Saturday, September 28, 2024

"உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்"". (லூக்கா நற்செய்தி 10:16)

"உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார். " 
(லூக்கா நற்செய்தி 10:16)

 "உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்."

இது நமது ஆண்டவராகிய இயேசு தன் சீடர்களுக்குக் கொடுத்த கட்டளை.

இக்கட்டளை அன்று அவரது பன்னிரு சீடர்களாலும், தொடர்ந்து அவர்களுடைய வாரிசுகளாகிய பாப்பரசர், ஆயர்கள், குருக்களாலும் நிறைவேற்றப் பட்டுக் கொண்டு வருகிறது.

தொடர்ந்து உலகம் முடியும் வரை நிறைவேற்றப்படும்.

 நற்செய்தியை அறிவிப்பது மட்டுமல்ல.

அறிவிக்கப்பட்டவர்கள் நற்செய்தியின் படி வாழ்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதும் அவர்களுடைய பணிதான்.

அறிவிக்கப்பட்டவர்களின் ஆன்மீக வாழ்வில் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதும் அவர்களுடைய  பணிதான்.

அதற்காகத்தான் அவர்களுக்கு மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்கவும், 

ஆன்மீக வாழ்வுக்கான ஆலோசனைகள் கூறவும்,

 திருப்பலி நிறைவேற்றவும்,

 ஆண்டவருடைய திருவுடலை மற்றவர்களுக்கு உணவாகக் கொடுக்கவும்,

மரண வேளையில் அருகில் இருந்து அவர்களை வழியனுப்பி வைக்கவும் 

இயேசு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.

சுருக்கமாகச் சொல்வதானால் 

ஒவ்வொரு குருவும் ஒரு இயேசு.


குருவானவருக்குச் செவி சாய்ப்பவர் இயேசுவுக்கே செவிசாய்க்கிறார்;

 குருவானவரை ஏற்றுக் கொள்பவர் இயேசுவையே ஏற்றுக் கொள்கிறார். 

குருவானவரின் சொற்படி நடப்பவர் விண்ணக தந்தையின் சொற்படியே நடக்கிறார்.

குருவானவருக்கு எதைக் கொடுத்தாலும் இயேசுவுக்கே கொடுக்கிறோம். 

குருவானவரைப் புறக்கணித்தால் இயேசுவையே புறக்கணிக்கிறோம்.

உலகப் பாதையில் நடப்பதற்கும் விண்ணகப் பாதையில் நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

உலகப் பாதை நமது புறக் கண்களுக்குத் தெரியும்.

விண்ணகம் பாதை விண்ணகத் தந்தை வழி காட்டினால்தான் தெரியும்.

விண்ணகப் பாதையில் நமக்கு வழிகாட்டவே விண்ணக தந்தை தனது ஒரே மகனை உலகுக்கு அனுப்பினார். 

அவர் தனது வேலையை தன்னுடைய குருக்கள் மூலம் செய்கிறார். 

நமது பங்குத் தந்தை தான் நமக்கு வழிகாட்டும் இயேசு. 

நமது பங்குத் தந்தை தான் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தின் மூலம் நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்கிறோம்.

அவர் நிறைவேற்றும் திருப்பலி மூலம் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறை மகனையே இறைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கிறோம்.

திருவிருந்தின் போது அவர் கையிலிருந்து இறை மகனையே உணவாகப் பெறுகிறோம்.

அவர் தனது பிரசங்கத்தின் மூலம் நாம் நடக்க வேண்டிய விண்ணகப் பாதையை அறிகிறோம்.

அறிந்தால் மட்டும் போதாது அதன்படி நடக்க வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வின் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்குத் தீர்வு காண குருவானவரையே அணுக வேண்டும்.

குருவிடம் மனம் திறந்து பேச வேண்டும்.

அவரது ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.

பங்குக் குரு காட்டும் வழி இயேசு காட்டும் வழி.

இயேசு காட்டும் வழி நடந்து இயேசுவாக வாழ்வோம்.

அதுதான் விண்ணகத் தந்தையின் சித்தம்.

லூர்து செல்வம்.

Friday, September 27, 2024

"நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாகுக!" என முதலில் கூறுங்கள்."(லூக்கா நற்செய்தி 10:5)

"நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாகுக!" என முதலில் கூறுங்கள்."
(லூக்கா நற்செய்தி 10:5)

இயேசு 72 சீடர்களை நற்செய்தி அறிக்க அனுப்பிய போது அவர்களுக்கு அளித்த அறிவுரைகளில் ஒன்று,

"நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாகுக!" என முதலில் கூறுங்கள்."

மொத்த பைபிள் செய்தியையும் ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் 

"சமாதானம்."

சமம் + தானம் = சம நிலை.

சம நிலையில் உள்ளவர்களுக்கு இடையேதான் சமாதானம் நிலவ முடியும்.

கடவுள் அளவில்லாதவர். மனிதன் அளவுள்ளவன்.

கடவுள் நித்தியர். மனிதன் துவக்கமும் முடிவும் உள்ளவன்.

சமநிலையில் இல்லாத இவர்களுக்குள் எப்படி சமாதானம் நிலவ முடியும்?

அதற்காகத்தான் கடவுள் மனிதனை தன் சாயலில் படைத்து அவனோடு தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

இயல்பில் மனிதன் ஒன்றுமில்லாதவன்.

அவனிடம் இருப்பதெல்லாம் இறைவன் கொடுத்தது.

கடவுள் பரிசுத்தர்.

பரிசுத்தமானவர்களால் தான் அவரோடு சமாதானமாக இருக்க முடியும்.

ஆகவேதான் மனிதனைப் பரிசுத்தமானவனாகப் படைத்தார்.

படைக்கப் படும்போது மனிதனிடம் பாவமில்லை.

மனிதன் பரிசுத்த நிலையில் இருந்ததால் பரிசுத்தரான கடவுளோடு சமாதானமாக இருந்தான்.

ஆனால் பாவம் செய்த வினாடியே மனிதன் பரிசுத்தத் தனத்தை இழந்தான், சமாதானத்தையும் இழந்தான்.

இது பழைய ஏற்பாட்டின் சுருக்கம்.

இழந்த சமாதானத்தை மீட்டுக் கொடுக்கவே இறைமகன் மனுவுரு எடுத்தார்.

மனிதனை விண்ணகம் நோக்கி அழைக்க இறைமகன் மண்ணகம் நோக்கி இறங்கி வந்தார்.

இது புதிய ஏற்பாட்டின் சுருக்கம்.

இறைமகன் மனுவுரு எடுத்த நாளில் வானவர் பாடிய கீதம்,

"உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை உண்டாகுக.

பூமியில் நல் மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக."

ஆக பழைய ஏற்பாட்டில் மனிதன் இழந்த சமாதானத்தை 

புதிய ஏற்பாட்டில் கடவுள் மீட்டுத் தந்தார்.

மீட்டுத் தந்த சமாதானத்தை இழந்து விடாமல் பாதுகாப்பது தான் கிறிஸ்தவ வாழ்க்கை.

இயேசு கொண்டு வந்த சமாதானத்தின் நற்செய்தியை உலகெங்கும் பரப்புவதன் மூலம் 

உலக சமாதானத்திற்காக உழைக்க வேண்டும்.

இயேசுவின் அறிவுரைப்படி
யாரைப் பார்த்தாலும்,

 "உங்களுக்கு சமாதானம் உண்டாகுக." 

என்று வாழ்த்த வேண்டும்.


அதற்கு " பாவ மாசு இல்லாமல் பரிசுத்தராக வாழுங்கள்."    என்பது பொருள்.

பரிசுத்தர்களுக்குதான் பரலோக வீடு.

ஆகவே "சமாதானம் உண்டாகுக"
என்று வாழ்த்தும் போது 

"உங்களுக்கு விண்ணக வீடு உரித்தாகுக" என்று வாழ்த்துகிறோம்.

மற்றவர்கள் நம்மை வாழ்த்தும் போதெல்லாம் நமக்கு நமது விண்ணக வீடு ஞாபகத்துக்கு வரவேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு மத்தியானம் மணி அடித்தவுடன் 

சாப்பாடு ஞாபகத்துக்கு வருவது போல மற்றவர்கள் நம்மை வாழ்த்தும் போதெல்லாம் நமக்கு விண்ணக வீடு ஞாபகத்துக்கு வர வேண்டும்.

நாம் மற்றவர்களை ஒவ்வொரு நாளும் முதல் முறை பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு விண்ணக வீட்டை ஞாபகப் படுத்த வேண்டும்.

நாமும் நம்மை ஆன்மப் பரிசோதனை செய்து 

நமக்கு நாமே விண்ணக வீட்டை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும்.

எப்போதும் விண்ணக வீட்டின் ஞாபகமாக வாழ்ந்தால் பாவம் செய்ய மாட்டோம்.

அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக.

லூர்து செல்வம்.

"நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."(மத்தேயு நற்செய்தி 18:3)

 "நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 18:3)

சவுளிக் கடையிலிருந்து வாங்குகின்ற வேட்டி வாங்கும் போது மிகவும் சுத்தமாக இருக்கிறது.

ஏனெனில் அது இன்னும் அழுக்குகள் நிறைந்த வெளி உலகுக்கு வரவில்லை.

ஆனால் அதை உடுத்திக் கொண்டு ஒருநாள் தெருவில் நடந்தால் சுற்றுப் புறத்தில் உள்ள தூசிகள் பட்டு அழுக்கானதாக மாறி விடும்.

திரும்ப அதைச் சுத்தமானதாக மாற்ற வேண்டுமென்றால் அதைச் சோப்புப் போட்டு, அடித்துத் துவைக்க வேண்டும்.

தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் உள்ளம் பாவ மாசு இன்றி பரிசுத்தமாக இருக்கும்.

பிறக்கும் போதும் அப்படியே இருக்கும்.

ஏனெனில் அதற்கு பாவம் என்றால் என்னவென்றே தெரியாது.

ஆகவே பாவம் செய்ய முடியாது.

ஆகவே சிறு குழந்தைகளின் ஆன்மா மிகவும் பரிசுத்தமானதாக இருக்கும்.

பரிசுத்தமான ஆன்மாவால்தான் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியும்.

ஆனால் குழந்தை வளர வளர அதற்குப் பாவ புண்ணியம் பற்றி விபரம் தெரிய ஆரம்பிக்கும்.

என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற விபரங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

அதன் பிறகுதான் பாவம் அதற்குள் நுழைய ஆரம்பிக்கிறது.

நாம் வளர்ந்தவர்கள்.

பாவம் செய்யக் கூடாது என்று அறிந்தவர்கள், ஆனால் செய்யக் கூடியவர்கள்.

நம்மால் எப்போதும் சிறு பிள்ளைகளாக வாழ முடியாது.

ஆனால் சிறு பிள்ளைகளைப் போல பரிசுத்தமானவர்களாக வாழலாம்.

சிறு பிள்ளைகள் பாவம் செய்யாமல் இருப்பது போல நாமும் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும், அவ்வளவு தான்.

பாவச் சுவையோடு நம்மால் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.

ஆகவே தான் நாம் சிறு பிள்ளைகளைப்போல் மாற வேண்டும் என்று இயேசு கூறுகிறார்.

சிறு பிள்ளைகளின் முக்கியமான குணம் தாழ்ச்சி.

தனது இயலாமையை அது ஏற்றுக் கொள்ளும்.

அதனால் தான் அது முழுக்க முழுக்க தனது பேற்றோரைச் சார்ந்திருக்கும்.

தனது பெற்றோரை அது நம்பும்.

அவர்கள் சொன்னபடி செய்யும்.

சிறு பிள்ளைகளிடம் எளிமை
(Simplicity) இருக்கும்.

திறந்த மனது இருக்கும்.
(Open minded)

கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கும்.,

அனைத்துக்கும் மேலாக மாசு மருவற்ற தன்மை இருக்கும்.

நாம் பிள்ளைகளைப் போல் மாற வேண்டுமென்றால் 

நம்மிடம் தாழ்ச்சி,

 இயலாமையை ஏற்றுக் கொள்ளுதல்,

ஆன்மா சார்ந்த செயல்களுக்கு ஆன்ம குருவை (Spiritual Director)
சார்ந்திருத்தல், 

அவரை நம்புதல்,

அவர் காட்டும் வழியில் நடத்தல்

எளிமை,

திறந்த மனது,

கற்றுக் கொள்ள ஆர்வம்,

மாசு மருவற்ற தன்மை 

போன்ற பண்புகள் நமக்கு இருக்க வேண்டும்.

சிறுவர்களின் பண்புகள் நம்மிடம் இருந்தால்‌ நமது ஆன்மீக வாழ்வு பரிசுத்தமானதாக இருக்கும்.

இந்த பண்புகள் அனைத்தும் நம்மிடம் இருந்தால் தாய்த் திருச்சபையின் சொற்படி நடப்போம்.

சிறுவர்கள் தான் தாயின் அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்குவார்கள்.

சிறுவர்கள் தான் தாயின் அருகிலேயே இருக்க ஆசைப்படுவார்கள்.

சிறுவர்கள் தான் தாயை மகிழ்ச்சிப் படுத்த ஆசைப் படுவார்கள்.

சிறுவர்கள் தான் தாய் மகிழும் போது மகிழ்வார்கள்.

சிறுவர்களுக்கு தாய்தான் எல்லாம்.

நாமும் சிறுவர்களைப் போல, தாய்த் திருச்சபையின் அரவணைப்பில் பாவ மாசில்லாமல் பரிசுத்தர்களாய் வாழ்வோம்.

விண்ணக வாழ்க்கையை உரிமையாக்குவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, September 25, 2024

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். (லூக்கா நற்செய்தி 9:54)

***
அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். 
(லூக்கா நற்செய்தி 9:54)

யாக்கோபுக்கும், அருளப்பருக்கும் இடியின் மக்கள் என்று ஒரு பட்டப் பெயர் உண்டு.

உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாக செயல்படக் கூடியவர்கள்.

மகிழ்ச்சியான காரியங்களை உணர்ச்சி வசப்பட்டு செய்தால் செயல் அமோக வெற்றி பெறும்.

ஆனால் கோபம் வரும்போது உணர்ச்சி வசப்பட்டால் செயல் அழிவில் முடியும்.

அவர்களுடைய குணத்தை அறிந்தும் இயேசு அவர்களை அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார், அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக.

இயேசுவும் அவரது சீடர்களும் எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

சமாரியா வழியாகப் போக வேண்டியிருந்தது.

சமாரியர்கள் இஸ்ரயேலர்சளும், அசிரியர்களும் கலந்த கலப்பின மக்கள்.

ஆனால் யூதர்கள் கலப்படமற்ற இஸ்ரயேலர்கள்.

யூதர்களுக்கும் அவர்களுக்கும் சுமூகமான உறவு இருந்ததில்லை.

ஆனால் இயேசு அனைவரோடும் நல்ல உறவில் இருந்தார்.

சமாரியா வழியாக எருசலேமுக்குப் போக நினைத்தார்.

ஆனால் சமாரியர்கள் அவரை உள்ளே விடவில்லை.

இடியின் மக்களுக்குக் கோபம் வந்தது.

"ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். 

உணர்ச்சி வசப்படுகின்றவர்களுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் பேசத் தோன்றும்.

ஆனால் இயேசு தன்னை வெறுப்பவர்களை நேசிப்பவர்.

அவர் தனது சீடர்களைக் கடிந்து கொண்டார்.

தங்களுக்கு வழி மறுப்பவர்கள் மீது கோபப் படக்கூடாது, அவர்களுக்காக செபிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.

வேறு வழியாக எருசலேமுக்குச் சென்றார்.

 மனுக் குலத்தின் ஆரம்பத்தில் கடவுள் இடியின் மக்களைப் போல இருந்திருந்தால் 

ஆதாம் ஏவாளோடு மனுக்குலத்தின்‌ வரலாறு முடிவுக்கு வந்திருக்கும். 

முதற்புள்ளியே முற்றுப்புள்ளி ஆகியிருக்கும்.

உயிருள்ள கடவுள் உணர்ச்சி உள்ளவர், ஆனால் உணர்ச்சி வசப்படுபவர் அல்ல.

நித்திய காலமாக நிதானித்து சிந்தித்து செயல்புரிபவர்.

நமக்கு எதிராகத் தவறு செய்பவர் மீது நாம் உணர்ச்சி வசப்படும் போது கோபம் உண்டாகிறது.

ஆதாம் ஏவாள்  கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்த போது அவர் நிதானமாக பாவத்தின் விளைவுகளைச் சுட்டிக் காண்பித்தார்.

மனுக் குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதாகவும் வாக்குக் கொடுத்தார்.

இந்த வாக்கு உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்பட்டது அல்ல, நித்திய காலமாக நிதானமாக எடுக்கப்பட்டது. 

அவசரப்பட்டு உடனடியாக மனிதனாகப் பிறக்கவில்லை.

ஈராயிரம் ஆண்டுகள் மனுக் குலத்தை அதற்காகத் தயாரித்தார்.

அத்தயாரிப்பின் வரலாறு தான் பழைய ஏற்பாடு.

மனிதனாக பிறந்த பிற்பாடு கூட 30 ஆண்டுகள் தன்னுடைய பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ்ந்தார்.

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்தார். 

அவர் பாடுகள் பட்டு மரித்தது ஒரு நாள்தான். புனித வெள்ளி.

அதற்காக நிதானமாகக் காத்திருந்தது 33 ஆண்டுகள்.

இன்று உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அட்டூழியங்களைப் பார்த்து நாம் உணர்ச்சி வசப்படுகிறோம்.

ஆனால் கடவுள் அவற்றை நிதானமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

மனிதன் மனம் திரும்புவதற்குக் கால அவகாசம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 இடியின் மக்களைப் போல் கடவுள் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் 

வானத்திலிருந்து தீயை அனுப்பி உலகை என்றோ அழித்திருப்பார்.

உணர்ச்சிவசப்படாமல் இயங்கும் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

நமது குடும்ப வாழ்வில் நாம் உணர்ச்சி வசப்பட்டால் குடும்பம் அமைதியை இழந்து போர்க்களமாக மாறிவிடும். 

சமூகம் உணர்ச்சிவசப்படுவதால் தான் எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்.

 அரசியல் வாதிகள் உணர்ச்சி வசப்படுவதால்தான் நாட்டில் குழப்பங்கள், உலகில் போர்கள்.

உலகம் இன்னும் அழிவுறாமைக்குக் காரணம்  கடவுளின் இரக்க சுபாவமும் மன்னிக்கும் குணமும்தான்.

கடவுள் மனிதர்கள் மீது அளவு கடந்த இரக்கம் உள்ளவர்.

அவர்கள் அழிவுறுவதை அவர் விரும்பவில்லை.

அவர்கள் மனம் திரும்பி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார். 

அதற்கான அவகாசத்தை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.

ஆகவேதான் உணர்ச்சி வசப்படாமல் செயல் புரிகிறார்.

கடவுள் நம்மோடும் அவரது பண்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாமும் இரக்க சுபாவத்தோடும், மன்னிக்கும் மனப்பாங்குடனும்,
உணர்ச்சி வசப்படாமலும் செயல் புரிந்து உலகில் அன்பையும், சமாதானத்தையும் நிலை நாட்டுவோம். 

வானத்திலிருந்து இறைவனின் இரக்க மழை பொழியும்.

நாம் ஆன்மீகத்தில் செழித்து வளர்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, September 24, 2024

"இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்" என்றார். (லூக்கா நற்செய்தி 9:48)

அவர்களிடம், "இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 9:48)

பிறரன்பின் அவசியத்தை வித்தியாசமான சமயங்களில்,

வித்தியாசமான கோணங்களிலிருந்து 

இயேசு நமக்கு வலியுறுத்துகிறார்.

குழந்தைகள் வயதளவில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள்தான் பெரியவர்கள்.

இயேசு அனைவரையும் நேசித்தாலும் குழந்தைகளை விசேஷமான விதமாக நேசிக்கிறார்.

நாம் கடவுளை நேசிக்க வேண்டும்.

கடவுளை நேசித்தால் அவரை நமக்கு உரியவராக ஏற்றுக் கொள்வோம்.

கண்ணால் காண முடியாத கடவுளை ஏற்றுக் கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.

குழந்தைகளை நமது கண்களால் பார்க்க முடியும்.

குழந்தைகளை ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவையே ஏற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளை நேசிப்பவர்கள் இயேசுவையே நேசிக்கிறார்கள்.

இயேசுவே நேசித்து ஏற்றுக் கொள்பவர்கள் அவரது தந்தையையே நேசித்து ஏற்றுக் கொள்கிறார்கள்.

கண்ணால் காணக்கூடிய குழந்தைகளை ஏற்றுக் கொள்ளாதவனால் காண முடியாத கடவுளை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆகவேதான் இயேசு,

"இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். 

என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்."
என்று கூறுகிறார்.

குழந்தைகளை ஏற்றுக் கொள்வது எப்படி?

ஒவ்வொரு இல்லத்திலும் சிறுவர்கள் இருக்கிறார்கள்.

திருமணத்தின் நோக்கமே குழந்தைப்பேறும், குழந்தைகளை வளர்ப்பதும்தான்.

நாம் பெற்ற குழந்தைகளை நாம் ஏற்றுக் கொண்டால் அவர்களை நல்லவர்களாக, இறைவனுக்கு ஏற்றவர்களாக வளர்ப்போம்.

அதாவது நாம் குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதமாக வளர்க்காவிட்டால் அவர்களை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

சிறு பருவத்திலிருந்தே அவர்களை அன்பு, பிறருக்குக் கொடுத்தல், நன்றியுணர்வு, செபம், பொறுமை போன்ற பண்புகளில் வளர்க்க வேண்டும்.

அப்படி வளரும் குழந்தைகள் தான் விண்ணக வீட்டுக்கு ஏற்றவர்களாக வளர்வார்கள்.

அப்படி வளர்க்காமல் தான்தோன்றித் தனமாக வளர்க்கும் பெற்றோர் பிள்ளைகளை இறைவனுக்கு எதிரிகளாக வளர்க்கிறார்கள்.

அவர்கள் பிள்ளைகளை உண்மையாக நேசிக்கவில்லை.

அப்படி வளர்ப்பது பிள்ளைகளை பாவத்துக்கு இட்டுச்செல்லும்.

பாவம் ஆன்மீக நோய்.

பிள்ளைகளை நோயாளிகளாக வளர்ப்பவர்கள் உண்மையான பெற்றோர் அல்ல.

தங்கள் பிள்ளைகளை மட்டுமல்ல மற்ற பிள்ளைகளையும் ஆன்மீகப் பார்வையுடன் நோக்க வேண்டும்.

அவர்களோடு பழகும் போது முன்மாதிரிகையாகப் பழக வேண்டும்.

நம்முடன் பழகும் எந்தக் குழந்தைகளும் நல்லவர்களாக வளர‌ வேண்டும்.

இயேசு குழந்தைகளின் நண்பர்.

நாமும் குழந்தைகளோடு இயேசுவாகப் பழக வேண்டும்.

"உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்."

"கடைசியானவர்கள் முதலானவர்கள்.

பணிவிடை செய்பவர்கள் தலைவர்கள் ஆவர்"  

என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கும் பிரதிபலிக்கின்றன.

ஆன்மீகத்தில் ஒருவரது பரிசுத்தத்தனத்தின் அளவுதான் அவர் எந்த அளவுக்குப் பெரியவர் என்பதைத் தீர்மானிக்கிறது.

அருள் நிறைந்த மரியாள் தான் விண்ணக மண்ணக அரசியானாள்.

இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

அன்னை மரியாளை,

"அருள் மிகப் பெற்ற மரியே" என்று அழைப்பவர்கள்

தங்களைத் திருத்திக் கொண்டு,

"அருள் நிறைந்த மரியே."
என்று அழைக்க வேண்டும்.

அன்னையை மதிப்புக் குறைந்த வார்த்தைகளால் அழைப்பது நான்காவது கட்டளைக்கு எதிரானது.

சிறியவர்கள் ஏன் பெரியவர்கள்?

சிறுவர்கள் மாசு மறு அற்றவர்கள். கள்ளங்கபடு இல்லாதவர்கள். உள்ளதை உள்ளபடியே சொல்லக் கூடியவர்கள்.

வயதில் வளர வளர இத்தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருகின்றன.

வயது வளர வளர பரிசுத்தத்தனம் குறைந்து கொண்டே வருகிறது.

ஞானஸ்நானம் பெற்ற சிறு குழந்தை மரிக்க நேர்ந்தால் அதன் ஆன்மா நேரடியாக மோட்சத்துக்குச் சென்று விடும்.

பெரியவர்கள் இறந்தால் உத்தரிக்கிற வழியாகவே செல்ல வேண்டும்.

ஆகவேதான் கடவுளின் முன்னால் 

சிறியவர்கள் பெரியவர்கள்.
பெரியவர்கள்  சிறியவர்கள்.

அதற்காக நம்மால் வயதில் வளராமல் இருக்க முடியுமா?

முடியாது.

ஆனால் முயற்சி செய்தால் பரிசுத்தத் தனத்தில் வளரலாம்.

அது கடினமா?

இல்லவேயில்லை.

இலேசானது மட்டுமல்ல, இனிமையானதும் கூட.

அன்பு செய்வதைவிட இனிமையான செயல் வேறு என்ன இருக்கிறது?

கடவுளை அன்பு செய்வோம்.
அயலானை அன்பு செய்வோம்.

அன்புக்கு எதிரான எதையும் செய்யாதிருப்போம்.

அன்பு செய்து கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

Love, and do as you like.
(St. Augustine)

அதாவது என்ன செய்தாலும் அதில் அன்பு இருக்க வேண்டும்.

இறைவனை நேசிப்போம்.
அயலானை நேசிப்போம்.

பாவமற்ற தன்மையில் சிறியவர்களாகவே இருப்போம்.

மோட்சத்தில் நாம் பெரியவர்கள்.

லூர்து செல்வம்.

" என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. (மாற்கு நற்செய்தி 9:42)

"என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. 
(மாற்கு நற்செய்தி 9:42)


பிறரன்புச் செயல்களின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதற்காக இயேசு,


"நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." என்றார்.

நமது அன்புச் செயல்‌ எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதற்காக நமக்கு விண்ணகத்தில் நித்திய பேரின்பம் சன்மானமாகக் கிடைக்கும் 

அதற்கு மாறாக பிறருக்கு துர்மாதிரிகையாய் இருந்து பிறர் விண்ணக வாழ்வை இழப்பதற்கு காரணமாக இருப்பவர்களின் விளைவு எதிர் மாறாக இருக்கும்.

இதை‌ நமக்கு உணர்த்துவதற்காக இயேசு,

 "என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது."

நமது அயலான் மீட்படைய நாம் காரணமாக இருக்க வேண்டும்.

ஆனால் பிறர் மீட்பை இழக்க நாம் எந்த விதத்திலும் காரணமாக இருந்து விடக்கூடாது.

நாம் முன்னுதாரணமாக நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் நம்மைப் பார்ப்பவர்களுக்கும் நம்மைப் போல் வாழ உள் உந்துதல் ஏற்படும்.

ஒவ்வொருவரும் இயேசுவாக வாழ வேண்டும்.

நாம் எதிர்மறையாக வாழ்ந்து விடக்கூடாது என்பதற்கு அழுத்தம் கொடுக்கவே இயேசு 

" உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். 

உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். 

 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்." என்று கூறுகிறார்.

பள்ளிக்கூடம் செல்லும் மாணவனுக்கு அவனது அப்பா சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்.

எதற்கு?

பள்ளிக்கூடம் போக.

அவன் பள்ளிக்கூடம் போகாமல் சைக்கிளில் சினிமாவுக்குப் போனால் அவனுடைய அப்பா என்ன செய்வார்?

சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டு,

"பள்ளிக்கூடத்துக்கு நடந்து போ." என்பார்.

அதைத்தான் ஆண்டவரும் சொல்கிறார்.

நமக்குக் கை எதற்குத் தரப்பட்டுள்ளது?

இறைவனைக் கும்பிடவும்,

இல்லாதவர்களுக்கு அள்ளிக் கொடுக்கவும்.


அதை விடுத்து விட்டு‌ களவு செய்யவும், அயலானை அடிக்கவும் பயன்படுத்தினால் கைகளைத் கடவுள் என்ன சொல்வார்?

"கைகளைப் பாவம் செய்யப் படுத்தாதே" என்பதை அழுத்தமாகச் சொல்வதற்காக 

"உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள்." ‌‌ என்கிறார்.

நமக்குக் கடவுள் ஐம்புலன்களைத் தந்திருப்பது அவற்றைக் கொண்டு இறைவனுக்குச் சேவை செய்ய, பாவம் செய்ய அல்ல.

நாம் நமது ஐம்புலன்களால் செய்தப் பாவங்களுக்குப் பரிகாரமாகத்தான் 

இயேசு தனது ஐம்புலன்களையும் சிலுவையில் பலியாக்கினார்.

"பொறிவாயில் ஐந்தவித்தான்" வழி நின்று நாம் நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனுக்காக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, September 23, 2024

அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள். (லூக்கா நற்செய்தி 9:45)

அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள். 
(லூக்கா நற்செய்தி 9:45)


இயேசு "நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்"

 என்று தனது பாடுகளைப் பற்றிய நற்செய்தியை முன் அறிவித்தபோது 


 அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை.

 அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. 

ஏனெனில்  தங்களுக்குள் பெரியவர் யார் என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
(லூக்கா நற்செய்தி 9:46)

இயேசு தான் உலகுக்கு வந்ததன் நோக்கத்தைப் பற்றி, அதாவது, பாடுகளைப் பற்றி சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர்கள் அதைக் கவனிக்காமல்

தங்களில் யார் பெரியவர் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு பன்னிரு சீடர்களைத் தேர்வு செய்ததன் நோக்கமே உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காகத்தான்.

 படிப்பதற்காக பள்ளிக்கு வந்து வகுப்பில் ஆசிரியரின் போதனையைக் கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் இக்காலத்து மாணவர்கள் போல

சீடர்களும் நடந்து கொண்டார்கள்.

எல்லாம் வல்ல கடவுள் மிகத் தாழ்ந்த, பலகீனங்கள் நிறைந்த மனித உரு எடுத்ததன் மூலம் நம்மீது அவர் கொண்டுள்ள அளவற்ற அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நம்மைத் தூக்கி விடுவதற்காகத் தன்னையே தாழ்த்தினார்.

அவர் முன்பு அமர்ந்து கொண்டே சீடர்கள் தங்களுள்‌ யார் பெரியவன் என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர்.

ஆகவேதான் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

ஆசிரியர் பாடம் நடத்தி விட்டு 

"நுழைந்ததா?" என்று கேட்டாராம்.

ஒரு மாணவன் எழுந்து,

"எல்லாம் நுழைந்தது, வால் மட்டும் நுழையவில்லை" என்றானாம், அவன் பாடத்தைக் கவனிக்கவில்லை, மோட்டில் ஒரு அணிலைக் கவனித்துக்‌  கொண்டிருந்தான்.

நம்மை உற்று நோக்குவோம்.

வாயினால் செபம் சொல்லும் போது மனதை எங்காவது அலைய விடடிருக்கிறோமா?

விடிய விடிய தேர்வுக்குப் படித்து விட்டு, காலையில் திருப்பலியிலும், திருவிருந்திலும் கலந்து விட்டு 

தேர்வு எழுதப் போவது நல்ல ‌பழக்கம்தான்.

ஆனால் திருப்பலி நேரத்தில் முக்கியமான கேள்வி பதில் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

திருப்பலி நேரத்தில் ஆண்டவர் தவிர எதுவும் மனதில் இருக்கக் கூடாது.

குருத்துவம் எப்படி ஒரு தேவத்திரவிய அனுமானமோ

அதேபோல் திருமணமும் ஒரு தேவத்திரவிய அனுமானம்தான்

இரண்டுக்கும் மையம் கடவுள் தான்.

குருக்கள் முழுக்க முழுக்க இயேசுவாக செயல்படுகிறார்கள்.

திருமணத் தம்பதியர் தந்தை இறைவனின் படைப்புப் பணியில் உதவுகிறார்கள்.

இருவர் பணியிலும் தூய ஆவியின் செயல்பாடு முழுமையாக இருக்கிறது.

திருப்பலியும் செபம்தான்.
திருமண உறவும் செபம்தான்.

செபம் என்றாலே இறைவனோடு ஒன்றித்திருப்பது தான்.

இயேசு தனது பலியைப் பற்றிப் பேசும்போது சீடர்கள் அவர் முன்பு அமர்ந்து கொண்டே தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

நாம் என்ன செய்யக்கூடாது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.

வெளிப் பார்வைக்கு கடவுளுடைய பிள்ளைகள் போல வாழ்ந்து கொண்டு 

மனதில் உலகின் பிள்ளைகளாக வாழக்கூடாது.

நாம் கடவுளின் படைப்பு.

ஒவ்வொரு வினாடியும் உள்ளும் புறமும் கடவுளோடு ஒன்றித்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, September 22, 2024

இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார். (மாற்கு நற்செய்தி 8:27)

இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார். 
(மாற்கு நற்செய்தி 8:27)

கேள்வி கேட்பவர் இயேசு.

ஒரு கேள்விக்கான பதிலை ஆராயுமுன் கேள்வி கேட்பவரை முதலில் ஆராய வேண்டும்.

கேள்வி கேட்பவர் தான் பதிலின் தன்மையைத் தீர்மானிக்கிறார்.

ஆசிரியர் பதிலை மனதில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்பார்.

மாணவன் தெரியாத பதிலைத் தெரிந்து கொள்வதற்காக கேள்வி கேட்பான்.

இயேசு சர்வ வல்லமையும், சர்வ ஞானமும் உள்ள கடவுள்.

உலகம் உண்டான நாள் முதல் உலகம் முடியும் நாள் வரை வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் அத்தனை கோடி மக்களும்

நினைத்த, நினைக்கின்ற, நினைக்கப் போகின்ற அத்தனை நினைவுகளும் கடவுளுக்கு நித்திய காலமாகவே தெரியும். 

தன்னைப் பற்றி யார் யார் என்ன நினைத்தார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும்.

பின் ஏன் இயேசு சீடர்களிடம்,

"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார்?

கடவுள் நம்மோடு உரையாடுவது தனக்குத் தெரியாததை நம்மிடமிருந்து தெரிந்து கொள்வதற்காக அல்ல.

நாம் அவரோடு உரையாட வேண்டும் என்பதற்காகத்தான்.

அவரைப் பொருத்தமட்டில் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படாது, ஏனெனில் அவர் மாறாதவர்.

ஆனால் நாம் கடவுளோடு உரையாடுவது நம்மில் ஆன்மீக மாற்றங்களை ஏற்படுத்தும். 

நம்மை கடவுளுக்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும். 

கடவுள் மீது நமக்கு இருக்கும் அன்பை அதிகரிக்கும். 

நம் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை நாம் உணரச் செய்யும். 

சுருக்கமாக, இறைவனோடு நமக்குள்ள உறவு வளரும். 

நமது ஆன்மா பரிசுத்தமாகும். 

அதற்காகத்தான் கடவுள் நம்மோடு உரையாடுகிறார். 

மூன்று ஆண்டுகள் தன்னுடைய சீடர்களோடு அதைத்தான் செய்தார். 

நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பார்த்து, 

"நான் யார்?"

என்று கேட்டு, பதிலைத் தியானிப்பது நமக்கு ஆன்மீக வளர்ச்சியை அதிகரிக்கும்.

"என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?"

என்ற கேள்விக்கு விடை காண முயன்றால், நம்மை நாமே திருத்திக் கொள்ள உதவும்.

ஏதாவது ஒரு காரியமாக நாம் யாரையாவது பார்க்கச் சென்றால் அவர் நம்மிடம் கேட்கும் முதல் கேள்வி,

"யார் நீங்கள்?"

நமது பதில் பலவித கோணங்களிலிருந்து இருக்கலாம்.

நான் இன்னாருடைய மகன் என்று கூறலாம்.

நாம் செய்யும் தொழிலைச் சொல்லலாம்.

"நான் ஒரு ஆசிரியர்."

"நாம் ஒரு விவசாயி."

"நான் ஒரு கூலி வேலை செய்கிறவன்."

நாம் என்ன காரியமாக  அவரைப் பார்க்க செல்கிறோமோ அதை ஒட்டியதாக நமது பதில் இருக்கும். 

நாமே நம்மை பார்த்து, "நான் யார்?" கேட்பது நம்மைப் பற்றிய ஆன்மீகப் பரிசோதனையாக இருக்கும்.

"நான் யார்?"

"எங்கும் நிறைந்திருக்கும், எல்லாம் வல்ல கடவுளின் மகன்."

"மகன்? அவரிடம் பிறந்த மகன்?"

"இல்லை. படைக்கப்பட்ட மகன்."

"மகன் தந்தையைப் போல் இருக்க வேண்டுமே?

கடவுள் ஆவி ஆயிற்றே. உன்னைப் பார்த்தால் சடப் பொருள் போல் அல்லவா தெரிகிறது."

"என்னுடைய உடல் சடப் பொருள். ஆன்மாதான் நான்.

ஆன்மா கடவுளைப் போலவே ஆவி. கடவுளின் சாயலை உடையது. கடவுள் அவரது பண்புகளை என்னோடு பகிர்ந்து கொணாடுள்ளார்.

அவர் தன்னை நேசிப்பது போல நான் என்னை நேசிக்கிறேன்.

அவர் அவரால் படைக்கப்பட்ட என்னுடைய மற்ற சகோதரர்களை நேசிப்பது போல நானும் அவர்களை நேசிக்கிறேன்."

"கடவுள் தன்னுடைய பிறரன்பை செயலில் காட்டுகிறார்.

நீ உன்னுடைய பிறரன்பை எந்த அளவுக்கு செயலில் காட்டுகிறாய்? சிந்தித்து உண்மையைச் சொல்."

"சிந்தித்துப் பார்க்கிறேன். இறைமகன் செயல்படுகிற அளவுக்கு நான் செயல்படவில்லை என்பது உண்மை தான்.

அவர் அளவில்லாத வல்லமை உள்ளவர். நான் மிகவும் குறைந்த அளவுள்ளவன்.

யானை ஓடுகிற வேகத்தில் எலிக்குட்டியால் ஓட‌ முடியுமா?"

"எல்லாம் வல்ல கடவுளும், மனிதனுமாகிய இயேசுவின் அளவுக்கு எந்த மனிதனாலும் செயல்பட முடியாது என்று அவருக்குத் தெரியும்.

விண்ணகத் தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக இருங்கள் அவர் கூறியிருப்பதும் உண்மைதான்.

அவர் உன்னோடு எவ்வளவு வலிமையை பகிர்ந்துள்ளாரோ அதை முழுவதும் பயன்படுத்தி முயற்சி செய்கிறாயா என்பது தான் கேள்வி."

 "மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்."
(லூக்கா நற்செய்தி 12:48)

என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.

ஆகவே நம்மோடு எவ்வளவு பகிர்ந்து கொண்டாரோ அதை எதிர்பார்ப்பார் என்பது புரிகிறது."

"அது மட்டுமல்ல, கொடுத்தது முழுவதும் பயன்படுத்தப் பட  வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

இதை உணர்ந்து எவ்வளவு அதிகமாக பிறரன்பு செயல்கள் செய்ய முடியுமோ அவ்வளவு அதிகமாகச் செய்ய வேண்டும்.

நான் கடவுளின் மகன் என்று பெருமை பாராட்டிக் கொண்டால் மட்டும் போதாது,

அதை நமது வாழ்க்கையால் நிரூபிக்க‌ வேண்டும்."

ஒவ்வொரு நாளும் ஒரு முறை சுயப் பரிசோதனை செய்து நாம் எந்த அளவுக்கு  கடவுளுக்குப் பிரியமானவர்களாக வாழ்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்பது இறையன்பில் வளர நமக்கு உதவும்.

லூர்து செல்வம்.

Saturday, September 21, 2024

அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். (லூக்கா நற்செய்தி 9:3)

அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். 
(லூக்கா நற்செய்தி 9:3)


நற்செய்திப்பணி புரிபவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்க வேண்டும்?

இறையாட்சிபற்றிப் பறைசாற்றத் தேவையான இறையறிவு இருக்க வேண்டும்.

தங்கள் விசுவாசம் உள்ள செபத்தினால் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்க

முடிந்தவர்களாக இருக்க வேண்டும்.

நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு அவர்களுக்காக செபிக்க வேண்டும்.

பேய்களையெல்லாம் அடக்கவும் சாத்தானின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

நமது முதல் பெற்றோர் பாவத்தின் விளைவாக சாத்தானின் பிடியில் விழுந்தனர்.

மக்கள் பாவ மன்னிப்புப் பெற்று சாத்தானின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும்.

ஆகவே நற்செய்தியை அறிவிப்பவர்கள் மக்கள் பாவ மன்னிப்பு பெறுவதில் ஆர்வம் காட்டும்படி அவர்களைத் தூண்ட வேண்டும்.

திருப்பலியில் கலந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ,

ஞாயிற்றுக்கிழமைப் பிரசங்கம் கேட்பது எவ்வளவு முக்கியமோ,

திருவிருந்தில் கலந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ

அவ்வளவு முக்கியம் பாவ சங்கீர்த்தனம் செய்வது என்பதை மக்கள் உணர வேண்டும்.

வர வர மக்களிடையே பாவ சங்கீர்த்தனம் செய்யும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.

தூய உள்ளத்தோடு திருவிருந்தில் பங்கேற்க வேண்டும் என்ற உண்மையை‌ காலப் போக்கில் மக்கள் மறந்து விட்டார்கள்.

இதை மக்களுக்கு உணர்த்த வேண்டியது‌ நற்செய்தி அறிவிப்பவர்களுடைய கடமை.


நற்செய்தி அறிவிப்பவர்கள் எவற்றைத் தவிர்க்க வேண்டும்?

 "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். "

என்று ஆண்டவர் கூறுகிறார்.

நற்செய்திப் பயணங்களின் போது நற்செய்தியாளர்கள் கைத்தடி எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஆண்டவர் கூறுகிறார்.

கைத்தடி என்றால் ஊன்றுகோல்.

அந்தக் காலத்து மக்கள் கைத்தடி இல்லாமல் நெடும் பயணம்  செய்ய மாட்டார்கள்.

நமது காலத்தில் வாகனம் இல்லாமல் யாரும் பயணிப்பதில்லை.

ஆனாலும் பயணிக்கும் வாகனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம்.

ஏழைகள் பேறு பெற்றவர்கள் என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.

நற்செய்தியாளர்கள் விலை கூடிய வாகனங்கள் அல்லாமல் சாதாரண மக்கள் பயன்படுத்தும் வாகனங்களைப் பயன்படுத்தினால்

சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கும் நெருக்கம் அதிகமாகும்.

மக்கள் தங்களை விட உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் கூறுவதை விட தங்கள் நிலையில் உள்ளவர்கள் கூறுவதை விருப்பமாகக் கேட்பார்கள்.

நற்செய்தியைப் புரிய வைப்பதும் எளிது.

அடுத்து பணம், உணவு ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று இயேசு கூறுகிறார்.

பழைய ஏற்பாட்டில் 12 கோத்திரங்களுக்கு இஸ்ரேல் நாட்டைப் பங்கு போடும்போது 
லேவி கோத்திரத்துக்கு பங்கு கொடுக்கப் படவில்லை.

ஏனெனில் கோவில் பணி செய்த குருக்கள் அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்.

அதற்குப் பதிலாக மக்கள் அவர்களுக்கு தசம பாகத்தைக் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

அதேபோல், நற்செய்தியைப் பணியாற்றும் நமது குருக்களுக்கு உலக சொத்து எதுவும் கிடையாது.

ஆகவே நற்செய்திப் பணிக்கு எங்கே சென்றாலும் பணமோ, உணவோ கொண்டு செல்ல முடியாது.

நமது ஞான மேய்ப்பவர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும் என்பது திருச்சபையின் கட்டளை.

நாம் கொடுக்கும் பூசைப் பணம் அதற்காகத்தான்.

நமது ஆண்டவர் நற்செய்திப் பணியின் போது சொந்தமாகப் பணம் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை.

பயணத்தின் போது யாராவது கொடுக்கும் உணவைச் சாப்பிடுவார்.

தனது சீடர்களையும் அப்படியே பழக்கிவிட்டார்.

உணவுக்கும், பணத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நற்செய்திப் பணிக்கு ஏற்றவர்கள் அல்ல.

அதற்கு உதாரணம் யூதாஸ்.

ஓர் அங்கி போதும் என்று ஆண்டவர் கூறுகிறார்.

நற்செய்திப் பணி புரிபவர்கள் உடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

ஒரு உடைக்கு மேல்  மாற்ற உடை இல்லாத ஏழைகள் பலர் வாழும் நாடு நம் நாடு.

பணியாளர்கள் உயர்ந்த ரக உடை அணிந்து ஏழைகள் மத்தியில் பணியாற்றினால் மக்களுக்கும் அவர்களுக்கும் நெருக்கம் குறையும்.

பணியின் ஆற்றலும் குறையும்.

நமது ஆண்டவர் நற்செய்தியை வாழ்ந்து காட்டினார்.

ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.

அவரது நற்செய்தியை அறிவிப்பவர்களும் அப்படியே செய்ய வேண்டும்.

ஆண்டவர் காட்டும் வழிகாட்டுதலின்படி நடந்து நற்செய்தியை அறிவிப்போம்.

வாழ்ந்து நற்செய்தியை அறிவிப்பது அனைவருக்கும் பொதுவானது.

லூர்து செல்வம்

Friday, September 20, 2024

அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார். (லூக்கா நற்செய்தி 8:21)

அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 8:21)

நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படையான வசனம்.

அனைவருக்கும் ஒரே தந்தை,
நமது விண்ணகத் தந்தை.

 அனைவரும் ஒரே குடும்பம்.
ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்கத் திருச்சபை.

திருச்சபையின் தலைவர் இயேசு.

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்கள் அனைவரும் இயேசுவின் தாயும் சகோதர, சகோதரிகளும். 

இயேசுவின் தாய் அன்னை மரியாளா, அல்லது, நாமா?

கபிரியேல் தூதர் மூலம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி செயல்பட்டவள் இயேசுவின் தாய் மரியாள்.

அவருடைய நற்செய்தியைக் கேட்டு அதன்படி வாழ்கின்றவர்களைத் தனது தாய்க்குச் சமமாக நினைக்கிறார் இயேசு.

மரியாளின் மகனாகிய இயேசு தன்னைப் பின்பற்றுகிற அனைவரும் தன் தாயைப் போலவே வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

இயேசு நமது மகனாக வாழ ஆசைப் படுகிறார்.

வேறு வார்த்தைகளில், நாம் அவரைப் பெற்றெடுத்த தாய் மரியாளைப் போல பரிசுத்தர்களாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அதனால்தான் "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்கள் என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்கிறார். 

இயேசு, மரி, சூசை மட்டுமல்ல, 
நாம் அனைவருமே திருக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே திருக்குடும்பம்.

கத்தோலிக்கர் அனைவரும் இறைவார்த்தைக்குக் கட்டுப் பட்டவர்கள்.

தாயும் பிள்ளையுமாகப் பழக வேண்டியவர்கள்.

இறை வார்த்தையின்படி நடப்பவர்களை இயேசு தனது தாய் என்கிறார்.

ஆகவே கத்தோலிக்கக் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளில் இயேசுவைக் காண வேண்டும்.

பிள்ளைகளும் தங்களில் 
இயேசுவைக் காண வேண்டும்.

இந்தக் கண்ணோக்கில் அனைவரும் பழகினால் நமது குடும்பங்களில் அன்பும், சமாதானமும் பொங்கிவடியும்.

எல்லோருமே தங்களில் கிறிஸ்துவைக் கண்டு,

கிறிஸ்துவாக, 

அருள் நிறைந்த அன்னை மரியாளின் பிள்ளைகளாக 

வாழ ஆரம்பித்தால்தான் நாம் கிறிஸ்தர்கள்.

கிறிஸ்தவன் எப்படி வாழ வேண்டும்?

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதையே வாழ்வாகக் கொண்ட இயேசுவாக,

உலகப் பொருட்கள் மீது பற்றின்றி வாழ்ந்த இயேசுவாக,

தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்த இயேசுவாக,

அவருக்கு விரோதமாக பாவம் செய்தவர்களை மன்னித்த இயேசுவாக,

நண்பர்களின் மீட்புக்காகத் தன் உயிரையே கொடுத்த இயேசுவாக,

அன்னை மரியாள் மீது அளவற்ற பற்று கொண்ட இயேசுவாக

நாம் வாழ வேண்டும்.

இயேசு நம்மில் தனது தாயைப் பார்க்க‌ விரும்புவதால்

நாம் அன்னை மரியாளைப் போல ஆண்டவரின் அடிமைகளாக 

அவரது சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக வாழ்வோம்.

புனித அந்தோனியார் அப்படி வாழ்ந்ததால்தான் குழந்தை இயேசு அவரைத் தன் தாயாகப் பாவித்து அவர் கையில் வந்து அமர்ந்தார்.

நமது கையிலும் குழந்தை இயேசு அமர்ந்திருப்பதாக நினைத்துக் கொள்வோம்.

அவர் மனம் மகிழ 
தாய் மரியாளைப் போல  நாமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, September 19, 2024

"எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். (லூக்கா நற்செய்தி 8:16)

"எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். 
(லூக்கா நற்செய்தி 8:16)

மணம் வீசுவது மலர்.

அதன் மணத்துக்காகத்தான் மக்கள் அதை விரும்புகிறார்கள்.

மங்கையர் மலரைப் பறித்து கூந்தலில் சூடுவர்,

 கூடைக்குள் வைக்க மாட்டார்கள்.

ஒளியைத் தருவது விளக்கு.

விளக்கை ஏற்றி விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்,

மரக்காலுக்குள் வைக்க மாட்டார்கள்.

விளக்குத் தண்டின் மேல் வைத்தால் வீடு முழுவதும் வெளிச்சமாக இருக்கும்.

வீட்டில் வாழும் அனைவரும் பயன் பெறுவர்.

மரக்காலுக்குள் வைத்தால் அங்கு மட்டும் தான் வெளிச்சமாக இருக்கும்.

யாருக்கும் பயன்படாது.

நாம் உலகின் ஒளியாக இருக்கிறோம்.

ஒரு இடத்தில் மலர் இருக்கிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதன்‌ நறுமணமே அதைக் காட்டிக் கொடுத்து விடும்.

ஒரு இடத்தில் விளக்கு இருக்கிறது என்று யாரும்@
 சொல்ல வேண்டியதில்லை.

அதன் ஒளியே அதைத் தெரிவித்து விடும்.

கடவுள் இருக்கிறார் என்பதை அவர் படைத்த பிரபஞ்சமே அறிவித்துக் கொண்டிருக்கிறது.

நாம் இருக்கிறோம் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வது எப்படி?

கடவுள் ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு திறமையோடுதான் படைத்திருக்கிறார்.

சிலரை பல திறமைகளோடு படைத்திருக்கிறார்.

திறமைகள் நாம் அவற்றைப் பயன்படுத்துவதற்கு,

பூட்டி வைப்பதற்கல்ல.

அவர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தும் போது மற்றவர்கள் அவர்களை அறிந்து கொள்வார்கள்.

திறைமைகள் உள்ளவர்கள் அவற்றை இறைவனின் அதிமிக மகிமைக்காகப் பயன்படுத்த வேண்டும்.

பேச்சுத் திறமை உள்ளவர்கள் இறைவனின் நற்செய்தியை வாய் மூலம் மற்றவர்களுக்கு அறிவிக்கப் பயன்படுத்த வேண்டும்.

எழுத்தாற்றல் உள்ளவர்கள் இறைவனின் நற்செய்தியை எழுத்து மூலம் மற்றவர்களுக்கு அறிவிக்கப் பயன்படுத்த வேண்டும்.

தங்கள் திறமைகளை நற்செய்தியின் வழியில் வாழ வேண்டும்.

அவர்கள் வாழ்க்கை நற்செய்தியைப் பிரதிபலிக்க வேண்டும்.

அவர்களின் வாழ்க்கை வழியாக நற்செய்தி அறிவிக்கப்படும்.

அவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

ஒளி இருக்கும் இடத்தில் இருள் இருக்காது.

ஆண்டவரின் அருள் ஒளி இருக்கும் இடத்தில் பாவ இருள் இருக்காது.

ஆண்டவர் அருள் ஒளி மயமானவர்.

நாம் அவரது ஒளியைப் பிரதிபலிப்போம்.

உலகில் பாவ இருள் நீங்க நம்மால் ஆனதைச் செய்வோம்.

ஆண்டவரின் ஒளியை நாம் பிரநிபலித்தால் 

நம்மைச் சுற்றியுள்ளோர் அவ்வொளி வெளிச்சத்தில் எது பாவம் எது புண்ணியம் என்று கண்டுணர்ந்து, 

புண்ணிய வாழ்வு வாழ்வார்கள்.

ஒளியின் மக்களாய் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, September 18, 2024

"அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். (மாற்கு நற்செய்தி 9:35)

"அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். 
(மாற்கு நற்செய்தி 9:35)

தாழ்ச்சி அனைத்துப் புண்ணியங்களின் அரசி என்பார்கள். 

Humility  is the queen of all the virtues.

நமது உண்மையான நிலையை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்வதுதான் தாழ்ச்சி.

நமது உண்மையான நிலை ஒன்றுமில்லாமைதான்.

நாம் தாயின் வயிற்றில் கருவுருவதற்கு முந்தைய நிலைதான் நமது உண்மையான நிலை.

நமது ஆன்மாவும் உடலும் அவற்றுக்குரிய பண்புகளும் இறைவனால் தரப்பட்டவை.

நான் என்றால் இறைவனால் படைக்கப்பட்ட நான் என்றுதான் அர்த்தம்.

நமக்குள்ள திறமைகள் இறைவனால் நமக்குத் தரப்பட்டவை.

வெளியூருக்குப் போகும் போது ஒரு லாட்ஜில் தங்குகிறோம்.

லாட்ஜ் என்றால் வாடகைக்கு அறைகள் எடுத்துத் தங்குமிடம்.

வாடகை அறை எவ்வளவு வசதிகள் உள்ளதாக இருந்தாலும் அது நமக்கு உரியது அல்ல.

லாட்ஜ் விதிமுறைகளுக்கு மாறாக நமது விருப்பம் போல் அதைப் பயன்படுத்த முடியாது.

 நமது  உடல் நாம் தங்கியிருக்க இறைவன் தந்தருளிய வாடகை அறை தான்.

இறைவன் தந்த விதிமுறைகளுக்கு மாறாக அதைப் பயன்படுத்தக் கூடாது.

விதிமுறைகளுக்கு மாறாக அதைப் பயன்படுத்தியதன் விளைவுதான் நமது இன்றைய நிலை.

இன்றைய இறைவசனம் நமக்குத் தரும் வாழ்க்கை நெறி என்ன?

முதல்வனாக இருக்க விரும்புவது சாதாரண மனிதனின் இயல்பு.

கடைசியானவனாக இருக்க விரும்வது உண்மையான ஆன்மீக வாதியின் இயல்பு.

நமது வாழ்க்கை அனுபவத்திலிருந்து ஒரு உதாரணம்.

பேருந்து நிலையத்தில் பேருந்தின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

பேருந்து வருகிறது.

முதல் இடத்தில் உட்காருவதற்காக முண்டியடித்து முதலில்‌ ஏறுபவன் சாதாரண மனிதன்.

ஏறி அமர மற்றவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு, 

உட்கார இடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, 

நின்று கொண்டு பயணிக்கலாம் என்று நினைத்து 

கடைசியில் ஏறுபவன் உண்மையான ஆன்மீகவாதி.

இறைவன் முன் அவன்தான் முதல்வன்.

பந்தியில் அமர முதல் இடத்தில் உட்கார ஓடுபவன் சாதாரண மனிதன்.

மற்றவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு கடைசி இடத்தில் அமர்பவன் 

உண்மையான ஆன்மீகவாதி.

இறைவன் முன் அவன்தான் முதல்வன்.

அப்படி அமர்ந்ததால் அவனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அவன் பாக்கியசாலி.

ஏனெனில் அவன் தனது உணவை மற்றவர்களுக்குக் கொடுத்திருக்கிறான்.

மற்றவர்கள் மீது அதிகாரம் செய்ய ஆசைப்படுவது சாதாரண மனித இயல்பு.

அனைவருக்கும் தொண்டு செய்ய ஆசைப்படுபவன் உண்மையான ஆன்மீகவாதி.

இறைவன் முன் அவன்தான் ஆள்பவன்.

இதைச் செயல் மூலம் போதிப்பதற்காகத்தான் அரசரான இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவினார்.

உலக அரசில் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று அரசு வக்கீல் வாதாடுகிறார்.

இறையரசில் குற்றவாளிகளை மன்னித்து விடுவிக்க வேண்டும் என்று நீதிபதியே (இயேசுவே) பரிந்துரை செய்கிறார்.

குற்றவாளிகள் செய்ய வேண்டிய பரிகாரத்தை நீதிபதியே செய்கிறார். 

மனிதன் நித்திய காலமும் விண்ணகத்தில் வாழ வேண்டும் என்பதற்காக 

மரிக்கவே முடியாத இறைவன் மனிதர்களின் பாவங்களுக்கு பரிகாரமாகத் 

தானே மனிதனாகப் பிறந்து மரித்திருக்கிறார்.

நமக்கு உயிர் கொடுக்கத் தன் உயிரைக் கொடுத்தார் இறைமகன்.

மனித எண்ணங்களுக்கு எதிர் மாறானவை இறை எண்ணங்கள்.

நாமும் அவரைப் போலவே எண்ண வேண்டும் என்று ஆசிக்கிறார்.

கூட்டத்தில் கடைசி இடத்தைப் பிடி, அதுவே முதல் இடம்.

பிறருக்கு கொடுக்க வேண்டுமா, உன்னிடம் உள்ளதை இழக்க வேண்டும். 

இழப்பது தான் கொடுப்பது. 

பேரின்பம் வேண்டுமா, சிற்றின்பத்தைக் கைவிடு.

வாழ வேண்டுமா, உயிரைக் கொடு.

நீ சம்பாதிக்கும் பொருள் எப்போதும் உன்னோடு இருக்க வேண்டுமா, பிறருக்கு தருமம் கொடுத்து உனது பொருளை அருளாக மாற்று.

விண்ணில் வாழ வேண்டுமா, மண்ணில் மரிக்க வேண்டும். 

புனித வெள்ளியின் ஆண்டவர் தான் , உயிர்ப்பு ஞாயிற்றின் ஆண்டவர்.

மரிப்பவனால் மட்டுமே உயிர்க்க முடியும்.

பிறருக்காக மரிப்பவன்தான் தனக்காக வாழ்கிறான்.

நினைவில் வைத்துக் கோள்வோம்,

இயேசு தனது மரணத்தின் மூலம்தான் நமக்கு நித்திய வாழ்வைத் தந்தார்.

நமது பிறரன்பு வாழ்விலும் இதையே பின்பற்றுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, September 17, 2024

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். (மத்தேயு நற்செய்தி 9:13)

 "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 9:13)

இயேசு எதற்காக உலகுக்கு வந்தார்?

நம்மீது கொண்ட இரக்கத்தின் காரணமாக, 

தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்து நம்மை மீட்பதற்காக.

காரணம் இரக்கம்,
காரியம் பலி.

Cause mercy.
Effect sacrifice.

அன்பின் காரணமாக நம்மைப் படைத்தார்.

நாம் அன்பை மீறி பாவம் செய்தோம்.

இரக்கத்தின் காரணமாக நமது மீட்புக்காகத் தன்னையே பலியாக்கினார்.

இயேசுவின் சிலுவை மரணத்தில் இரக்கமும், பலியும் பின்னிப் பிணைந்துள்ளன.

Mercy and sacrifice are intertwined.

ஏன் இயேசு பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்று சொல்கிறார்?

புரிவதற்காக,

ஒரு பசு ஒரு கயிற்றினால் மரத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

அப்பா மகனைப் பார்த்து சொல்கிறார்,

"பசுவைத் தொடக்கூடாது. அதை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும்."

அப்பா சொல்வதன் பொருள் மகனுக்குப் புரிந்து விட்டது.

அவன் கயிற்றைத்தான் தொட்டு இழுத்தான்.

மாடு அவன் பின்னால் சென்றது.

ஏன்?

மாடும் கயிறும் பிணைக்கப் பட்டுள்ளன.

வகுப்பில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் கையில் பிரம்பை எடுத்தார்.

மாணவர்கள் அமைதியானார்கள்.

பிரம்புக்கும் அமைதிக்கும் என்ன‌ சம்பந்தம்?

பிரம்பைப் பார்த்தவுடன் அடி ஞாபகத்துக்கு வருகிறது.

 அடி ஞாபகத்துக்கு வந்தவுடன் வலி ஞாபகத்துக்கு வருகிறது.

வலி ஞாபகத்துக்கு வந்தவுடன் அமைதி வந்து விடுகிறது.

அதேபோல் தான் இறைவனின் செயல்களிலும் 

அன்பு ---> இரக்கம் ---> பலி.

நம்மிடமிருந்தும் அதையே விரும்புகிறார்.

நம்மிடம் உள்ள அன்பிலிருந்து இரக்கம் பிறக்க வேண்டும்.

இரக்கம் இருந்தால் நமது அயலான் ஏதாவது தேவையில் இருக்கும்போது அவனுக்கு உதவுவோம்.

அது நற்செயல்.

உதவி செய்யும்போது நமக்கு ஏற்படும் கஷ்டங்களையும், நமது நற்செயலையும் இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுப்போம்.

இரக்கம் இல்லாத பலி பலியே அல்ல.

வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினை.

ஞாயிற்றுக்கிழமை.

8 மணிக்குத் திருப்பலி.

ஏழு மணிக்குத் திருப்பலிக்கு இருவரும் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது,

மனைவி ஏதோ சொல்ல,

கணவன் கோபத்தில் ஓங்கி அறைந்து விட்டான்.

அடித்த அறையில் அவள் கீழே விழுந்து விட்டாள்.

"அப்படியே கிட. பூசைக்கு நேரம் ஆகிறது." என்று சொல்லி விட்டு கோவிலுக்குப் போய் விட்டான்.

திருப்பலி ஆரம்பிக்கும் முன்பே கோவிலுக்கு வந்து விட்டான்.

அவன் ஒப்புக் கொடுத்த பலி இறைவனுக்கு ஏற்றதாக இருக்குமா?

ஆண்டவர் சொல்வார்,

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.

இரக்கம் இன்றி உனது மனைவியை அடித்துவிட்டு எனக்கு வந்து கொடுப்பதற்குப் பெயர் பலியா?

நான் விரும்புவது இரக்கத்தை.
இரக்கம் நற்செயல்களை விளைவிக்கும். நற்செயல்களை எனக்கு ஒப்புக் கொடு.

இரக்கத்தினால் பெறப்படும் பலியே எனக்கு ஏற்ற பலி.

இரக்கம் இல்லாமல் ஒப்புக் கொடுக்கப் படுவது பலியே அல்ல."

"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." 


 "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. 
(மத்தேயு நற்செய்தி 22:37,39)

பிறரன்பு இறையன்புக்கு இணையானது என்று ஆண்டவர் சொல்கிறார்.

நமது ஒவ்வொரு பிறனிலும் இறைவன் இருக்கிறார்.

நம்மிடம் உண்மையாகவே இறையன்பு இருந்தால்,

 பிறரன்பு தானாகவே வந்துவிடும்.

நம்மிடம் பிறர் அன்பு இல்லாவிட்டால் இறையன்பும் இல்லை என்று தான் அர்த்தம்.

பிறர் அன்பு இல்லாதவன்

"நான் கடவுளை நேசிக்கிறேன்."

என்று சொன்னால் அவன் பொய்யன். 

வீட்டின் முன் வந்து நிற்கும் ஏழைக்கு ஒரு வாய் உணவு கொடுக்காமல்

கோவிலில் இலட்சக்கணக்கில் செலவழித்து அசன விருந்து போட்டால் அதை இறைவன் ஏற்க மாட்டார்.

ஒரு ஏழைக்கு வயிறார உணவு போட்டு விட்டு, 

அந்த நற்செயலைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தால் 

அதுதான் அவருக்கு ஏற்புடையதாக இருக்கும்.


"ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 

ஏனெனில் என்று சொன்னாலே அதற்கு பின்வரும் வார்த்தைகள் அதற்கு முந்திய கூற்றுக்கான
காரணம் என்று அர்த்தம்.

இயேசு இரக்கத்தையே விரும்புவதற்கான காரணம் அவர் பாவிகளை அழைக்க உலகுக்கு வந்ததுதான்.

அவர் இரக்கத்தின் காரணமாக பாவிகளை அழைக்க உலகுக்கு வந்ததால்தான் நம்மிடமும் இரக்கத்தை விரும்புகிறார்.

அவர் பாவிகளை விரும்புவதற்குக் காரணம் அவரது இரக்கம்.

 அவர் இரக்கம் உள்ளவர் ஆகவே நம்மிடமும் இரக்கத்தை விரும்புகிறார். 

அவர் எல்லோரிடமும் இரக்கமாக இருக்கிறார். ஆகவே நாமும் அவரைப் போலவே எல்லோரிடமும் இரக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அவர் நம்மைத் தனது சாயலில் படைத்தார். இரக்கம் அவரது சாயலில் ஒரு அம்சம். நாம் இரக்கமாக இல்லாவிட்டால் அவரது சாயல் நம்மிடம் இருக்காது.

அவரது சாயலில் நாம் வாழ வேண்டும் என்று விரும்புகிறார். 

"தாயைப் போல பிள்ளை" என்பது தமிழ்ப் பழமொழி.

"படைத்தவரைப் போல படைக்கப்பட்டவன்" 
என்பது இறை மொழி.

 "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்."
(தொடக்கநூல் 1:26)

நாம் அனைவரும் பாவிகள். 

இயேசு பாவிகளை அழைக்க உலகுக்கு வந்ததால் நாமும், மற்றவர்களும் மனம் திரும்பி நல்லவர்களாக மாற வேண்டும்.

நாம் மனம் திரும்புவதோடு மற்றவர்களும் மனம் திரும்ப அவர்களுக்கு உதவ வேண்டும். 

இது நமது முக்கியமான பிறரன்புப் பணி.

"நேர்மையாளரை அல்ல."

இயேசு நேர்மையாளரை அழைக்க வரவில்லையா?

எதிர்க் கேள்வி,

நோயாளிக்கு மருத்துவர் தேவை, 

அப்படியானால் நோய் இல்லாத மருத்துவரின் மனைவிக்கு அவளுடைய மருத்துவ கணவர் தேவை இல்லையா?

நோயாளி என்னும் முறையில் நோயாளிக்கு மருத்துவர் தேவை.

மனைவி என்னும் வகையில் அவளும் அவருக்குத் தேவை. 

பாவிகள் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் ஆகவே அவர்களுக்கு மீட்பர் தேவை. 

மீட்பரைப் பயன்படுத்தி பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் நேர்மையாளர்.

எல்லா பாவிகளும் நேர்மையாளர்களாக மாற வேண்டும் என்பதையே இயேசு விரும்புகிறார்.

எல்லோரும் நேர்மையாளர்களாக மாறி இயேசுவோடு இணைந்து மோட்சத்துக்குச் சென்று விட்டால் 

அதன் பின் இறைமகன் மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை.

தான் உலகிற்கு வந்ததன் முக்கியமான நோக்கத்தை நமக்கு விளக்குவதற்காகத் தான் இயேசு,

"நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்று கூறினார். 

இயேசு மனிதனாக பிறந்ததன் நோக்கம் நிறைவேறிய பின் 

அவரது மீட்பை ஏற்றுக் கொண்ட அனைவரும் அவரோடு விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம். 

லூர்து செல்வம்.

Monday, September 16, 2024

" பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்". (லூக்கா நற்செய்தி 8:2)

"பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்"
(லூக்கா நற்செய்தி 8:2)

கலிலேயாக் கடலின் மேற்குக் கரையில் அமைந்திருந்தது மகதலா (Magdala) என்னும் மீன்பிடி கிராமம்.

இங்கு பிறந்து வளர்ந்தவள் மகதலா மரியாள்.

இவளுடைய பெற்றோர் மீன் பிடிப்பவர்கள், பொருளாதார ரீதியாக வசதி உள்ளவர்கள்.

ஒரு முறை அவளுக்குப் பேய் பிடித்திருந்தது.

இயேசு அந்தப் பகுதியில் நற்செய்தி அறிவிக்க வந்தபோது 

அவர் புதுமைகள் செய்து நோய்களைக் குணமாக்க வல்லவர் என்பதைக் கேள்விப் பட்டு 

குணம் பெறுவதற்காக
 அவரைத் தேடி வந்தாள்.

அவளை ஏழு பேய்கள் பிடித்திருந்ததை அறிந்த இயேசு அவளை முற்றிலும் குணமாக்கினார்.

அந்த வினாடியிலிருந்து அவள் இயேசுவின் பக்தையாக மாறி, அவருக்கு சேவை செய்வதற்காக அவரைப் பின்பற்றினாள்.

யோவன்னா, சூசன்னா போன்ற பக்தியுள்ள பெண்களோடு மரிய‌ மதலேனாளும் உண்மையான பக்தியுடன் இயேசுவைப் பின்பற்றினாள்.

அவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.

மரியாளின் மன மாற்றமும், அர்ப்பண வாழ்வும் இயேசுவின் நற்செய்திப் போதனைக்கும், தேவையில் உள்ளவர்கள் மீது அவர் காட்டிய இரக்கத்துக்கும் சாட்சி சொல்கின்றன.

"நமது ஞான மேய்ப்பவர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்."     
இது திருச்சபையின் கட்டளை.

மரியாள் மீன் பிடிக்கும்ன் தொழிலில் அவளது பெற்றோர் சம்பாதித்ததைக் கொண்டு திருச்சபையை நிருவிய‌ நமது ஆண்டவருக்கே பணிவிடை செய்தாள்.

இயேசுவின் பாடுகளின் போது அருளப்பரைத் தவிர வேறு எந்த சீடரும் அவர் பின்னால் வரவில்லை.

ஆனால் மரிய மதலேனாள் 

கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த மற்ற பெண்களோடும், 

யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் குலோப்பா மரியாவோடும் (அன்னை மரியாளின் இளைய சகோதரி)

 செபதேயுவின் மக்களுடைய தாய் சலோமி மரியாளோடும்

சிலுவைப் பாதையில் அழுதுகொண்டே இயேசுவைப் பின்பற்றியதோடு

அவர்களோடு சிலுவையின் அடியில் நின்று கொண்டிருந்தாள்.

நான்கு மரியாள்கள்.
(Four Maries)

1.அன்னை மரியாள்.
2.குலோப்பா மரியாள்.
3. சலோமி மரியாள்.
4. மகதலா மரியாள்.

இயேசுவை அடக்கம் செய்த போதும் அவர்கள் உடன் இருந்தார்கள்.

இயேசு கல்லறையில் இருந்த போதும் அவர்கள் அவரையே நினைத்துத் தியானித்துக் கொண்டிருந்தார்கள்.

மரிய மதலேனாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே  கல்லறைக்கு வந்து விட்டாள்.

அவளோடு அன்னை மரியாளின் சகோதரியும், குளோப்பாவின் மனைவியுமான மரியாளும் வந்தாள்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

அன்னை மரியாள் கல்லறைக்கு வரவில்லை. ஏனெனில் இயேசு உயிர்ப்பார் என்பதை உறுதியாக நம்பினாள்.

இயேசு உயிர்த்தவுடன் முதல் முதலில் தனது அன்னைக்குதான் காட்சி கொடுத்தார்.

அதற்குப் பிறகுதான் மற்றவர்களுக்கு.

நற்செய்தியிலும், அதை அறிவிப்பதிலும் ஆர்வம் கொண்ட மகதலா மரியாளை அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலர் என்று அழைக்கிறோம்.

ஏனெனில் இயேசு உயிர்த்த நற்செய்தியை அப்போஸ்தலர்களுக்கு அறிவித்தவளே அவள்தான்.


"(வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார்.

 அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். 

மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். 

அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள்."
(மாற்கு நற்செய்தி 16:9,10)

அவர்கள் அவள் கூறியதை நம்பவில்லை.

பெந்தகோஸ்து அன்று தூய ஆவியின் வருகைக்குப் பின்னர் சீடர்கள் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.

அன்னை மரியாள் அருளப்பரின் பாதுகாப்பில் இருந்தாள்.

அன்னை மரியாளோடு மகதலா மரியாளும் சென்று எபேசு நகரில் நற்செய்தி அறிவித்தாள்.

அவளது நற்செய்தி அறிவிப்புப் பணியில் அன்னை மரியாள்  மிகவும் உதவிகரமாக இருந்தாள்.

இயேசு அவளை ஒருமுறைக் குணமாக்கியதற்கு நன்றிக் கடனாக மரிய மதலேனாள் தன் வாழ்நாள் முழுவதையும் முற்றிலுமாக இறைப் பணிக்கு அர்ப்பணித்தாள்.

நாம் எத்தனையோ தடவைகள் எத்தனையோ உதவிகளை இறைவனிடமிருந்து பெற்றிருக்கிறோம்.

நாமும் நமது வாழ்வை முற்றிலுமாக இறைப் பணிக்கு அர்ப்பணிப்போம்.

லூர்து செல்வம்.

Saturday, September 14, 2024

" ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.". (லூக்கா நற்செய்தி 7:47)

"ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றர்."
(லூக்கா நற்செய்தி 7:47)
 

ஒரு பரிசேயரின் அழைப்பை ஏற்று  இயேசு அங்கு சென்று அவரோடு  பந்தியில் அமர்ந்தார். 


அப்போது பாவியான பெண் ஒருவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழ் ஒன்றை எடுத்து வந்து,

தனது பாவங்களுக்காக வருந்தி அழுது,


இயேசுவின் காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, 

தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு,

 அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். 

 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, 

"இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; 

இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே நினைத்துக் கொண்டார். 

அவன் நினைப்பை அறிந்த இயேசு அவரைப் பார்த்து,

"இருவர் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தனர்.

 ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமும் வாங்கியிருந்தனர்

 அவர்களால் கடனைத் தீர்க்க முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். 

இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?" என்று கேட்டார். 

 சீமோன் மறுமொழியாக, "யாருக்கு அதிகக் கடன்  தள்ளுபடி செய்யப்பட்டதோ  அவர்தான் என்று நினைக்கிறேன்" என்றார். 

இயேசு அவரிடம், 

 "இவர் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். 

குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார். 

அன்பு குறித்தும், பாவமன்னிப்பு குறித்தும் இயேசு கூறிய வார்த்தைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பாவ மன்னிப்புப் பெற வேண்டுமானால் பாவங்களுக்காக மனம் வருந்த வேண்டும்.

இறைவன் மீது அன்பு உள்ளவர்கள் தான் மனம் வருந்துவர்.

ஆக, அன்பு செய்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப் படும்.

முழுமையாக அன்பு செய்பவர்கள் மன்னிப்பின் பயனை முழுமையாக அனுபவிப்பர்.
(இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார்.)

குறைவாக அன்பு செய்வோர் குறைவாக அனுபவிப்பர்.
(குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்")

ஒரு ஒப்புமை இதைப் புரிந்து கொள்ள உதவும்.

திருமண விருந்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவுதான் பரிமாறப்படும்.

நல்ல பசியுள்ளோர் அதை மிகவும் அனுபவித்து வயிறாரச் சாப்பிடுவர்.

பசி இல்லாதவர்களும் சாப்பிடுவார்கள், ரசித்துச் சாப்பிட மாட்டார்கள்.

முழுமையான அன்பு உள்ளவர்கள் பாவ மன்னிப்பின் பயனை முழுமையாக அனுபவிப்பார்கள்.

குறைவான அன்பு உள்ளவர்கள் 
பயனை குறைவாக அனுபவிப்பார்கள்.

God's forgiveness is freely offered and equally available to all, but our ability to receive and respond to it can vary greatly depending upon the amount of our love.

இரண்டு பேர் ஒரே மாதிரியான சாவான பாவம் செய்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சாவான பாவம் மோட்சத்துக்குத் தடைக்கல்.

இருவரும் பாவத்துக்கு மனஸ்தாபப் பட்டு, நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்கிறார்கள்.

இருவருடைய பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன.

தடைக்கல் நீங்குகிறது.

உடனே இறந்தால் மோட்சம் உறுதி.

ஆனாலும்,

இருவரும் ஒரே மாதிரியாக அன்பு செய்யவில்லை.

ஒருவர் அடுத்தவரைவிட அதிகமாக அன்பு செய்கிறார்.

பரிசுத்த நிலையில் 


அதிகமாக அன்பு செய்பவருடைய ஆன்மா 

குறைவாக அன்பு செய்பவருடைய ஆன்மாவை விட 

அதிக பரிசுத்தமாக இருக்கும்.

விளைவு?

இருவருடைய ஆன்மாக்களும் உத்தரிக்கிற தலத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

அதிகமாக அன்பு செய்பவருடைய ஆன்மா உத்தரிக்கிற தலத்தை சீக்கிரம் கடந்து விடும்.

குறைவாக அன்பு செய்பவருடைய ஆன்மா உத்தரிக்கிற தலத்தைக் கடக்க காலம் கொஞ்சம் அதிகமாகும்.

ஆனாலும் இருவருக்கும் மோட்சம் உறுதி.

பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு இயேசுவின் கால்களில் விழுந்து அழுத பாவி நமக்கு ஒரு முன்மாதிரிகை.

நாமும் இயேசுவின் கால்களில் விழுந்து அழுது நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்போம்.

மன்னிப்பு உறுதி.

அன்பு செய்வோம்.

அதிகமாக அன்பு செய்வோம்.

விரைவாக விண்ணகம் செல்வோம்.

லூர்து செல்வம்.

 .

" இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.". (லூக்கா நற்செய்தி 7:32)


"இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்."
(லூக்கா நற்செய்தி 7:32)

திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றினார். 

 மக்களில்  வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றனர். 

ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள். 

இவர்களைக் குறித்து தான் இயேசு 


"இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்."

என்று உருவகத்தில் கூறுகிறார்.


சந்தைவெளியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன விளையாட்டு?

 ஒரு குழந்தை மற்றவர்களைப் பார்த்து கூறுகிறது,

"நாங்கள் சந்தோசமான‌ இசையில் பாடினோம்.  ஆனால் நீங்கள் அதற்கு ஏற்றபடி நடனமாடவில்லை.

நாங்கள் ஒப்பாரி வைத்தோம், நீங்கள் அதற்கு ஏற்றபடி அழவில்லை."

இப்படி ஒருவருக்கொருவர் சொல்லி விளையாடுகிறார்கள்.

இது இயேசுவின் கால யூத சிறுவர்களின் விளையாட்டு.

இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நம் காலத்துக்கு வருவோம்.

ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம்.

Mike setல் மகிழ்ச்சிகரமான பாட்டு போட்டுக் கொண்டிருப்பார்கள்.

அதைக் கேட்கும் அங்குள்ள சிறுவர்கள் நடனம் ஆடுவார்கள், ஆடா விட்டால் அவர்கள் இசையை ரசிக்கவில்லை என்று அர்த்தம்.

ஒரு இழவு வீட்டுக்குப் போகிறோம்.  அங்கு ஒப்பாரி பாடல் போடுகிறார்கள்.

அதற்கு ஏற்றபடி இழவு வீட்டுக்கு வந்தவர்கள் அழ வேண்டும்.

அழுவதற்குப் பதில் சிரித்தால் என்ன அர்த்தம்?

அழுவாரோடு  சிரிப்பவர்களும்,
சிரிப்பாரோடு அழுபவர்களும் 
எப்படிப் பட்டவர்கள்?

திருமுழுக்கு அருளப்பரின் போதனைப்படி நடக்காத பரிசேயர்களும் அப்படிப் பட்டவர்கள்.

என் வயதுள்ள பெரியவர்களுக்கு நான் சொல்லப் போவது புரியும்.

நான் சிறுவனாக இருக்கும் போது பெரிய வியாழன் இரவு ஆரம்பிக்கும் நற்கருணை ஆராதனை பெரிய வெள்ளிக் கிழமை சிலுவைப் பாதை வரை இடைவிடாது தொடரும்.

விடிய விடிய ஏராளமானோர் நற்கருணை நாதர் முன் மண்டியிட்டும், அமர்ந்தும் இருப்பார்கள்.

விடிய விடிய வியாகுலப் பிரசங்கம் பக்தி உணர்வுடன் வாசிக்கப் படும்.

மக்கள் விடிய விடிய ஆண்டவரின் பாடுகளைக் கேட்டு அழுது கொண்டேயிருப்பார்கள்.

நானும் என் தம்பியும் சிறுவர்கள். எங்களை அம்மா அவர்கள் பக்கத்தில் உட்கார வைத்து விடுவார்கள்.

அம்மா அழுவதைப் பார்த்து நாங்களும் அழுவோம்.

வியாகுலப் பிரசங்கம் வாசிப்பவர் அவ்வளவு உருக்கமாக வாசிப்பார்.

இப்போது அன்பியம் வாரியாக நள்ளிரவு வரை தானே ஆராதனை இருக்கிறது.

காலம் மாறிப் போச்சு.

பரிசேயர்களைப் பொறுத்தவரை திருமுழுக்கு அருளப்பரிடம் மட்டுமல்ல, இயேசுவிடமும் அப்படித்தான் நடந்து கொண்டார்கள்.

பாமர மக்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கவும், தங்கள் நோய் நொடிகள் குணமாகவும் இயேசுவின் பின் சென்றார்கள்.

ஆனால் பரிசேயர்கள் இயேசுவின் சொற்களிலும் செயல்களிலும் குறை கண்டு பிடிக்கவும், அவரைத் தொலைப்பதற்காக வழி காணவும் அவர் சென்ற இடமெல்லாம் சென்றார்கள்.

பாடலுக்கு ஏற்றபடி ஆடமுடியாத குழந்தைகளைப் போல 

இயேசுவின் போதனைப்படி வாழாமல் தங்கள் விருப்பப்படி வாழ்ந்தார்கள்.

நமது நிலைமை எப்படி?

தினமும் நற்செய்தியை வாசிக்கிறோம், அதன்படி வாழ்கிறோமா?

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்கிறோம்.

திருப்பலி காண்கிறோமா? அதில் பங்கேற்கிறோமா?/

வாசகங்களைக் கேட்கிறோமா? தியானிக்கிறோமா?

பிரசங்கத்தைக் கேட்கிறோமா?ன கவனிக்கிறோமா?

கேட்க மட்டும் செய்பவர்கள் இடையில் தூங்கிவிடுவர்,

பிரசங்கம் முடிந்த பின் "சுவாமியார் என்ன சொன்னார்?" என்று கேளுங்கள். கையை விரிப்பார்கள்.

கவனிப்பவர்கள் வாழ்வுக்கு பிரசங்கம் வழிகாட்டியாய் இருக்கும்.

திவ்ய நற்கருணையை உணவாக வாங்குகிறோமா?
பண்டமாக வாங்குகிறோமா?

உணவாக வாங்குவோர் நாவில் வாங்குவர்.

பண்டமாக என்று கையில் வாங்குவர்.
.
ஆண்டவரை உணவாகப் பெற்றபின் கால்மணி நேரமாவது அவரோடு பேசுகிறோமா?

அல்லது 

சுவாமியார் "சென்று வாருங்கள்" என்று சொல்லுமுன்பே சென்று விடுகிறோமா?

திருமண வீட்டின் விருந்து ருசி அடுத்த விருந்து வரும் வரை ஞாபகத்தில் இருக்கும்.

இயேசுவின் ருசி அன்று முழுவதுமாவது ஞாபகத்தில் இருக்குமா?

" ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்."
(திருப்பாடல்கள் 34:8)

ஒரு சிறு பள்ளிக்கூட அனுபவம் நினைவுக்கு வருகிறது.

1953, St. Mary's Madurai யில் ஒன்பதாவது வகுப்பில் படித்த போது நிகழ்ந்தது.

Hostel மாணவன்.

காலை திருப்பலி முடிந்து படிப்பறைக்கு வந்த பின்தான் கவனித்தோம், எங்கள் சட்டையின் முன்புறம் ஆங்காங்கே மைப்புள்ளிகள்.

கையைப் பார்த்தோம், ஆட்காட்டி விரலில் மை.

ஒரு மாணவன் வேகமாக கோவிலுக்கு ஓடி, தீர்த்தத் தொட்டியைப் பார்த்து விட்டு வந்தான்.

யாரோ தீர்த்தத்தில் மையை ஊற்றியிருக்கிறார்கள்.

wardenனுக்கு புகார் பறந்தது.

அவர் படிப்பறைக்கு வந்து, மாணவர்களைப் பார்த்தார்.

ஒரு மாணவன் சட்டையில் மட்டும் மை இல்லை.

"உண்மையைச் சொல். நீதான் தீர்த்தத்துக்குள் மை ஊற்றினாயா?"

"ஆமா, சுவாமி."

"ஏன்?''

"நண்பர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க."

"என்ன பாடம்?"

"சுவாமி, தீர்த்தத்தைத் தொட்டு சிலுவை அடையாளம் தானே போடணும்?"

"ஆமா.''

"மாணவர்களைக் கொஞ்சம் பாருங்கள். யாருமே சிலுவை அடையாளம் போடவில்லை.

   
சிலுவை அடையாளம்  போட்டிருந்தால் மைக்கறை நெற்றியிலும், நெஞ்சிலும், இரண்டு தோள்பட்டைகளிலும் தானே இருக்க வேண்டும்?

யாருக்காவது இருக்கான்னு பாருங்க.

முன் பக்கம் முழுவதுமே பொட்டு பொட்டா இருக்கு.

சும்மா விரல மைக்குள்ள முக்கித் தெளிச்சிருக்காங்க.

சிலருக்கு முதுகும் பக்கமும் தெளிச்சிருக்கு, 
இது பின்னால 
வந்தவன் பார்த்த வேலை.

ஒழுங்கா சிலுவை அடையாளம் போட நண்பர்களுக்கு கற்றுக் கொடுக்க நினைத்தேன்.

அதனால்தான் இப்படிச் செய்தேன்.

எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் கொடுங்கள்.

அதை நண்பர்கள் திருந்த கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.''

வார்டனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மாணவர்களைப் பார்த்து,

"தம்பி சொல்றது புரியுதா?"

எல்லோரும் "புரிகிறது" என்றோம்.

சுவாமியார் மை ஊற்றியவன் நெற்றியில் சிலுவை அடையாளம் போட்டார்.

அவன்,"நன்றி, சுவாமி " என்றான்.

ஒழுங்காக சிலுவை அடையாளம் போடக் கற்றுக் கொள்வோம்.

இதற்கும் கட்டுரைத் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?

"உங்கள் சிலுவையைச் சுமந்து கொண்டு என் பின்னால் வாருங்கள்" என்று சொன்னேன்,  

உங்களுக்குச் சிலுவை அடையாளம் கூடப் போடத் தெரியவில்லையே!" என்று ஆண்டவர் நம்மைப் பார்த்து சொல்லிவிட்டுக் கூடாது.

ஆண்டவர் கூறியுள்ளபடி சிலுவையைப் பக்தியுடன் சுமப்போம்.

முதலில் ஒழுங்காகச் சிலுவை அடையாளம் போடக் கற்றுக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

"அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, "அழாதீர்" என்றார்.". (லூக்கா நற்செய்தி 7:13)

"அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, "அழாதீர்" என்றார்."
(லூக்கா நற்செய்தி 7:13)

இந்த இறை வசனத்தைத் தியானிக்கும் போது என் மனதில் ஓடிய எண்ண ஓட்டங்களை அப்படியே பதிவு செய்கிறேன்.

இயேசு 
முழுமையாக மனிதன்.
ஆனாலும் அவரது மனித சுபாவம் இறைமகன் என்ற தேவ ஆளுக்கு உரியது.

ஆகவ அவர் 
 முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.

கடவுள் சர்வ வல்லவர், சர்வ ஞானி.

சர்வத்தையும் படைத்தவர்.

அவரால் அன்றி எதுவும் படைக்கப் படவில்லை.

பாவம் தவிர, அவரது திட்டத்தை மீறி எதுவும் நடக்காது.

நமது பிறப்பைத் தீர்மானிக்கும் அவர்தான் மரணத்தையும் தீர்மானிக்கிறார்.

அவர் திட்டப்படி தான் பிறக்கிறோம்,

அவர் திட்டப்படி தான் மரிக்கிறோம்.

இன்றைய வாசகத்தில் வரும் விதவையையும், அவளது மகனையும் படைத்தவர் அவர்தான்.

மகனின் மரணமும் அவரது திட்டப்படி தான்.

அந்த பையனின் மரணத்தைத் திட்டம் போடும்போதே 
தான் அவனுக்கு உயிர் கொடுக்கப் போவதும் அவருக்குத் தெரியும்.

அந்த மரணத்தைத் திட்டம் போடாமலே இருந்திருக்கலாமே.

ஏன் மரணிக்கச் செய்து உயிர் கொடுத்தார்?

கேள்வி எழும் போதே 
பதிலும் கூடவே எழுகிறது.

பிறவிக் குருடனுக்குப் பார்வை கொடுத்த புதுமையிலும், இறந்த லாசருக்கு உயிர் கொடுத்த புதுமையிலும் இதற்கான பதில் இருக்கிறது.

"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்;காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். 


அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். (அரு.9:2,3)



இலாசர் நோயுற்றிருப்பதாக இயேசு கேள்விப்பட்டார்.

உடனே பார்க்கப் போகாமல் தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். 

அந்த காலகட்டத்தில் அவன் இறந்து விட்டான்.

அதற்காகத்தான் இரண்டு நாட்கள் தங்கினார்.

அவன் இறந்து விட்டான் என்ற செய்தி வந்த பின், "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" என்றார். 

பின் , "இலாசர் இறந்து விட்டான்" என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு, 

"நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்;

 ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்" என்றார். 

சீடர்கள் மனதில் தன்மீது நம்பிக்கை ஏற்படும் பொருட்டு லாசரைச் சாக விட்டு விட்டு, பிறகு ஒரு புதுமை செய்து அவனை உயிர்ப்பித்தார்.

இப்போது இயேசு இறப்பின் மீதும், உயிர்ப்பின் மீதும் அதிகாரம் உள்ள கடவுள் என்று சீடர்களுக்குப் புரியும்.

அவர் மீது உள்ள நம்பிக்கை உறுதியடையும்.

லாசரின் வீட்டுக்கு வந்தபின் 
இயேசு மார்த்தாவிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 

 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். ' 

 மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார். 

ஆக, சீடர்களும், லாசரின் வீட்டாரும் தன்னை மெசியா என்றும், இறைமகன் என்றும் ஏற்றுக் கொள்வதற்காகவே லாசரைச் சாக விட்டு உயிர்ப்பித்தார்.

விதவைத் தாயின் மகனை இறக்க விட்டதும்,

ஒருவரைக் குருடராகப் படைத்ததும்,

லாசரைச் சாக விட்டதும் 

கடவுளை மாட்சிமைப் படுத்தவும் அவர்மீது மக்களுக்கு விசுவாசம் ஏற்படுவதற்காகவும் தான்.

கடவுள் நம்மைப் படைத்தது அவரை அறியவும், அவரை நேசிக்கவும், அவருக்குச் சேவை செய்யவும் தான்.

நமக்காக அவர் போடும் திட்டங்கள் எல்லாம் அதையே மையமாகக் கொண்டிருக்கும்.

நமக்கு நோய் நொடி வரும் போது அது நம்மைப் படைத்தவரின் திட்டம் என்று நம்பினால் நோய்க்காக வருத்தப் பட மாட்டோம். 

படைத்தவர் நமது நன்மைக்காகவே செய்வார் என்று மகிழ்வோம்.

மருத்துவரிடம் நோயாளியை ஒப்படைத்தால் அவர் செய்வதெல்லாம் நோயாளி குணம் அடைவதையே மையமாகக் கொண்டிருக்கும்.

ஊசி போடுவது நோயாளிக்கு வலிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, அவனைக் குணமாக்க.

ஆனால் வலிக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டும்.

ஆப்பரேசன் செய்வது அவனை அறுத்து,  ஒரு பக்கமும் போக விடாமல் படுக்கையில் போடுவதற்காக அல்ல, அவனைக் குணமாக்க.

குணமடைய வேண்டுமென்றால் அறுபட்டுத்தான் ஆக வேண்டும்.

அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

தந்தை தன் மகனை வளர்ப்பதற்காக என்ன செய்தாலும் மகன் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

மாணவன் நன்கு படிப்பதற்காக ஆசிரியர் என்ன செய்தாலும் மாணவன் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

கடவுள் நமக்காகப் போடும் திட்டங்கள் எல்லாம் நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்துவதற்காகத்தான். .

என்ன செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

யோபு ஒரு நல்ல உதாரணம்.

நாம் ஏற்றுக் கொள்வதில் இறைவன் மாட்சிமை‌ அடைய வேண்டும்.

நமது ஆன்மா பரிசுத்தம் அடைவதற்காக நமக்கு விருப்பம் இல்லாதது எது நடந்தாலும் அதைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உலகியல் வாதிகள் எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வயநாட்டு இயற்கை நிகழ்வை ஒரு அழிவு என்று உலகியல் வாதிகள் சொல்வார்கள்.

அது இறைவனின் சித்தம் என்று ஆன்மீக வாதிகள் ஏற்றுக் கொள்வார்கள்.

தங்கள் இறையன்பு பிறரன்புப்‌ பணிகளுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நாம் செய்யும் பாவம் தான் இறைத் திட்டத்துக்கு எதிரானது.

பாவம் தவிர எது நடந்தாலும் அதை இறைத் திட்டமாக ஏற்றுக் கொண்டு, இறைவனை மகிமைப் படுத்துவோம்.

ஒவ்வொரு வினாடியும் இறைவன் நம்மோடு தான்.

நாம் ஏன் பயப்பட வேண்டும்?

நாம் இறைவனை ஏற்றுக் கொண்டால் அவர் தருவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நிலை வாழ்வுக்கு அவர் நம்மை ஏற்றுக் கொள்வார்.

லூர்து செல்வம்.

" ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். (லூக்கா நற்செய்தி. 7:6,7)



 "ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். 
உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். 
(லூக்கா நற்செய்தி. 7:6,7)

கப்பர்நாகூமிலுள்ள நூற்றுவர் தலைவர் ரோமையர் படைப் பிரிவைச் சார்ந்தவர்.

உண்மையான பிறரன்பு உள்ளவர்.

யூதர்கள் ரோமையர்களால் ஆளப்பட்டு வந்தனர்.

நூற்றுவர் தலைவர் யூதர் அல்ல, ஆனாலும் அவர்களை உண்மையான அன்புடன் நேசித்தார்.

அவர்களுக்கு ஒரு செபக்கூடம் கூட கட்டிக் கொடுத்திருக்கிறார்.

யூதராகிய இயேசுவின் மீது யூதர்களுக்கு இருந்த விசுவாசத்தை விட அவருக்கு அதிக விசுவாசம் இருந்தது.

பரிசுத்தராகிய அவர் முன் நிற்கக்கூட தான் தகுதி அற்றவன் என்று நினைக்கும் அளவுக்குத் தாழ்ச்சியுள்ளவர்.

அவருடைய பணியாளர் ஒருவர் சாகக் கிடந்தார்.

இயேசுவால் அவரைக் காப்பாற்ற முடியும் என்று உறுதியாக நம்பினார்.

இயேசுவிடம் நேரடியாக வந்து உதவி கேட்க அவருடைய தாழ்ச்சி இடம் கொடுக்கவில்லை.

ஆகவே ஒரு பணியாளர் மூலம் இயேசுவுக்குச் செய்தி அனுப்பினார்.

இயேசு அவருடைய இல்லத்துக்குப் போய்க்கொண்டிருந்த போது 

திரும்பவும் ஒரு ஆள் அனுப்பி 


"உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். 
உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்." என்று சொல்லச் செய்தார்.

இயேசுவும் அவரது விசுவாசத்தைப் பாராட்டி நோயாளியை வார்த்தையாலே குணமாக்கினார்.

நூற்றுவர் தலைவரிடமிருந்த ஆழமான விசுவாசம், நம்பிக்கை, தாழ்ச்சி ஆகிய புண்ணியங்கள் நம்மிடம் இருக்கின்றனவா என்பதை ஆராய்வோம்.

நாம் திவ்ய நற்கருணை வாங்குமுன் செந்தூரியன் பயன் படுத்திய அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி நாம் செபிக்க தாய்த் திருச்சபை நமக்கு அறிவுறுத்துகிறது.

"தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதி அற்றவன், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், என் ஆன்மா குணமடையும்."

இந்த செபத்தைச் சொல்லும் போதெல்லாம் என் மனதில் ஒரு எண்ணம் ஓடும்.

செந்தூரியனின் செபத்தைக் கேட்டு அதன்படி இயேசு அவர் வீட்டுக்குப் போகவில்லை.

ஆனால்  இயேசு என்னிடம் வரப் போகிறார்.

நானும் என் நாவில் அவரை வரவேற்கப் போகிறேன்.

பிறகு எதற்கு இந்த செபம்?

இந்த செபத்தை ஏன்  திருச்சபைத் தாய் திருவிருந்தில் சேர்த்திருக்கிறாள்?

ஒவ்வொரு நாளும் பள்ளிக்குப் புறப்படும் போது நமது தோளில் புத்தகப் பை தொங்கும்.  உள்ளே Tiffin box இருக்கும்.

அவற்றைப் பார்த்துக் கொண்டே அம்மா கேட்பார்கள்,

''எல்லாம் எடுத்துக் கிட்டியா?"

"ஆமாம்மா."

"Tiffin box?"

"எடுத்துக் கோண்டேன்மா."

"சரி, பத்திரமா‌ போய்வா. சாயங்காலம் சீக்கிரம் வந்து விடு.''

எதற்காக தினமும் இந்த விசாரிப்பு?

நம் மேல் நமக்கு அவர்களுக்கு உள்ள அக்கறை.

அம்மாவின் இந்த தினசரி விசாரிப்பு நாம் பள்ளிக்கூடம் புறப்டுமுன்பே நம் மனதில் தோன்றும்.

நாமும் எல்லாவற்றையும் ஞாபகமாக எடுத்து வைப்போம்.

அதேபோல் தான் திருச்சபைத் தாயும் நாம் நற்கருணை வாங்கும் முன் இந்த செபத்தை சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்திருக்கிறாள்.

இந்த செபத்தை சொல்லும்போது நம் மனதில் எழும்ப வேண்டிய கேள்விகள், 

"எனக்குள் வரயிருப்பவர் யார்?
அவர் எப்படிப் பட்டவர்?
பரிசுத்தராகிய அவர் என்னிடம் வரவேண்டிய அளவுக்கு நான் பரிசுத்தமாக இருக்கிறேனா?"

இந்தக் கேள்விகள் நமது உண்மை நிலையைப் புரிய வைக்கும்.

 கேட்டுப் பழக்கமாகிவிட்ட இக்கேள்விகள் மறுநாள் திருப்பலிக்கு வருமுன்பே நம் மனதில் எழும்.

கேள்விகளும் பதில்களும் உள்ளத்திலிருந்து வந்தால் திருப்பலிக்கு வரும்போதே நம்மைத் தயாரித்துக் கொண்டு வருவோம்.

தேவைப் பட்டால் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து விட்டு வருவோம்.

நம் மனதை எப்போதும் பரிசுத்தமாக வைத்திருப்பதற்காகத்தான் இந்த செபம் திரு விருந்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது. 

நற்கருணை நாதர் நமக்குள் வந்தவுடன்,

"ஆண்டவரே, என் ஆன்மீக வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன.

எனக்கு அவை பெரியவை.

ஒரு சொல்லால் உலகைப் படைத்த உமக்கு அவை
 ஊதி விட்டால் பறந்து போகும் தூசி போன்றவை.

ஆகவே ஒரு வார்த்தை சொல்லும். உமது அடியான் நான் முற்றிலும் குணமாவேன்."

இதை எப்போதும் சொல்லக்கூடிய மனவல்லப செபமாகவும் பயன்படுத்தலாம்.

"வார்த்தையான இயேசுவே, உமது வார்த்தையால் எனக்கு சுகம் தாரும்.

இயேசுவே, உமது வார்த்தையால் என்னை வழி நடத்தும்."

ஒவ்வொரு வினாடியும் நாம் நமது உள்ளத்தில் இயேசுவை வரவேற்கத் தயாராக இருப்போம்.

லூர்து செல்வம்.

Friday, September 13, 2024

" ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?". (மாற்கு நற்செய்தி 8:36)




"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"
(மாற்கு நற்செய்தி 8:36)



காலை 10 மணிக்குத் திருமணம்.

அருள் அவருடைய அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளுடன் காலை எட்டு மணிக்கே திருமணத்திற்குப் போவதற்காக வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்.

போகிற வழியில் சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு போஸ்ட்டரைப் பார்த்து விட்டு,

அப்பாவிடம்,    "அப்பா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது.

நீங்கள் கல்யாண வீட்டுக்குப் போங்கள். நான் வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறேன்.''

"அப்படி என்ன வேலை?"

"போஸ்ட்டரைப் பாருங்கள். இன்று ரஜினி படம் ரிலீஸ்.

முதல் நாளில் முதல் ஆளாக இருந்து படம் பார்ப்பது என் வழக்கம்.

நீங்கள் போங்கள். நான் படம் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்."

"படம் எத்தனை மணிக்கு?"

"பத்தரைக்கு ஆரம்பிக்கும். ஒரு மணிக்கு முடியும்."

"ஏண்டா கொஞ்சமாவது அறிவு இருக்கா?

10 மணிக்கு பொண்ணு கழுத்ல தாலி கட்டணும்.

நீ மேட்ணி பார்த்து விட்டு ஒரு மணிக்கு வருவேன்னு சொல்ற!"

" சாரிப்பா. போஸ்டர்ல ரஜினி படத்தைப் பார்த்தவுடனே நான் கல்யாண மாப்பிள்ளைங்கிறதே மறந்து போச்சு."

"என்ன அப்பாவும் மகனும் குசுகுசுன்னு பேசுறீங்க?

பேசறத கொஞ்சம் சத்தமாகத்தான் பேசுங்களேன்." அம்மா.

"சினிமா போஸ்டரைப் பார்த்தவுடன் ரஜினி கழுத்துல தாலி கட்டட்டுமான்னு கேட்கிறான்."

"சினிமாக் கிருக்கன் "

"ரஜினி படத்தைப் பார்த்தவுடனே தான் கல்யாண மாப்பிள்ளை என்பதை மறந்து விட்டான்."

சில கிறித்தவர்கள் உலகப் பொருட்களைப் பார்த்தவுடன் தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

நமது ஆன்மா படைக்கப்படும் போதே திருமண நிச்சயதார்த்தத்துடன் தான் படைக்கப் படுகிறது.

மணமகள் ஆன்மா.
மணமகன் இயேசு.

திருமணம் நடைபெற வேண்டிய இடம் விண்ணகம்.

உலகம் விண்ணக வீட்டுக்குச் செல்லும் வழி.

திருச்சபை வழித்துணை.

மணமகளாகிய ஆன்மா மணமகனாகிய இயேசுவின் ஞாபகமாகவே பயணிக்க வேண்டும்.

திருச்சபையின் வழிநடத்துதலின் படி பயணிக்க வேண்டும்.

ஆன்மா வழியில் நடமாடும் சாத்தானிடம் தன்னைப் பறி கொடுத்து விடக்கூடாது.

பாவ வாழ்க்கை தான் சாத்தான்.

மனிதன் உலகில் படைக்கப் பட்டிருப்பது விண்ணக வாழ்வுக்காக.

நிரந்தரமாக உலகில் வாழ்வதற்காக அல்ல.

நம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிற நமது ஆன்மாவை  விண்ணகம் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை.

ஆன்மாவின் நோக்கத்தை மறந்து 

மனிதன் இவ்வுலகில் பணம் ஈட்டுவதிலும், 

சொத்துக்களைச் சேர்ப்பதிலும்,

 சிற்றின்பத்தை அனுபவிப்பதிலும்

 தனது முழு வாழ்க்கையையும் செலவழித்தால் 

அவன் வாழ்ந்தும் பயனில்லை.

அவன் ஈட்டும் பணமும், சேர்க்கும் சொத்தும் ஆன்மீக வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும். 

அவற்றின் உதவியோடு பிறர் அன்புப் பணிகளைச் செய்யும்போது நமது ஆன்மா அருள் வாழ்வில் வளர்கிறது.

மாறாக சிற்றின்ப  அனுபவத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டால் ஆன்மா நிலைவாழ்வை இழக்க நேரிடும்.

நிலை வாழ்வை இழக்க நேரிட்டால் உலக வாழ்க்கையால் எந்த பயனும் இல்லை.

அனுபவிக்க மட்டும் மனிதன் ஈட்டும் உலகப் பொருட்கள் அவனுக்குத் தற்காலிக இன்பத்தைத் தரலாம்.

ஆனால் நித்திய பேரின்பத்தைப் பறித்து விடும்.

இறையன்பிலிருந்து பிரித்து விடும்.

ஈட்டியதை இழந்து விடுவோமோ என்ற பயத்துடன் வாழவைக்கும்.

ஆகவே உலகப் பொருட்களை ஈட்டுவதில் காட்டும் ஆர்வத்தை

இறையருளை ஈட்டுவதில் காட்டுவோம்.

பொருளில் அல்ல,

அருளில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, September 12, 2024

''உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."(அரு. 3:17)



 "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."
(அரு. 3:17)

ஞானோபதேசம் வகுப்பில்.

"சார், ஒரு சந்தேகம்."

"'சொல்லு."

"நமக்கு இறுதித் தீர்ப்பு உண்டா? இல்லையா?"

"'நாம் ஒவ்வொருவரும் இறந்தவுடன் தனித் தீர்ப்பும், உலக முடிவில் இறுதித் தீர்ப்பும் உண்டு. இது திருச்சபையின் அதிகாரப்பூர்வமான போதனை."

"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்." ‌ என்று இயேசு சொல்லியிருக்கிறாரே!"

"'ஆமா. சொல்லியிருக்கிறார். இயேசு நமது மீட்பர்.

அவர் மனிதனாகப் பிறந்ததே நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகத்தானே.

தண்டிப்பது நோக்கமாக இருந்திருந்தால் அதை மனிதனாகப் பிறக்காமலேயே செய்திருக்கலாமே!

அவர் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்தது எல்லாம் நமது பாவங்களை மன்னிபதற்கு மட்டும் தான்."

"அப்போ தனித் தீர்ப்பு, பொதுத் தீர்ப்பு எதற்கு?"

"'நான் யார்?"

"ஆசிரியர். இந்த ஆண்டு எங்கள் ஆசிரியர்."

"'நான் ஏன் தினமும் பள்ளிக்கு வருகிறேன்?"

"எங்களுக்குப் பாடம் கற்றுத் தருவதற்காக."

"'ஏன் பாடம் கற்றுத் தருகிறேன்?"

"எங்களுக்கு அறிவு புகட்டுவதற்காக."

"'இறுதித் தேர்வு எதற்கு?"

"நாங்கள் கற்றதை மதிப்பீடு செய்வதற்காக."

"'ஒரே கேள்வி, ஒரே பதில்.

நான் எதற்காகப் பள்ளிக்கு வருகிறேன்"

"எங்களுக்கு அறிவு புகட்டுவதற்காக."

"'ஆசிரியர் தினமும் வகுப்புக்கு உங்களுக்கு அறிவு புகட்டுவதற்காக மட்டும் தான்.

தேர்வு வைப்பதற்காக அல்ல.

பாட போதனை நோக்கம்.
தேர்வு நோக்கம் அல்ல.

பாடத்தைக் கவனித்து அறிவைப் பெற வேண்டியது நீங்கள்.

இறுதித் தேர்வில் மதிப்பீடு செய்யும் போது நீங்கள் வெற்றி பெறுவதும் பெறாதிருப்பதும் உங்கள் செயல்.

நீங்கள் வெற்றி பெறுவது ஆசிரியரின் தரமான போதனையின் காரணமாகவும், நீங்கள் நன்கு கற்றதன் காரணமாகவும்.

ஆனால் தோல்விக்கு உங்கள் கவனக் குறைவுதான் காரணம்.

போதிய அறிவு பெற்றவர்களை ஆசிரியரால் Fail ஆக்க முடியாது.

புரிகிறதா?"

"புரிகிறது, சார்."

"'என்ன புரிகிறது?"

''நல்லவர்களாக வாழவே கடவுள் மனிதர்களைப் படைத்தார்.

பாவம் செய்தவன் மனிதன்.

மனிதனைப் பாவத்திலிருந்து மீட்கவே தந்தை இறைவன் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

மீட்பை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் மனிதன் சுதந்திரமாகச் செய்யும் செயல்.

இறுதித் தீர்ப்பில் இயேசு மனிதனை மதிப்பீடு மட்டும் செய்கிறார்.

இயேசு தந்த மீட்பை ஏற்றுக் கொண்ட மனிதன் நித்திய பேரின்ப நிலையை அடைகிறான்.

மீட்பை நிராகரித்த மனிதன் பேரிடர் நிலையை அடைகிறான்.

தீர்ப்பு என்றவுடன் உலக நீதிமன்றங்களைப் போல் என்று நினைத்து விடக்கூடாது.

யார் யார் எங்கே போகப்போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியும்.

தான் மரணம் அடையும் போது தான் என்ன நிலையில் இருந்தோம் என்று ஆன்மாவுக்குத் தெரியும்.

பரிசுத்த நிலையில் இருந்தால் மோட்சத்துக்குச் செல்லும்.

உத்தரிக்க வேண்டிய பாவங்கள் இருந்தால் உத்தரிக்கிற ஸதலத்துக்குச் செல்லும்.

சாவான‌பாவ நிலையில் இருந்தால் பேரிடர் நிலையை அடையும்.

இவை எல்லாம் இறைவன் முன்னிலையில் மரித்த வினாடியே நடைபெறும்.

பொதுத் தீர்வையும் ஒரு வினாடியில் முடிந்து விடும்.

ஒரு வித்தியாசம், தனித் தீர்வையில் ஆன்மா மட்டும் செல்லும்.

பொதுத் தீர்வையில் உயிர் பெற்ற உடலோடு செல்லும்.
 


மனிதர்களை மீட்கவே தந்தை மகனை உலகிற்கு அனுப்பினார் என்பது புரிகிறது, சார்."

"'யாராவது குற்றாலத்திற்குப் போயிருக்கிறீர்களா?"

"போயிருக்கிறோம், சார்."

"'அலெக்ஸ், குளிக்கும் போது துணி துவைத்திருக்கிறாயா?"

''துவைத்திருக்கிறேன், சார்."

"நீ குற்றாலம் போனது குளிப்பதற்காகவா, துணி துவைப்பதற்காகவா?"

"அருவியில் குளிப்பதற்காக, சார்."

"'இயேசு எதற்காக உலகுக்கு வந்தார், ஜோ?"

"நமது பாவங்களை மன்னித்து நம்மை மீட்பதற்காக, சார்."

"'ராஜ், செயலின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள நீ சுயமாக ஒரு ஒப்புமை சொல்லு."

"அம்மா காலையில் சமையல் அறைக்குப் போவது சமைப்பதற்காக, தீக்குச்சியைப் பற்ற வைப்பதற்காக அல்ல."

"மேரி, இயேசு நோயாளிகளைக் குணமாக்கினாரா?"

"குணமாக்கினார், ஆனாலும் அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம் அதுவல்ல.

நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகவே உலகுக்கு வந்தார்.''

"'நாம் சுகமளிக்கும் செபக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாமா?"

''கலந்து கொள்ளலாம். ஆனால் பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெறுவதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

கடவுள் சித்தம் இருந்தால் சுகம் பெறுவோம்."

'''நாம் உலகில் வாழ்வதன் நோக்கம் என்ன?"

"விண்ணக வாழ்வுக்காக நம்மைத் தயாரிப்பதே நமது மண்ணக வாழ்வின் நோக்கம்.

நாம் உலகில் செய்யும் ஒவ்வொரு செயலும் அதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.''

"'கடவுள் நமது வாழ்வில் துன்பங்களை ஏன் அனுமதிக்கிறார்?"

"இயேசு தான் பட்ட பாடுகளை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்தது போல நாமும் நமது துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்க வேண்டும்.''

"'நமது நோய் குணமாகும் படி இறைவனிடம் வேண்டாமா?"

"வேண்டலாம். ஆனாலும் நோய் குணமானாலும் குணமாகாவிட்டாலும் அதை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்."

அன்பு மன்னிக்கும், தண்டிக்காது.

வாழ்வின் இறுதி நோக்கம் ஒன்று தான், மீட்பு.

அதைத் தரவே இயேசு உலகுக்கு வந்தார்.

லூர்து செல்வம்.