"இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்."
(மத்தேயு.7:20)
ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அது தரும் கனிகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஒரு ஆள் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய செயல்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நன்றாகப் பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று கூறி விட முடியாது.
அவர்களுடைய சிந்தனையில் என்ன உள்ளது என்று யாருக்கும் தெரியாது.
அவர்களுடைய செயல்களை வைத்து தான் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கண்டு பிடிக்கலாம்.
சொல்லிலும் செயலிலும் மாறுபட்டவர்களைக் காண எங்கேயும் தேடிப் போக வேண்டாம்.
நமது அரசியல் வாதிகளைப் பார்த்தாலே போதும்.
தேர்தல் சமயத்தில் அவர்கள் பேசியதை இப்போது அவர்களுடைய செயல்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை புரியும்.
ஓட்டு வாங்குமுன் கொடுத்த வாக்குறுதிகளை ஓட்டு வாங்கிய பின் மறந்து விடுவார்கள்.
அவர்களுடைய சிந்தனைப்படி செயல்படுகிறார்கள், வாக்குப்படி அல்ல.
அவர்கள் வாக்கு கொடுத்த போது அவர்கள் சிந்தனையில் என்ன இருந்தது என்று நமக்குத் தெரியாது.
அவர்கள் செயல்களைப் பார்த்து தான் சிந்தனையில் என்ன இருந்தது என்பதை கண்டு கொள்கிறோம்.
சிந்தனையும், சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பவர்களை சத்தியவான்கள் என்போம்.
அரசியல் வாதிகளில் நமக்குத் தெரிந்த சத்தியவான் காமராஜர்.
மற்றவர்களும் அவரைப் போல இருக்க இறைவனை வேண்டுவோம்.
" போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்."
என்று ஆண்டவர் கூறுகிறார்.
போலி இறைவாக்கினர் என்றால் யார்?
தாங்கள் போதித்த இறைவாக்கின்படி வாழாத
இறைவாக்கினர்.
இவர்கள் இறைவாக்கை அறிந்து வைத்திருப்பது அதன்படி தாங்கள் வாழவோ அல்லது மற்றவர்கள் வாழ்வதற்காகவோ அல்ல.
அதைப் பணம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்த.
கையில் பைபிளை வைத்துக்கொண்டு இறைவாக்கை மக்களுக்குப் போதிப்பார்கள்.
இறைவனின் பெயரால் மக்கள் கொடுக்கும் காணிக்கை அவர்களுக்கு வருமானம்.
ஆனால் அவர்கள் போதித்த இறைவாக்கின்படி வாழ மாட்டார்கள்.
அவர்களுடைய போதனையையும், வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நமக்கு தெரியும்.
தங்கள் இஷ்டப்படி வாழ்வதற்கு வசதியாக இயேசுவால் நியமிக்கப்பட்ட தலைவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அவர்களுக்கு தலைவர் அவர்கள் தான்.
பைபிள் மட்டும் போதும் என்று சொல்லிக்கொண்டு அதற்கு தங்கள் விருப்பம் போல் விளக்கம் அளிப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களுடைய போதனைக் கூட்டங்களுக்கு கத்தோலிக்கர்களாகிய நாம் செல்லக்கூடாது.
'போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர்.
ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.
அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள்.
முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா?
நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்.
கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.
நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்."
(மத்தேயு.7:15-19)
என்று ஆண்டவர் சொல்கிறார்.
அரைகுறை பைபிளை முழு பைபிள் என்று கூறிக்கொண்டு,
இயேசு நிறுவிய திருச்சபையை விட்டு வெளியேறி,
பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பப்படி பொருள் கூறிக்கொண்டு,
காணிக்கைக்காக மட்டுமே போதித்துக் கொண்டிருக்கும் பிரிவினை சபையார்
விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நமது இல்லங்களுக்கு வருவார்கள்.
"இயேசு தான் நம்மை இரட்சித்தார்.
மாதாவை ஏன் வணங்குகிறீர்கள்?
மாதா படங்களை அப்புறப்படுத்துங்கள்.
நாங்கள் உங்களுக்காக ஜெபிப்போம்.
நீங்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வீர்கள்.
கடன் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள்."
என்று என்னவெல்லாமோ சொல்வார்கள்.
அவர்களிடம் பேச்சுக் கொடுக்காமல் அவர்களை வெளியேற்ற வேண்டும்.
அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடக்கூடாது.
அவர்கள் மனம் திரும்ப இறைவனிடம் நாம் வேண்ட வேண்டும்.
சுகம் அளிக்கும் கூட்டங்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சென்று விடக்கூடாது.
நாமும் இயேசுவின் சீடர்கள்.
நாமும் இயேசுவின் நற்செய்தியை உலகோருக்கு அறிவிக்க வேண்டும்.
நாம் அறிவிக்கும் நற்செய்தியை நாம் வாழ வேண்டும்.
நாம் போலி இறைவாக்கினராக மாறிவிடக்கூடாது.
இயேசுவை அறிவோம்.
இயேசுவை வாழ்வோம்.
இயேசுவை அறிவிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment