Saturday, June 1, 2024

" என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது" "ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார். (மாற்கு11:17)

" என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது" "ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார். (மாற்கு11:17)

இயேசுவும் சீடர்களும் எருசலேமுக்கு வந்தார்கள்.

 கோவிலுக்குள் சென்றபோது அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் இயேசு கண்டு 

அவர்களை வெளியே துரத்தத் தொடங்கினார்; 

நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். 

 கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. 


"என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. 

ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்."

இயேசு எருசலேமில் இருந்த ஆலயத்தைக் குறித்துச் சொன்னது நமது உள்ளமாகிய தூய ஆவியின் ஆலயத்துக்கும் பொருந்தும்.

நமது உடலையும் ஆன்மாவையும் படைத்தவர் கடவுள்.

நாம் திருமுழுக்குப் பெற்றபோது நமது ஆன்மா பரிசுத்தமாக்கப்பட்டு,

தூய ஆவி குடியிருக்கும் இல்லமாக மாறியது.

நாம் வாழும் வீடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும்,

வசதிகள் எதுவும் இல்லாதிருந்தாலும் 

அதைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறோம்.

தினமும் பெருக்குகிறோம்.

ஒரு சிறு கிழிந்த பேப்பர் கீழே அதை உடனே அப்புறப்படுத்தி விடுகிறோம்.

பொருட்களை அதது இருக்க வேண்டிய இடத்தில் வைக்கிறோம்.

மனிதர்களாகிய நாம் வாழும் வீட்டை இப்படிக் கவனித்துக் கொள்கிறோமே,

நம்மைப் படைத்த தூய ஆவியானவர் குடியிருக்கும் நமது உள்ளமாகிய வீட்டை எப்படிக் கவனித்துக் கொள்கிறோம்?

தூய ஆவியானவருக்குப் பிடிக்காத பாவ மாசு இல்லாமல் அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்கிறோமா?

பாவம் செய்ய நேர்ந்தால் உடனுக்குடன் இறைவனிடமிருந்து மன்னிப்புப் பெற்றுக் கொள்கிறோமா?

பாவமன்னிப்புப் பெற்று ஆன்மாவைச் சுத்தமாக்க உத்தம மனஸ்தாபம் என்னும் விளக்குமாற்றை உள்ளமாகிய வீட்டில் வைத்திருக்கிறோமா?

பாவமாகிய நோய் ஏற்பட நேரும்போது ஆன்மீக மருத்துவராகிய நமது ஆன்மீகக் குருவைத் தேடிச் செல்கிறோமா?

அவர் தரும் மரும் மருந்துகளாகிய செபம், தவம், ஒறுத்தல் முயற்சிகள் போன்றவற்றை ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறோமா?

உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்கள் தான் சொற்களாகவும், செயல்களாகவும் மாறுகின்றன.

எண்ணம், சொல், செயல் ஆகியவைதான் நாம் நல்லவர்களாக, கெட்டவர்களா என்பதைத் தீர்மானிக்கின்றன.

நமது எண்ணங்கள் பரிசுத்தமாக இருந்தால் வாழ்க்கையும் பரிசுத்தமாக இருக்கும்.

எண்ணங்கள் கெட்டவையாய் இருந்தால் வாழ்க்கையும் கெட்டதாக இருக்கும்.

தவமுயற்சிகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் நிறைய தவ முயற்சிகளைச் செய்வோம்.

நற்கருணை நாதரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் தினமும் திருப்பலிக்குச் செல்வோம்.

நாம் எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டுமென்று ஆசிக்கிறோமோ அத்தகைய எண்ணங்களுக்கே இடம் கொடுக்க வேண்டும்.

தேவையற்ற எண்ணங்கள் மனதில் உதித்தால்,

ஆண்டவர் கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டியது போல

அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

நான் சிறுவனாக இருந்த போது உவரி அந்தோனியார் கோவிலுக்குப் போக பெற்றோர் திட்டமிட்டால் என் மனதில் உடனே தோன்றுவது மீன் கறிச் சாப்பாடு.

திருத் தலங்களுக்குப் போக திட்டமிடும் போது நமது மனதில் தோன்ற வேண்டிய எண்ணங்கள் 
பாவ சங்கீர்த்தனம், 
திருப்பலி, 
திவ்ய நற்கருணை, ஏழைகளுக்கு உதவுதல் போன்றவை பற்றியதாக இருக்க வேண்டும்.

இரவில் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் தூங்கப் போக வேண்டும்.

இரவில் விழிக்க நேரும் போதெல்லாம் இயேசுவை நினைக்க வேண்டும்.

காலையில் எழும்போது தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் எழ வேண்டும்.

இறைப் பிரசன்னத்தில் தூங்கி,
இறைப் பிரசன்னத்தில் விழித்தால்

பகல் முழுவதும் இறைப் பிரசன்னத்தில் தான் நடப்போம்.

குழந்தையைப் பாருங்கள்.

இரவில் தாயுடன் தூங்கி, காலையில் தாயுடன் விழிக்கும் குழந்தை பகல் முழுவதும் தாயைத்தான் தேடும்.

இறைவனோடு நமது உறவின் விசயத்தில் குழந்தையின் இயல்பு நமது இயல்பாக மாற வேண்டும்.

"இயேசு பின்வருமாறு கூறினார்;" நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 18:3)

நமது உள்ளம் எப்போதும் இறைவனோடு இருந்து நமது சிந்தனைகள் யாவும் அவரை ஒட்டியதாகவே இருக்கும்.

சிந்தனைகள் இறைவனை ஒட்டியனவாக இருந்தால் நமது சொல்லும் செயலும் அவரை ஒட்டியதாகவே இருக்கும்.

"ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 

என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. "
(லூக்கா நற்செய்தி 1:47)

அன்னை மரியாள் எப்போதும் கடவுளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள்.

தூய ஆவி நமது உள்ளம் முழுவதையும் நினைத்துக் கொண்டிருக்கும்போது

அங்கே வேறு எண்ணங்களுக்கு இடமில்லை.

நம் உள்ளம் இறைவனுக்கு உரிய‌ வீடு.

அதை நாம் தேவையிலாலாத‌‌ எண்ணங்களால் கள்வர் குகையாக்கிவிடக்கூடாது. 

இறைவனுக்குரிய எண்ணங்களால் அதை அழகு படுத்த வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment