Sunday, June 2, 2024

இயேசுவின் உடலும், இரத்தமும்.

இயேசுவின் உடலும், இரத்தமும்.


கடவுள் நமது உடலையும், அதற்குள் ஓடும் இரத்தத்தையும் படைத்தது நாம் இவ்வுலகில் வாழ்வதற்காக.

ஆன்மாவைப் படைத்தது மறுவுலக வாழ்வுக்காக.

இறைமகன் மனுமகன் ஆன போது மரியாளின் வயிற்றில் உடலோடும், இரத்தத்தோடும் உற்பவித்தார்.

நாம் இவ்வுலகில் வாழ்வதற்காக நமக்கு உடலையும் இரத்தத்தையும் தந்த கடவுள்

தான் இரத்தத்தைச் சிந்தி பாடுகள் பட்டு மரிப்பதற்காக உடலோடும் இரத்தத்தோடும் பிறந்தார்.

இரத்தம் சிந்தி, பாடுகள் பட்டு மரிப்பதற்காகவே பிறந்தார்.

சிந்துவதற்காகவே இரத்தம், மரிப்பதற்காகவே உடல்.

எதற்காக?

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக.

அவரது பாடுகள் கெத்சமனி தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்ததோடு ஆரம்பித்தன.

பாவம் என்றால் என்ன?

இறைவனின் சித்தத்தை மீறுவதே பாவம்.

நமது உடல் உறுப்புக்களின் உதவியோடு பாவம் செய்கிறோம்.

இறைவனின் சித்தத்தை மீறுவது ஆன்மா.

பாவம் செய்ய உதவுவது உடல் உறுப்புக்கள்.

அவரது பாடுகளின் போது

 நமது உடல் உறுப்புக்களுடன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக 

அவரது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை உறுப்புக்களும் அடி வாங்கின.

முழு உடலும் சிலுவையைச் சுமந்தது, சிலுவையில் அறையப்பட்டது.

நமது உள்ளத்தில் இறைவன் விருப்பத்தை மீறியதற்காக அவர் பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்தார்.

சர்வ வல்லவரான இறைமகன் 

மனிதனாகப் பிறந்த போது

பாவம் தவிர மற்ற அனைத்து மனித பலகீனங்களையும் ஏற்றுக் கொண்டார்.

பயம் அவர் ஏற்றுக் கொண்ட ஒரு பலகீனம்.

பாடுகளின் போது அவர் பட்ட அத்தனை வேதனை நிறைந்த பாடுகளும் அவர் மனமார ஏற்றுக் கொண்டவை.

ஆனால் வியாழக்கிழமை இரவு அவர் பாடுகள் பட ஆரம்பித்த போது அவர் மனதில் அளவு கடந்த பயம் குடி கொண்டது.

தான் படப்போகிற பாடுகளின் வேதனைகளை எண்ணி பயப்பட ஆரம்பித்தார்.

எந்த அளவுக்கு பயம் ஏற்பட்டது என்றால்,

பாடுகள் படுவதற்காகவே மனிதனாகப் பிறந்த அவர்,

கெத்சமனி தோட்டத்தில் செபம் சொல்ல ஆரம்பித்தபோது,

 "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்," என்று செபித்தார்.

நாம் இறைவனின் சித்தத்துக்கு எதிராக நடப்பதற்குப் பரிகாரமாக இந்த பயமும் செபமும்.

அளவு கடந்த பயத்தின் காரணமாக அவருடைய உடல் இரத்த வியர்வை வியர்க்க ஆரம்பித்தது.

ஆக, நாம் இறைவனின் சித்தத்தை மீறுவதற்குப் பரிகாரமாக தனது இரத்தத்தைச் சிந்தினார்.

தொடர்ந்து 

 "ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறி செபித்தார். 
(லூக்கா.22:42)

நாம் இறைவனின் சித்தத்தை மீறும் பாவத்தை விட்டுவிட்டு இறைவனின் சித்தப்படி நடக்க வேண்டும் என்பதற்காக இந்த செபம்.

இரத்தம் சிந்துவது பாடுகள் முழுவதும் தொடர்ந்தது.

அவர் கற்றூணில் கட்டப்பட்டு அடிபட்டபோது,

முள்முடி சூட்டப்பட்டு அடிபட்டபோது,

சிலுவையைச் சுமந்தபோது, 

சிலுவையில் அறையப்பட்டபோது

அவரது இரத்தம் சிந்துவது தொடர்ந்தது.

சிலுவையில் தொங்கியபோது இரத்தம் முழுவதும் சிந்தப் பட்டு விட்டது.

கொஞ்சம் இருந்த மீதி இரத்தமும்

செந்தூரியன் ஈட்டியால் விலாவைக் குத்திய போது வெளிவந்து விட்டது.

ஆக நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு தனது இரத்தம் முழுவதையும் சிந்தி விட்டார்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment