Saturday, June 15, 2024

"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."(மத்தேயு.5:39)

" ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."
(மத்தேயு.5:39)

ஆன்மீகம் சாராத மனிதப் பண்பாடு

"கண்ணுக்குக் கண்."

"பல்லுக்குப் பல்."

"பழிக்குப் பழி."

"தீமைக்குத் தீமை."

ஆனால் கிறிஸ்துவின் ஆன்மீகம் இதற்கு எதிர்மாறானது.

"தீமைக்கு நன்மை."

"யாரும் உன்னை அடிக்கிறார்களா?

அடிபடு.

பதிலுக்கு அவர்களுக்கு நன்மை செய்.

யாரும் உன்னை வெறுக்கிறார்களா?

நீ அவர்களை நேசி.

யாரும் உனக்கு விரோதமாக குற்றம் செய்கிறார்களா?

நீ அவர்களை மன்னி.

இது நம்மைப் படைத்த கடவுள் நமக்கு கற்பிக்கும் பாடம்.

நாம் கடவுளின் கட்டளைகளை மீறி அவருக்கு விரோதமாக பாவம் செய்தோம்.

அவர் நம்மை மன்னிப்பதற்காக மனிதனாகப் பிறந்தார்.

நாம் அவரைச் சிலுவையில் அறைந்தோம்.

அவர் அந்தச் சிலுவையின் மூலமே நம்மை இரட்சித்தார்.

நாம் அவருக்கு மரணத்தைக் கொடுத்தோம்.

அவர் தனது மரணத்தின் மூலமே நம்மை நித்திய மரணத்திலிருந்து காப்பாற்றினார்.

அவர் சிலுவையில் தொங்கும் போது "தாகமாய் இருக்கிறது." என்றார்.

அவருக்கு இருந்தது ஆன்மாக்களுக்கான தாகம்.

அவரது தாகத்தைத் தணிக்க அவரது இரத்தத்தை நமக்குப் பானமாகத் தருகிறார்.

நாம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றதற்குப் பதிலாக அவர் பலிப் பொருளாகிய தன்னையே நமக்கு உணவாகத் தருகின்றார்.

ஒவ்வொரு வினாடியும் மனுக்குலம் அவருக்கு விரோதமாக பாவம் செய்து கொண்டிருக்கிறது.

அவரோ ஒவ்வொரு வினாடியும் மனுக்குலத்தைப் பராமரித்து வருகிறார்.

அவருடைய பராமரிப்பு இல்லா விட்டால் தனது போர்களின் மூலம் மனுக்குலம் என்றோ அழிந்திருக்கும்.

தீமைக்கு நன்மை புரிந்து வரும் கடவுளின் சாயலாகப் படைக்கப் பட்டிருக்கும் நாம் என்ன செய்கின்றோம்?

நம்மிடம் கோபமாகப் பேசுபவர்களிடம் நாம் பதிலுக்குக் கோபமாகப் பேசுகிறோமா, அன்பாகப் பேசுகிறோமா?

நமக்குக் கீழ் பணிபுரியும் ஒருவர் தவறு செய்தால் அவரை மன்னிக்கிறோமா, அல்லது தண்டிக்கிறோமா?

  நமக்கு எதிராகத் தீமை செய்பவரை மன்னிக்கிறோமா , 

அல்லது, பதிலுக்குத் தீமை செய்கிறோமா?

. நம்மை வலக் கன்னத்தில் அறைபவருக்கு இடது கன்னத்தையும் காட்டுகிறோமா,

அல்லது அவர் கன்னத்தில் திருப்பி அடிக்கிறோமா?

ஒருவர் நமக்கு விருப்பமான ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அதை எடுத்துக்கொள்ள விரும்பினால் 

அதை அவருக்குக் கொடுக்கிறோமா,

 கொடுக்க மறுக்கிறோமா?

  நம்மைப் பகைப்பவர்களைச் சந்திக்க நேரிட்டால் வாழ்த்துக் கூறுகிறோமா ,

கண்டும் காணாதது போல் போய்விடுகிறோமா?

அவரைத் துன்புறுத்தியவர்களுக்காக இயேசு தந்தையிடம் வேண்டினார், 

 நாம் நம்மைத் துன்பப் படுத்துபவர்களுக்காக செபிக்கிறோமா?


நமக்கு உபத்திரவம் கொடுப்பவர்களுக்கு உதவி செய்கிறோமா, பதிலுக்கு உபத்திரவம் கொடுக்கிறோமா?

நம்மிடம் பேசாதவர்களிடமும் நாம் பேசுகிறோமா, அல்லது அமைதியாக இருந்து விடுகிறோமா?

கடன் பெற்றவர்கள் திரும்பித் தர முடியாவிட்டால் கடனை மன்னித்து விடுகிறோமா,

 அல்லது திரும்பத் திரும்படி வழக்குப் போடுகிறோமா?

உலக ரீதியாகச் சிந்திக்காமல் இயேசுவின் பார்வையில் சிந்திப்போம்.

இயேசுவைப் போல் செயல் படுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment