மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.
(லூக்கா நற்செய்தி 14:13)
விருந்து என்பது உணவு மட்டுமல்ல.
அன்பால் விளைந்த நட்பு, இரக்கம், பகிர்வு ஆகியவற்றின் அடையாளம் தான் விருந்து.
நமது இல்ல விழாக்களின் போது நம்முடைய அன்புக்கும், இரக்கத்துக்கும் உரியவர்களுக்கு மட்டும் தான் அழைப்புக் கொடுப்போம்.
யாரோடு நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோமோ அவர்களுக்கு அழைப்பு கொடுப்போம்.
நம்முடைய அழைப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
ஒருவர் அவரது வீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார் என்று வைத்துக் கொள்வோம்.
நாம் விழாவுக்குச் சென்று அன்பளிப்பு கொடுத்திருப்போம்.
அது நமக்குத் திரும்பி வர வேண்டும்.
ஆகவே அவருக்கு அழைப்புக் கொடுப்போம்.
சிலர் தங்களை அழைக்கக் கூடியவர்களை மட்டும் அழைப்பார்கள்.
இது எதிர்பார்த்து அழைப்பது.
இதுவும் நிபந்தனைக்கு உட்பட்ட அழைப்பு.
கடவுள் எல்லோரையும் நிபந்தனை இன்றி அன்பு செய்கிறார்.
அவர் தன்னை வெறுப்பவர்களையும் அன்பு செய்கிறார்.
லூசிபெரை அன்பு செய்த கடவுள் அவன் சாத்தானாக மாறிய பின்பும் அன்பு செய்து கொண்டுதானிருக்கிறார்.
ஏனெனில் கடவுளால் மாற முடியாது.
மோட்சத்தில் உள்ளவர்களை மட்டுமல்ல நரகத்தில் உள்ளவர்களையும் அன்பு செய்கிறார்.
அவர்களால் பதிலுக்கு அன்பு செய்ய முடியாது.
விருந்துக்கு அழைக்கும் போது பதிலுக்கு அழைக்க முடியாதவர்களாகப் பார்த்து அழையுங்கள் என்கிறார்.
ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையுங்கள், அவர்கள் பதிலுக்கு அழைக்க மாட்டார்கள் என்கிறார்.
அது அவர்கள் மீது நமக்கு இருக்கும் நிபந்தனை அற்ற அன்பைக் காட்டும்.
நாமும் கடவுளைப் போல அனைவரையும் நிபந்தனை இன்றி அன்பு செய்ய வேண்டும்.
நண்பர் ஒருவர் தினமும் மதிய உணவை ஏதாவது ஒரு நண்பரோடு பகிர்ந்து உண்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் காலை 11 மணிக்கெல்லாம் தெருவுக்கு வந்து விட்டார், முதலில் வரும் ஆளைச் சாப்பிட அழைத்து வர.
பிற்பகல் 1.30 மணி வரை யாரும் வரவில்லை.
1.30 க்கு ஒருவர் வந்தார். அவரைச் சாப்பிட அழைத்தார். அவருக்கும் நல்ல பசி, அழைத்தவுடன் வந்து விட்டார்.
சாப்பிட ஆரம்பிக்குமுன், "எழுந்திருங்கள், கடவுளை நோக்கி செபித்து விட்டு சாப்பிடுவோம்."
"எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது."
"நமக்கு உணவு தருவது கடவுள். அவருக்கு நன்றி சொல்லி விட்டுதான் சாப்பிட வேண்டும்."
"இல்லாதவருக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?"
"அப்படியானால் நீங்கள் போகலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்குச் சாப்பாடு கிடையாது."
அவர் போய்விட்டார்.
நண்பர் திரும்பவும் தெருவுக்கு வந்தார், ஆள் பார்க்க.
இயேசு வந்து கொண்டிருந்தார்.
"ஆண்டவரே, வாருங்கள்."
"இன்னும் சாப்பிடவில்லையா?"
"இல்லை ஆண்டவரே."
நண்பர் நடந்ததைச் சொன்னார்.
"இங்கே பார், அந்த ஆளுக்கு 50 வயது ஆகிறது. என்னை நம்பாத அவருக்கு நான் 50 ஆண்டுகளாக சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதற்காகத்தான் உன்னிடம் அனுப்பினேன்.
நீ என் விருப்பத்தை நிறைவேற்றவில்லை.
ஒரு நேர உணவு கொடுக்க உனக்கு மனதில்லை."
"ஆண்டவரே, நீங்கள் சாப்பிட வாருங்கள்."
"நீ போய் அவனைத் தேடிப்பிடித்து அழைத்து வா, எல்லோரும் சாப்பிடுவோம்."
நண்பர் அவனைத் தேடிப் போயிருக்கிறார்.
"இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். "
(மத்தேயு நற்செய்தி 5:45)
விண்ணகத் தந்தையைப் போல நாமும் நிபந்தனை இன்றி அனைவரையும் அன்பு செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment