Wednesday, June 26, 2024

"அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்."(மத்தேயு.8:2)

"அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்."
(மத்தேயு.8:2)


தொழுநோயாளியின் செபத்திலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 இயேசுவினால் அவனது வியாதியைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் அவரைத் தேடி வந்திருக்கிறான்.

ஆனால் "என்னைக் குணமாக்கும்" என்று அவன் வேண்டவில்லை.

"நீர் விரும்பினால் 

எனது நோயை நீக்க உம்மால் முடியும்."
என்றுதான் செபித்தான்.


இயேசுவின் வல்லமையில் அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. ("உம்மால் முடியும்.")

ஆனால் அவருடைய வல்லமையைப் பயன்படுத்துவதும், பயன்படுத்தாதிருப்பதும் அவர் விருப்பம்.

யாராலும் கட்டாயப் படுத்தப் பட்டு அவர் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை.

நம்மைப் படைக்க வேண்டும் என்று நாம் அவரிடம் கேட்கவில்லை.

அவர் விரும்பினார், பிரபஞ்சத்தைப் படைத்தார்

அவர் விரும்பினார்,
நம்மைப் படைத்தார்.

ஒன்றுமில்லாமையிலிருந்து படைக்கப் பட்ட நமக்கு சுயமாக ஒன்றுமில்லை.

நம்மிடம் இருப்பதெல்லாம் அவர் விரும்பித் தந்தது, நாம் விரும்பிக் கேட்டது அல்ல.

என்னை இந்தியாவில் படையுங்கள் என்று நான் அவரைக் கேட்கவில்லை.

எனது பெற்றோரை நான் தேர்ந்தெடுக்கவில்லை.

நான் பிறக்க வேண்டிய காலத்தையும், நேரத்தையும் நான் தேர்ந்தெடுக்கவில்லை.

நான் இறக்க வேண்டிய நாளையும்  தேர்வு செய்ய என்னால் முடியாது.

பாவம் தவிர மற்ற எல்லாம் அவர் விருப்பப்படி தான் நடந்தது, நடக்கிறது, நடக்கும்.

நாம் எதையாவது விரும்பினால், அதை அவரும் விரும்பினால் அது நடக்கும்.

நாம் மன மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்றால் அவர் விரும்புவதை நாமும் விரும்ப வேண்டும்.

ஆனால் அவர் என்ன விரும்புகிறார் என்று நமக்குத் தெரியாது.

ஆகவே நாமே முழு மனதுடன் நம்மை அவரது விருப்பத்துக்கு விட்டு விட வேண்டும்.

அப்போ நாம் எதையும் விரும்பக் கூடாதா?

விரும்பலாம்.

"ஆண்டவரே, நான் தேர்வு எழுதியிருக்கிறேன்.

முதல் தரமான மதிப்பெண் பெற்று வெற்றி பெற விரும்புகிறேன்.

ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உமது விருப்பப்படியே நடக்கட்டும்."

நம்மை அவரது விருப்பத்துக்கு உட்படுத்தி விட்டால்

தேர்வு முடிவு எப்படி வந்தாலும் கவலைப் பட மாட்டோம்.

மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்.

"ஆண்டவரே, வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனாலும் உமது விருப்பப்படியே நடக்கட்டும்."

இந்த மனநிலையோடு செபித்தால் வேலை கிடைத்தாலும் நன்றி கூறுவோம்,

கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்.

"கேளுங்கள் தரப்படும்" என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

ஆகவே நாம் விரும்புவதைக் கேட்போம்.

நமக்கு எதிர் காலம் தெரியாது.

நாம் இப்போது விரும்புவது எதிர்காலத்தில் நன்மை பயக்குமா பயக்காதா என்று நமக்குத் தெரியாது.

ஆனால் கடவுளுக்குத் தெரியும்.

" ஆண்டவரே, நான் விரும்புவது உமது விருப்பத்துக்கு உட்பட்டிருந்தால் நான் கேட்டதைத் தாரும்.

இல்லாவிட்டால் நீர் விரும்புவதைத் தாரும்."

என்று செபித்தால் என்ன கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைவோம்.

எதுவுமே கிடைக்காவிட்டாலும் நமது மகிழ்ச்சி குறையாமல் இருக்கும்.

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்."

ஒரு நோய் வருகிறது.
மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறோம்.

சுகம் கிடைத்தாலும் இறைவனுக்கு நன்றி.

மரணம் வந்தாலும் இறைவனுக்கு நன்றி.


 தொழுநோயாளர் இயேசு பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார். 


இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு,

 "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று சொன்னார். 

உடனே அவரது தொழுநோய் நீங்கியது. 


நாமும் இறைவனை வேண்டும்போது,  

" தந்தையே, நான் கேட்பது உமக்கு விருப்பமானால் அதைத் தாரும்.

அது உமக்கு விருப்பம் இல்லாவிட்டால்

உமக்கு விருப்பமானதைத் தாரும்.

எதைத் தந்தாலும் உமக்கு நன்றி."

நமது விருப்பத்தை இறைவனுடைய விருப்பத்துக்கு விட்டு விடுவோம்.

"இறைவா, உமது விருப்பம் எதுவாக இருந்தாலும் அது என்னில் நிறைவேறட்டும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment