நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.
(லூக்கா நற்செய்தி 16:8)
ஒரு ஆங்கிலக் கட்டுரையை வீட்டில் வைத்து மனப்பாடம் செய்து, மனப்பாடம் செய்ததை ஒரு தாளில் எழுதி, அதைப் பாராமல் எழுதியதற்கு அத்தாட்சியாக தந்தையின் கையெத்தைப் பெற்று வரும்படி மாணவர்களிடம் கூறியிருந்தேன்.
மறுநாள் வகுப்பு ஆரம்பமானதும் வழக்கமாக வீட்டுப் பாடம் எழுதாத ஒரு பையனை எழுப்பி வீட்டில் எழுதிய கட்டுரையைக் கேட்டேன்.
உடனே கட்டுரை எழுதப்பட்ட தாளை எடுத்துத் தந்து விட்டான்.
அடுத்த பையன் புத்தகப் பைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
"சார், என் பேப்பரைக் காணவில்லை."
''சரி, தேடி எடு" என்று கூறிவிட்டு மற்ற மாணவர்களிடம் வாங்கிக் கொண்டிருந்தேன்.
பேப்பரைக் காணவில்லை என்று கூறிய பையன் நின்று கொண்டிருந்தான்.
"அப்போ நீ எழுதவில்லை."
"எழுதிவிட்டேன், பேப்பரைக் காணவில்லை." என்று திரும்பவும் சொன்னான்.
அவன் வழக்கமாக நன்கு படிக்கக்கூடிய பையன்.
அப்போது முந்திய பையன் மீது சந்தேகம் வந்தது.
அவன் தந்த பேப்பரை எடுத்துப் பார்த்தேன்.
ஒரு உண்மை புரிந்தது. எழுத்தும் அவனுடையதில்லை, அடியிலுள்ள கையெழுத்தும் அவனுடைய அப்பாவுடையதில்லை.
பிரம்பை கையில் எடுத்துக் கொண்டு, "உன்னுடைய அப்பா பெயர் என்ன?"
வேறு வழியில்லாமல் தான் அடுத்தவன் பேப்பரை எடுத்துத் தந்ததை ஏற்றுக் கொண்டான்.
இப்போது ஒன்று புரிந்தது.
ஒரு மக்கு பையனுக்கு திருடுவதில் இருந்த திறமை நன்கு படிக்கிற பையனுக்கு தன் பொருளைக் காப்பாற்றுவதில் இல்லை.
இதேபோல் தான் உலகைச் சார்ந்தவர்களுக்கு பாவம் செய்வதில் உள்ள உற்சாகம்
இறை மக்களுக்கு புண்ணியம் செய்வதில் இல்லை.
மனிதன் அறிவியலில் காட்டும் திறமையை ஆன்மீகத்தில் காட்டவில்லை.
அவனுடைய புத்தியை நூறு சதவீதம் பயன்படுத்தி
பெரு வெடிப்பு (Big Bang) தான் பிரபஞ்சம் தோன்றக் காரணம் என்று யூகித்திருக்கிறான்.
பெரு வெடிப்பு ஒரு கோட்பாடு மட்டுமே, அதை நிரூபிக்க மனிதனால் முடியாது.
அவனுடைய புத்தியில் ஒரு சதவீதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதற்குக் காரணம் கடவுள் என்பதைத் கண்டுபிடித்திருப்பான்.
தனது புத்தியைப் பயன்படுத்தி உடல் சார்ந்த உண்மைகளைக் கண்டு பிடித்திருக்கும் மனிதனால்
புத்திக்குக் காரணமே அவனது ஆன்மா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
காரணமின்றி காரியமில்லை என்று கண்டு பிடித்திருக்கும் மனிதனால்
ஆதிகாரணத்தைக் கண்டு பிடிக்க முயலவில்லை.
லௌகீகத்தில் உலகியல்வாதிகளுக்கு இருக்கும் ஆர்வம்
ஆன்மீகத்தில் இறைவனாம் ஒளியின் மக்களுக்கு இல்லையே என்று இயேசு வருந்துகிறார்.
ஆயிரம் ரூபாய்க்காக இரவு முழுவதும் விழித்திருக்க முடியும் மனிதனால்
காலைத் திருப்பலிக்குக் காலை ஆறு மணிக்கு எழுந்திருக்க முடியவில்லை.
வருமானம் முழுவதையுமே டாஸ்மாக் கடைக்குக் கொடுக்க முடிந்த மனிதனுக்கு
வருமானத்தில் நூறில் ஒரு பங்கைக் கூட கோயில் காரியங்களுக்காகக் கொடுக்க மனதில்லை.
T.V முன்னால் மணிக் கணக்கில் விழித்திருக்கும் மனிதனுக்கு திருப்பலி முழுவதும் விழித்திருக்க முடியவில்லை.
காலையில் எழுந்ததும் Cell phoneஐ நோண்டும் மனிதனுக்கு
பைபிளை எடுக்க முடியவில்லை.
தலைவலி வந்தவுடன் மாத்திரையைப் போடும் மனிதனுக்கு
பாவம் செய்தவுடன் பாவ சங்கீர்த்தனம் செய்ய மனம் வருவதில்லை.
WhatsApp ல் ஒரு ஜோக் வந்தால் உடனே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் மனிதனுக்கு
தான் தினமும் வாசிக்கும் இறைச் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மனம் வருவதில்லை.
பிறக்கிற குழந்தைக்கு உடலோடு ஆன்மாவும் இருக்கிறது.
குழந்தையின் உடல் நலனில் காட்டும் அக்கறையை அதன் ஆன்மீக நலனில் காட்டுகிறோமா?
கொசுக்கடித்தால் மலேரியா காய்ச்சல் வரும் என்று பயந்து பிள்ளையைக் கொசு வலைக்குள் படுக்கப் போடுகிறோம்.
கொசுக் கடிப்பது உடல் நலனுக்குக் கேடு என்று தெரியும் பெற்றோருக்கு எப்போதும் TV முன்னாலேயே உட்கார்ந்திருப்பது பிள்ளையின் கண்ணுக்கும் கருத்துக்கும் கேடு என்பது ஏன் தெரியவில்லை?
உலகக் காரியங்களில் நாம் காட்டும் ஆர்வத்தை ஆன்மீகக் காரியங்களில் காண்பிப்போம்.
ஆன்மீகத்தில் வளர்வதற்காகத்தான் இவ்வுலகில் வாழ்கிறோம்.
ஆன்மீக வளர்ச்சிக்கு உதவாத எந்த சிந்தனையும் சொல்லும் செயலும் வீண்.
இவ்வுலகில் இறுதிவரை இறையன்பில் வளர்வோம்.
மறுவுலகில் இறையன்பில் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment