Sunday, June 16, 2024

நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?"(மத்தேயு.5:47)

" நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?"
(மத்தேயு.5:47)

நடை உடை பாவனைகளில் சிறு பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.

சிந்தனை சொல் செயலில் படித்தவர்களுக்கும், படியாதவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.

ஒரு பள்ளிக்கூட மாணவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவே அவர்களுக்கு சீருடை (Uniform dress) கொடுத்திருக்கிறார்கள்.

இயேசுவைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்களுக்கும்,
உலகைப் பின் பற்றுபவர்களுக்கும் வாழ்க்கை முறைகளில் வித்தியாசம் இருக்க வேண்டும்.

நான் கிறிஸ்தவன் என்று கூறிக்கொண்டு கிறிஸ்துவை அறியாதவர்களைப் போல் வாழலாமா?

இயேசுவின் நற்செய்தியை விசுவசித்து அதன்படி வாழ்பவன் தான் கிறிஸ்தவன்.

"எளிய மனத்தோர் பேறுபற்றோர்" என்பது நற்செய்தி.

எளிய மனத்தோர் என்றால் உலகப் பொருட்கள் மீது பற்றில்லாதவர்கள் என்பது பொருள்.

நாம் பயன்படுத்துவதற்காக இறைவன் உலகைப் படைத்திருக்கிறார்.

பயன்படுத்துவது வேறு, பற்று வைத்திருப்பது வேறு.

பற்று என்றால் ஆசை.

சுகம் இல்லாதவன் சுகம் பெறுவதற்காக மாத்திரைகளைச் சாப்பிடுகிறான், அவற்றின் மீது உள்ள ஆசையினால் அல்ல.

உணவு உண்பவன் உடல் வளர்ச்சி பெறுவதற்காக உண்ண வேண்டும்.

உணவின் மீது உள்ள ஆசையினால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.

உணவின் மீது உள்ள ஆசையினால் அளவுக்கு மீறி உண்பவன் போசனப்பிரியன்.

போசனப்பிரியம் தலையான பாவங்களில் ஒன்று.

உணவு ஒரு உலகப் பொருள்.

அதை கடவுள் தந்த உடலைப் பேணப் பயன்படுத்துவது ஆன்மீகம்.

அதை ஆன்மீக நோக்கம் இல்லாமல் ருசியினால் கிடைக்கும் இன்பத்திற்காக மட்டும் பயன்படுத்துவது லௌகீகம்.

கிறிஸ்தவர்கள் ஆன்மீக வாதிகள்.

கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு லௌகீக வாழ்வு வாழலாமா?

சிந்திப்போம்.

"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."
(மத்தேயு.5:44)

இது நற்செய்தி,

 வாசிப்பதற்காக மட்டுமல்ல,

வாழ்வதற்கும் ஆனது.
 

பகைவர்களை நேசிப்பவன்தான் நற்செய்தியை வாழும் கிறிஸ்தவன்.

நேசத்தை சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்ட வேண்டும்.

நம்மைப் பகைப்பவர்கள் நம்மைத் துன்புறுத்துவார்கள். இது பகைமையின் இயல்பு.

ஆனால் அன்பின் இயல்பு அவர்களை நேசிப்பதும், அவர்களுக்கு உதவி செய்வதும் தான்.

நமது நலனுக்காகக் கடவுளை வேண்டுவதுபோல நம்மைப் பகைப்பவர்களின் நலனுக்காகவும் கடவுளிடம் வேண்ட வேண்டும்.

சிலுவையில் தொங்கும் போது இயேசுவும் அதைத் தான் செய்தார்.

நாமும் அதையே செய்ய வேண்டும்.

''ஆண்டவரே, எங்களைத் துன்புறுத்துபவர்களை  மன்னிப்பதன் மூலம் 

நாங்கள் உமது சீடர்கள் என்பதை உறுதி செய்கிறோம்.

எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல 

நாங்கள் உமக்கு விரோதமாக செய்த பாவங்களை மன்னித்தருளும்."

நாம் பாவிகள்.

கடவுள் பரிசுத்தர்.

பரிசுத்தராகிய கடவுள் பாவிகளாகிய நம்மை நேசிக்கிறார்.

பாவிகளாகிய நாம் சக பாவிகளாகிய நமது பிறரை நேசிப்பது முற்றிலும் முறையானது.

'அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்."
(மத்தேயு.5:9)

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர்."

இது நற்செய்தி.

அனைவரையும், "உங்களுக்கு சமாதானம் உண்டாகுக" என்று முழு மனதுடன் வாழ்த்துவதன் மூலமும்,

அனைவருடனும் சமாதானமாக வாழ்வதன் மூலமும்

இந்த நற்செய்தியை வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment