Saturday, June 8, 2024

"பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்."(லூக்கா நற்செய்தி 2:51)

"பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்."
(லூக்கா நற்செய்தி 2:51)


இயேசு தன் பெற்றோருக்குப்
பணிந்து நடந்தார்.

இயேசு தன் பெற்றோருக்குப்
பணிந்து நடந்ததில் நாம் ஆச்சரியப் படுவதற்கு என்ன இருக்கிறது?

இயேசு இறைமகன்.

சர்வ வல்லப கடவுள்.

கடவுள் யாருக்கும் பணிந்து நடக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் சர்வ வல்லமை வாய்ந்த கடவுள் அன்பு மயமானவர்.

அன்பு சர்வத்தையும் சாதிக்கும்.

அன்பு தான் துவக்கமும் முடிவும் இல்லாத கடவுளைத் துவக்கமும் முடிவும் உள்ள மனிதனைப் படைக்கச் செய்தது.

அன்பு தான் அவரை பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாகப் பிறக்கப் செய்தது.

அன்பு தான் அவரைத் தன்னால் படைக்கப்பட்ட மனிதப் பிறவிகளுக்குப் பணிந்து வாழச் செய்தது.

ஏன் சர்வ வல்லபக் கடவுள் தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களாகிய சூசையப்பருக்கும், மரியாளுக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்?

இயேசு மனிதனாகப் பிறந்தது மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய.

மனிதன் செய்த ஒவ்வொரு பாவத்துக்கும் அதற்கு ஏற்றப் பரிகாரம் செய்தார்.

மனிதனுடைய பாவங்களுக்குப் காரணம் என்ன?

கீழ்ப்படியாமை.

இறைவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமை.

கீழ்ப்படியாமைக்கு கீழ்ப்படிதல் மூலம் பரிகாரம் செய்தார்.

மனிதனைப் மீட்க வந்த கடவுள் உலகில் 33 ஆண்டுகள் வாழ்ந்தார்.

அவற்றுள் 30 ஆண்டுகள் தனது மனித பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

செருசலேம் ஆலயத்தில் வைத்து தனது தாயிடம்

" நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டார். 

அவர் உலகுக்கு வந்தது தந்தையின் அலுவல்களில் ஈடுபடுவதற்காகத்தான்.

அவர் 30 ஆண்டுகள் தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்ததும் தனது தந்தையின் சித்தப்படிதான்.

தனது பாடுகளின் போது கூட தன்னைக் கொல்லத் திட்டமிட்டவர்களுக்குக் கட்டுப் பட்டு தானே நடந்தார்.

தன்னைக் கைது செய்ய அனுமதித்தார்.

தலைமைக் குருக்களிடம் வா என்றார்கள். சென்றார்.

பிலாத்துவிடம் வா என்றார்கள். சென்றார்.

அங்கிருந்து ஏரோதுவிடம் வா என்றார்கள். சென்றார்.

திரும்பவும் பிலாத்துவிடம் வா என்றார்கள். சென்றார்.

கல்தூண் பக்கம் போகச் சொன்னார்கள். போனார்.

அதில் கட்டி வைத்து அடித்தார்கள்.

மறுப்பு சொல்லாமல் அடிபட்டார்.

தலையில் முள் முடியை வைத்தார்கள். தடுக்கவில்லை.

அதன் மேல் அடித்தார்கள். தடுக்கவில்லை.

அவர்மேல் துப்பினார்கள். தடுக்கவில்லை.

பிலாத்து மரணத் தீர்ப்பிட்டான்.
ஏற்றுக் கொண்டார்.

சிலுவையை அவர் மேல் ஏற்றினார்கள். ஏற்றுக் கொண்டார்.

சிலுவையின்மேல் அவரை ஏற்றினார்கள். ஏற்றுக் கொண்டார்.

கடைசி வரை அவர் எதையும் தடுக்கவில்லை.

இதெல்லாம் எதற்காக?

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு கீழ்ப்படிந்தார்.

 நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நாம் கீழ்ப்படிகிறோமா?

இயேசுவின் திருச்சபைக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோமா?

இயேசுவின் பிரதிநிதியான பங்குக் குருவானவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோமா?

கீழ்ப்படிவது போல் நடிக்கிறோமா?

சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் திருச்சபைக்குக் கீழ்ப்படிந்து நடந்தால்தான்

இயேசு கீழ்ப்படிதல் மூலம் ஈட்டிய மீட்பு நமக்குக் கிடைக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment