Friday, June 7, 2024

கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்?

கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்?

கடவுள் நல்லவர், சர்வ வல்லவர், சர்வ ஞானம் உள்ளவர்.

ஆனால் அவரால் படைக்கப்பட்ட உலகில் துன்பங்களும், நோய் நொடிகளும், பாவங்களும் நிறைந்துள்ளனவே.‌ஏன்?

இந்த கேள்விக்கு பதில் காண முயலுமுன் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் அவருடைய எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

நாம் நம்முடைய எல்லா பண்புகளிலும் அளவுள்ளவர்கள்.

அளவுள்ள புரியும் சக்தி  உள்ள மனிதனால் அளவில்லாத கடவுளைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

இரண்டாவது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனுக்கு M.Sc. Biology பாடம் நடத்தினால் அவனுக்கு ஏதாவது புரியுமா?

கடவுள் தன்னைப் பற்றி எவ்வளவு வெளிப் படுத்தியிருக்கிறாரோ அவ்வளவுதான் நமக்குத் தெரியும்.

தெரிந்ததை நாம் ஏற்றுக் கொள்கிறோம், அதாவது, விசுவசிக்கிறோம்.

புரிகிறது என்பதற்காக விசுவசிக்கவில்லை,

கடவுள் வெளிப் படுத்தியிருக்கிறார் என்பதற்காக விசுவசிக்கிறோம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் எதையும் விசுவசிக்க முடியாது.

நாம் விசுவசிக்கும் இறையுண்மைகள் விசுவாசப் பிரமாணத்தில் அடங்கியுள்ளன.

கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்?

என்ற கேள்விக்கான பதில் விசுவசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.

கடவுள் நல்லவர்.

ஆகவே அவரால் தீமையைப் படைக்க முடியாது.

நமது முதல் பெற்றோரை நல்லவர்களாகத்தான் படைத்தார்.

அவர்களைத் தனது சாயலில் படைத்தார். 

முழுமையான சுதந்திரம் உள்ளவர்களாகப் படைத்தார்.

அவர்கள் அனுசரிக்க சில கட்டளைகளைக் கொடுத்தார்.

கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள்.

கீழ்ப்படிய மறுப்பவர்கள் பாவம் செய்கிறார்கள், ‌அதாவது, அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

அவரை ஏற்றுக் கொள்பவர்கள் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வார்கள்.

ஏற்றுக் கொள்ளாதவர்கள் நித்திய காலம் அவரைப் பிரிந்து பேரிடரில் வாழ்வார்கள்.

பாவம் மட்டும் தான் தீமை.

பாவத்தைக் கடவுள் படைக்கவில்லை.

ஆனால் கடவுள் நமது முதல் பெற்றோருக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்திருந்ததால் அவர்கள் பாவம் செய்தபோது அவர்களைத் தடுக்கவில்லை.

தடுக்காததைத்தான் அனுமதிக்கிறார் என்கிறோம்.

பாவத்தின் விளைவாக உலகில் துன்பங்கள் நுழைந்தன.

துன்பங்கள் தீமை அல்ல.

துன்பங்கள் பாவத்தின் விளைவு.

அளவுக்கு மீறிச் சாப்பிடுவது பாவம்.

அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் வயிற்றுவலி ஏற்படும்.

வயிற்றுவலி பாவம் அல்ல, பாவத்தின் விளைவு.

ஆக துன்பங்கள் தீமை அல்ல.

மனிதன் தான் செய்த பாவத்தின் விளைவாக துன்பங்களை அனுபவிக்கிறான்.

பாவத்துக்குக் காரணம் யார்?
மனிதன்.

துன்பங்களுகாகுக் காரணம் யார்?
மனிதன்.

கடவுளால் மனிதன் உலகில் படைக்கப்பட்டான்.

மனிதனால் பாவமும், பாவத்தினால் துன்பங்களும் உலகிற்குள் நுழைந்தன.

பாவத்திற்குக் காரணமான மனிதனைப் படைத்ததால் கடவுள்  அனைத்துக்கும் ஆதிகாரணர். (Primary cause)

ஆனால் பாவத்தின் உடனடி காரணம் (immediate cause) மனிதன் தான்.

பாவத்தின் விளைவு துன்பம் துன்பம் என்றால்

பாவமே செய்யாத அன்னை மரியாள் ஏன் துன்பப் பட்டாள்?

நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தினால் துன்பம் மனுக்குலத்திற்குள் நுழைந்தது.

இறைவன் மரியாளுக்கு சென்மப் பாவத்திலிருந்து விடுதலை கொடுத்தார்.

ஆனால் துன்பத்திலிருந்து விடுதலை கொடுக்கவில்லை.

ஏனெனில் பாவத்திலிருந்து மனுக் குலத்தை மீட்பதற்காக பரிகாரம் செய்ய அவரே துன்பப் படவே மனிதனாகப் பிறந்தார்.

மகனுடைய துன்பத்தில் தாயும் பங்கெடுத்துக் கொண்டாள்.

பாவத்தின் விளைவாகிய துன்பத்தை பாவப் பரிகாரமாக இயேசு ஏற்றுக் கொண்டார்.

இயேசுவைப் பின்பற்றுபவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

துன்பத்தைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொள்ளும் போது அது சிலுவையாக மாறுகிறது.

இன்று உலக மக்கள் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் மனிதர்களுடைய பாவங்கள் தான்.

போர் செய்வது பாவம்.

அதனால் ஏற்படுகின்ற மரணங்கள், பொருளாதாரச் சீரழிவு, பஞ்சம் போன்றவை துன்பங்கள்.

போருக்குக் காரணம் மனிதன் என்றால் அதன் விளைவுகளுக்குக் காரணமும் மனிதன் தானே.

நாமே நம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு நம்மைப் படைத்தவர் மேல் பழியைப் போடலாமா?

வாதத்திற்காக சிலர் கேட்கிறார்கள்,

கடவுள் மனிதனைப் பாவம் செய்ய முடியாதபடி, அதாவது, சுதந்திரம் இல்லாமல் படைத்திருக்கலாமே?

அப்படிப் படைத்திருந்தால் பாவம் நுழைந்திருக்காதே?

இது மனிதப் புத்தியின் அடிப்படையிலான கேள்வி.

மனிதன் தனக்கு உதவ இயந்திரங்களை உண்டாக்குகிறான்.

இயந்திரங்களுக்குச்‌ சிந்திக்க முடியாது,

அவற்றுக்கு சுதந்திரம் கிடையாது,

எதற்காக உண்டாக்கினானோ அதை மட்டும் தான் செய்யும்.

சைக்கிளால் பறக்க முடியாது.

இனப் பெருக்கம் செய்ய முடியாது.

மனிதனை அப்படி கற்பனை செய்து பாருங்கள்?

உங்களையே ஒரு robot வாகக் கற்பனை செய்து பாருங்கள்?

அப்போது தெரியும் சுதந்திரத்தின் அருமை.


கடவுளால் படைக்கப்பட்ட உலகில் பாவங்களும் துன்பங்களும், நோய் நொடிகளும்,  நிறைந்திருப்பதற்குக் காரணம்
மனிதன்தான்.

மனிதன் சுதந்திரமாக செயல்படுவதால்

அவனுடைய சுதந்திரத்தில் குறுக்கிட விரும்பாததால்

அவன் செய்வதைத் தடுக்க விரும்பாமல் அனுமதிக்கிறார்.

நாம் நமது சுதந்திரத்தை கடவுள் விருப்பப்படி வாழப் பயன்படுத்துவோம்.

துன்பங்களைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டு அவற்றைச் சிலுவைகளாக மாற்றுவோம்.

அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment