' உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்."
(லூக்கா.6:27)
இயேசு போதித்தார்,
"உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."
இயேசு சாதித்தார்,
பாடுகளின் போது அவரை ஒரு கன்னத்தில் அறைந்தவர்களுக்கு மறு கன்னத்தை மட்டுமல்ல, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளையும் காட்டினார். அவர்களும் வெறி தீர அறைந்தார்கள்.
நமது பாவங்களுக்குப் பரிகாரமாக உடல் முழுவதும் அடி வாங்கினார்.
*. *. *. *. *
இயேசு போதித்தார்,
"உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்."
இயேசு சாதித்தார்,
சிலுவையில் அறையப்படுமுன் அவருடைய
மேலுடையை எடுத்துக் கொண்டவர்களை
அங்கியையும் எடுத்துக்கொள்ள விட்டு விட்டார்.
அவர்கள் அவரை முழு நிர்வாணமாக்கிவிட்டார்கள்.
அவரது அங்கி அவர் குழந்தையாய் இருந்தபோது அன்னை மரியாளால் பின்னிப் போடப்பட்டது.
அவர் வளர வளர அதுவும் வளர்ந்தது.
அவர் இறந்த போது அவரது எதிரியின் உடலுக்கு உடையானது.
இருந்தும் கொடுத்தவர், இறந்தும் கொடுத்தவர் இயேசு.
*. *. *. *. *
இயேசு போதித்தார்,
"உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்."
இயேசு சாதித்தார்,
அவருடைய விரோதிகள் அவரிடமிருந்து உறித்த உடைகளைத் திருப்பிக் கேட்கவில்லை.
அவர்கள் அவருடைய உடைகளை தங்களுக்குள் பங்கு வைத்துக் கொண்டார்கள்.
நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தனது உடமைகள் அனைத்தையும் தியாகம் செய்தார்.
*. *. *. *. *
இயேசு போதித்தார்,
"உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள்."
இயேசு சாதித்தார்,
சிலுவையில் தொங்கிக்
கொண்டிருந்தபோது அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களில் ஒருவன்
"இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான்.
அவர் அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
*. *. *. *. *
இயேசு போதித்தார்,
"உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."
இயேசு சாதித்தார்,
இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காகத் தந்தையிடம் வேண்டினார்,
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
தனது எதிரிகளை முழு மனதுடன் மன்னித்து விட்டார்.
*. *. *. *. *
இயேசு "உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்."
என்று போதித்தது மட்டுமல்ல,
போதித்ததைச் சாதித்துக் காட்டினார்.
நாம் அவருடைய சீடர்கள்.
குருவைப் போல வாழ்பவர்கள் தான் சீடர்கள்.
நாம் நமது வாழ்க்கையில் இயேசுவை பிரதிபலிக்க வேண்டும்.
மற்றவர்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டும்.
ஒரு அலுவலகத்தில் ஒரே நாளில் வேலையில் சேர்ந்த இருவர்.
ஒருவர் A.
அடுத்தவர் B
பதவி உயர்வு வரும்போது வேலையில் மூத்தவருக்குக் (Senior) கொடுப்பது வழக்கம்.
பதவி உயர்வுக்கான சந்தர்ப்பம் வருகிறது.
இருவரில் யாருக்குக் கிடைக்கும்?
A க்கு எப்படியாவது பதவி உயர்வு பெற்று விட வேண்டும் என்று ஆசை.
B க்கு "எப்படியாவது ஆசை" எதுவும் கிடையாது. கிடைத்தால் போகலாம்.
A தன் ஆசை நிறைவேற குறுக்கு வழி ஒன்றைத் தேர்வு செய்கிறார்.
Bக்குக் கிடைக்கக் கூடாது.
அவருக்குக் கிடைக்காவிட்டால் தனக்குக் கிடைக்கும்.
அதற்கு என்ன செய்யலாம்?
நிர்வாகிடம் சென்று B க்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும்.
அவருக்குக் கிடைக்காது, தனக்குக் கிடைக்கும்.
அந்தத் திட்டத்தோடு நிர்வாகியிடம் செல்கிறார்.
"சார், உங்களுக்கும் Mr.Bக்கும் என்ன பிரச்சினையா?"
"ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?"
"அவர் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் கெடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாதாம்."
"அப்படியா? நான் பார்த்துக் கொள்கிறேன்."
நெருப்பப் பத்தவச்சாச்சு.
B அதில் எறிந்து விடுவார்.
தனக்குப் பதவி உயர்வு உறுதி.
ஆனால் மறுநாள் ஏமாற்றத்தோடு வேலையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
காரணம் B க்குப் பதவி உயர்வு கிடைத்து விட்டது.
நிர்வாகியிடம் சென்றார்.
நிர்வாகி, "வணக்கம் சார், ரொம்ப நன்றி."
"நன்றி எனக்கா? எதற்கு?"
"நீங்கள் செய்த உதவிக்கு."
"நான் என்ன உதவி செய்தேன்?"
" நேற்று காலையில் பைபிள் வாசிக்கும் போது
"உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்."
என்ற வசனத்தை வாசித்தேன்.
அதை எப்படி செயல் படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
உங்கள் இருவரில் யாருக்கு பதவி உயர்வு கொடுப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தபோது
நீங்கள் வந்து ஒரு செய்தி சொன்னீர்கள்.
உடனே தீர்மானித்து விட்டேன் யாருக்கு பதவி உயர்வு கொடுப்பதென்று.
நம்மை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
அதன்படி Mr.Bக்குக் கொடுத்து விட்டேன்.
அடுத்த பதவி உயர்வு உங்களுக்குதான்."
A யும் ஒரு பாடம் கற்றுக் கொண்டார்.
நாமும் பாடம் கற்றுக் கொள்வோம்.
இயேசு போதித்ததை நாம் சாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் முதலில் சாதித்துக் காட்டினார்.
நாமும் சாதித்துக் காட்டுவோம்.
நமக்குத் தீங்கு செய்பவர்களை மனதார மன்னிப்போம்.
தீமையை நன்மையால் வெல்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment