத்தை விட அதிகமானதாய் இருக்கும்.

மற்றவர்களின் பேரின்பம் அவர்கள் பூவுலகில் வாழும் போது வாழ்ந்த ஆன்மீக வாழ்வின் அளவுக்கு ஏற்றபடி இருக்கும்.

ஆனாலும் ஒவ்வொருவரும் நிறைவான பேரின்பத்தை அனுபவிப்பார்கள்.

வெவ்வேறு அளவுள்ள பாத்திரங்கள் அளவில் மாறுபட்டாலும் அவை நிறைய தண்ணீர் ஊற்றலாம்.

ஒரு படி அளவுள்ள பாத்திரம் ஒரு படி நீரில் நிறைந்து விடும்.

பத்து படி அளவுள்ள பாத்திரம் பத்து படி நீரில் நிறைந்து விடும்.

கிணற்றிலிருந்து நீர் எடுக்கும்போது அதிக நீர் எடுக்க ஆசைப்படுவோர் பெரிய பாத்திரத்தைக் கொண்டு போக வேண்டும்.

அதேபோல் விண்ணுலகில் அதிக பேரின்பத்தை அனுபவிக்க ஆசைப் படுவோர் பூவுலகில் வாழும் போது இறை அருளால் தங்கள் ஆன்மாவாகிய பாத்திரத்தை பெரியதாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆன்மாவின் கொள்ளளவு பூமியில் அவரவர் வாழும் ஆன்மீக வாழ்வின் அளவைப் பொறுத்து மாறும்.

ஆகவே நாம் பூமியில் வாழும் போது லௌகீகத்தை முற்றிலும் துறந்து ஆன்மீகத்தில் வளர்வோம்.

 நாம் உணவைக் குறைத்து நோன்பிருக்கும் ஒவ்வொரு முறையும் நமது ஆன்மாவுக்குள் அருள் நீர் விழுந்து கொண்டேயிருக்கும்.

'அருள் நிறைந்த மரியே' செபத்தைச் சொல்லும் ஒவ்வொரு முறையும்,

செபமாலை சொல்லும் ஒவ்வொரு முறையும்,

இயேசு இரட்சியும் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்,

நற்கருணை நாதரைச் சந்திக்கும் 
ஒவ்வொரு முறையும்,

இதைப்போன்ற சிறிய சிறிய செப முயற்சிகள் செய்யும் ஒவ்வொரு முறையும்

ஆன்மாவுக்குள் இறை அருள் வந்து கொண்டிருக்கும், ஆன்மாவின் கொள்ளளவு பெரியதாகிக் கொண்டேயிருக்கும்.

வீணான கற்பனையில் செலவழிக்கும் நேரத்தை சிறிய சிறிய செப முயற்சிகளில் செலவழிக்கலாமே.

மனது வைத்தால் விண்ணுலக பேரின்பத்தை இவ்வுலகிலேயே ஈட்டுவது மிக எளிது.

புனித சவேரியார் உலகம் முழுவதும் சுற்றிச் செய்த வேத போதக சாதனையை 

புனித சிறு மலர் தெரசா நான்கு சுவர்களுக்கு உட்பட்டு வாழ்ந்த செப வாழ்வாலேயே சாதித்து விட்டதாகக் கூறுவார்கள்.

ஒவ்வொரு ஒறுத்தல் முயற்சியையும் ஆன்மாக்கள் மனம் திரும்புவதற்காக ஒப்புக் கொடுத்தாள்.

இல்லறத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமும் அதை எளிதாகச் சாதிக்கலாம்.

ஒரு வகையில் நமக்கு தான் வாய்ப்பு கள் அதிகம் கிடைக்கும்.

யாராவது நமது மனதை நோகச் செய்து விட்டார்களா?

"ஆண்டவரே பாவிகள் மனம் திரும்ப உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்."

சாப்பாடு ருசியாய் இல்லையா?

"ஆண்டவரே பாவிகள் மனம் திரும்ப உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்."

ஒரு நேர Tea யை ஒறுத்து,

"ஆண்டவரே பாவிகள் மனம் திரும்ப உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்."

கருத்தை மாற்றிக் கொள்ளலாம்.

"ஆண்டவரே நான் ஆன்மீக வாழ்வில் வளர உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்."

இப்படி நாளும் ஆயிரக்கணக்கான செப சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

ஆயிரக்கணக்கான கருத்துகளும் கிடைக்கும்.

ஒரு வகையில் துறவிகளை விட நமக்கு தான் அதிக சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவோம்,

ஆன்மீக வாழ்வை வளமாக்கி நிலை வாழ்வின் பேரின்பத்தை அதிகரிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment