Tuesday, June 4, 2024

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்."

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்."

விண்ணகத் தந்தையை நோக்கித் தினமும் பலமுறை 

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்."

என்று செபிக்கிறோம்.

சோதிப்பவன் சாத்தான்.

அவன் தன் வேலையை மனித குலம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டான்.

அவன் விரித்த வலையில் நமது முதல் தாய் விழுந்து விட்டாள்.

தொடர்ந்து அவன் வேலையைச் செய்து கொண்டு தான் இருக்கிறான்.

அவனது வலையிலிருந்து மனுக் குலத்தை மீட்க வந்த இயேசுவைக் கூட அவன் விடவில்லை.

நம்மையும் சோதிப்பான் என்பதையும்,

அவனை வெல்ல நமக்கு அவர் உதவிகரமாய் இருப்பார் என்பதையும்

 நமக்குத் தெரியப்படுத்தவே தன்னைச் சோதிக்க அவர் அனுமதித்தார்.

ஆகவே சோதனைகள் வரும்போது நாம் கடவுளின் உதவியை நாட வேண்டும் என்பதற்காகத்தான்

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்."

என்று செபிக்கக் கற்றுத் தந்தார்.

இயேசுவின் இரட்சண்ய பாதை வழியே நடந்து சென்றால் நமக்கு ஆறுதலான ஒரு விசயம் நமக்குப் புரியும்.

நமது முதல் பெற்றோரை அவன் பாவத்தில் விழச் செய்த அன்றே மனுக்குலத்தை மீட்க மனிதனாகப் பிறக்கப் போகும்  செய்தியை இறைவன் அறிவித்து விட்டார்.

சாத்தானும் நமக்கு மீட்பு கிடைக்க விடக்கூடாது என்று தீர்மானித்து விட்டான்.

நமக்கு மீட்புத் தர வருபவரைக் கொன்று விட்டால் நமக்கு மீட்பு கிடைக்காது என்பது அவன் எண்ணம்.

அதற்காக இயேசு பிறந்தவுடன் அவரைக் கொன்று விடத் தீர்மானித்தான்.

ஏரோது மன்னன் மனதுக்குள் புகுந்து குழந்தை இயேசுவைக் கொல்ல ஏவினான்.

ஆனால் ஏரோதுவால் மாசில்லாக் குழந்தைகளை விண்ணகத்துக்கு அனுப்ப மட்டும் முடிந்தது.

இயேசுவைக் கொல்ல முடியவில்லை.

இயேசு 30 ஆண்டுகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

பொது வாழ்வுக்கு வந்த போது பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், யூத மத குருக்கள் மூலமாக அவரைக் கொல்லத் தீர்மானித்து அதில் வெற்றியும் கண்டான்.

ஆனால் ஐயோ பாவம், சாத்தான்,

அவர் மரணம் அடைந்துதான் நம்மை மீட்கப் போகிறார் என்ற உண்மை அவனுக்குத் தெரியாமல் போயிற்று!

அவனை அறியாமலேயே நமது மீட்புக்கு அவன் உதவியிருக்கிறான்!

ஆக நம்மைச் சோதிப்பதற்காகவே உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் அவனுக்கு மூளை பற்றாது.

நாம் எப்போதும் இயேசுவுடன் ஒன்றித்து வாழ்ந்தால் அவரிடம் தோற்றது போலவே நம்மிடமும் தோற்றுப் போவான்.

இயேசுவின் துணையுடன் அவரோடு வாழ்பவர்களுக்கு எப்போதும் வெற்றிதான்.

இந்த எண்ணம் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.

நாம் கவனமாக இருந்தால் மூளை இல்லாத சாத்தானால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

நாம் சோதனையில் விழாமல் வாழ வேண்டுமென்றால் மனதில் இயேசுவோடு வாழ வேண்டும்.

இயேசுவோடு வாழ்பவர்கள் பாவச் சோதனைக்கான சந்தர்ப்பங்களைத் தவிர்த்து விடுவார்கள்.

பொழுதுபோக்குக்காக டாஸ்மாக் கடைப் பக்கம் அடிக்கடி போகின்றவனுக்கும்,

குடிகாரனோடு நட்பு வைத்திருபவனுக்கும் 

 மது அருந்த ஆசை வரத்தான் செய்யும்.

இயேசுவையே நினைத்துக் கொண்டிருப்பவன் இரண்டையும் தவிர்த்து விடுவான்.

இயேசுவை மனதில் எண்ணிக் கொண்டிருப்பவன் செபத்திற்காக அன்றி தேவை இல்லாமல் அவர் பெயரை உச்சரிக்க மாட்டான்.

இயேசு திருக் குடும்பத்தில் 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

இயேசுவையே நினைத்துக் கொண்டிருப்பவன் தன்னுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்வான்.

சாந்த குணம் உள்ள இயேசுவை நினைத்துக் கொண்டிருப்பவன் மனதில் கோப உணர்ச்சி தோன்றாது.

இயேசு வாழும் உள்ளத்தில் கற்புக்கு எதிரான எண்ணங்கள் தோன்ற வாய்ப்பே இல்லை.

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்."

என்று பக்தியுடன் செபிப்பவன் உள்ளத்தில் பரிசுத்த தம திரித்துவம் வாழ்வதால் 

சோதனை எண்ணங்கள் தோன்றாது.

சினிமா தியேட்டர் பக்கமே போகாதவனுக்கு அசுசியான படங்களைப் பார்க்க ஆசையே வராது.

நம்முடைய மனதை பக்தியுள்ள எண்ணங்களால் நிறப்பினால் சோதனை எட்டிப் பார்க்க கூட இடம் இருக்காது.

இயேசுவை நினைப்போம்.

இயேசுவோடு வாழ்வோம்.

சோதனையில் விழமாட்டோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment