Tuesday, November 5, 2024

"என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. (லூக்கா நற்செய்தி 14:26)

 "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. 
(லூக்கா நற்செய்தி 14:26)

அன்பே உருவான கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்தார்.

ஆகவே நம்மில் இறையன்பு பிரதிபலிக்க வேண்டும்.

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அன்பு பிரதிபலிக்க வேண்டும்.

கடவுள் தன்னை நேசிப்பது போல நம்மை நேசிக்கிறார், அதாவது, அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்.

நம்மை அளவில்லாத விதமாய் நேசிப்பதால்தான் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய தனது ஒரே மகனை உலகுக்கு அனுப்பினார்.

நாம் அளவுள்ளவர்கள். எவ்வளவு முயன்றாலும் அளவில்லாத விதமாய் எதையும் செய்ய முடியாது.

அளவில்லாத விதமாய் நேசிக்கவும்  முடியாது.

நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பு செய்ய வேண்டும்.

யாரை அன்பு செய்ய வேண்டும்?

முதலில் நம்மைப் படைத்தவரை.

அடுத்து நம்மை.

அடுத்து நம்மைப் போல் நமது அயலானை.

அன்பு ஒன்று தான். 
அன்பு ஒரு பண்பு, பொருள் அல்ல.

உலகப் பொருட்களை அளப்பதைப் போல அன்பை அளக்க முடியாது.

அளக்க முடியாதபோது எப்படி எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய்வது?

இறைவன் மீது நாம் கொண்டுள்ள அன்பு நம்மீதும், நமது அயலான் மீதும் கொண்டுள்ள அன்பை விட அதிகமானது என்று எப்படிக் கண்டு பிடிப்பது?

கடவுளை நமது முழு இருதயத்தோடு அன்பு செய்ய வேண்டும்.

அதாவது நமது இதயத்தை முழுவதுமாக கடவுளுக்கு ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.

நமது அயலானுக்கு?

நமது இதயத்துக்குள் கடவுள் இருப்பார். கடவுளுக்குள் நமது அயலான் இருப்பார்.

கடவுள் வழியாகத்தான் நமது அயலானை நேசிக்க வேண்டும்.

அயலான் மீது நமக்கு இருக்கும் அன்பு நமது இறையன்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

கடவுளை நேசிக்கும் போது நமது ஆன்மா பரிசுத்தம் அடையும்.

நமது பிறரன்பு பரிசுத்தத் தனத்துக்கு எதிராகச் சென்று விடக்கூடாது.

மனைவியை நேசிக்கிறோம்.
மனைவி பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள புடவை கேட்கிறாள்.

நம்மிடம் இருப்பதோ ஐயாயிரம் ரூபாய். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆள் அவனுக்குக் காரியம் சாதிக்க ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் தருகிறான்.

இலஞ்சத்தை வாங்குவது இறையன்புக்கு எதிரானது.

இறைவனை முழு இருதயத்தோடு நேசித்தால் அதற்கு எதிரான எதையும் யாருக்கும் செய்ய மாட்டோம்.

சேலை வாங்குவதற்காக லஞ்சம் வாங்க மனைவி வற்புறுத்தினால்,

"இறையன்புக்கு எதிராகப் பாவம் செய்து உன் ஆசையை நிறைவேற்றினால் அது பெரிய பாவம்.‌

 ‌இறைவன் என் இதயத்தில் இருக்கிறார். 

நீயும் இருக்கிறாய். 

முதலிடம் அவருக்கு தான். 

அவர் மனதை நோகச் 
செய்யாமல் உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். 

உன்னைத் திருப்திப் படுத்துவதற்காக அவர் மனதை நோகச் செய்ய மாட்டேன்.

தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், என் உயிரையுமே விட கடவுளையே மேலாகக் கருதுகிறேன்.

ஏனெனில் நான் அவருட சீடன்."

உலகம்தான் நமக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது, 

நாம் உலகத்துக்காகப் படைக்கப்பட்டவில்லை.

படைத்தவர் இறைவன்.

"உனக்கு நான் வேண்டுமா?
உலகம் வேண்டுமா?"

என்று அவர் கேட்டால் நாம் துணிந்து சொல்ல வேண்டும்,

''ஆண்டவரே, எனக்கு நீர்தான் வேண்டும்.

எனக்கு நீர்தான் எல்லாம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment