இருதயம் நமது உடலின் மிக முக்கியமான உள்ளுருப்பு.
ஏன் மிக முக்கியமான?
இருதயம் இயங்கினால் தான் நமது உடல் இயங்கும், அதாவது, உயிரோடு இருக்கும்.
இருதயம் நின்று விட்டால் நமது இவ்வுலக வாழ்வு முடிந்து விடும்.
இருதயம் இயங்க மறுக்கும் நேரம் தான் நமது மரண நேரம்.
இருதயம் தனது இயக்கத்தினால் நமது இரத்தம் நமது உடலெங்கும் சுற்றி வருகிறது.
உடல் உறுப்பாகிய இருதயத்துக்கு ஒரு ஆன்மீக முக்கியத்துவம் இருக்கிறது.
உடல் உயிர் வாழ்வதற்கு மையமானது இருதயம்.
ஆன்மீக வாழ்வுக்கு மையமானது அன்பு.
நமது வாழ்வுக்கு,
அதாவது, நமது உடலும் ஆன்மாவும் சேர்ந்த வாழ்வுக்கு,
மையம் அன்பு தான்.
உடல் வாழ்வுக்கு மையமான இருதயத்தை அன்பின் இருப்பிடமாகப் பாவிக்கிறோம்.
டில்லி என்றவுடன் இந்தியா ஞாபகத்துக்கு வருவது போல,
சென்னை என்றவுடன் தமிழ்நாடு ஞாபகத்துக்கு வருவது போல,
இருதயம் என்றவுடன் அன்பு ஞாபகத்துக்கு வருகிறது.
அன்பின் இருப்பிடம் இருதயம்.
எதையாவது நினைத்துப் பார்க்கும்போது நமது மூளையில் உணர்ச்சி ஏற்படும்.
யாரையாவது அன்பு செய்யும் போது நமது இருதயத்தில் உணர்ச்சி ஏற்படும்.
இருதயம் என்றால் அன்பு.
அன்பு என்றால் இருதயம்.
கடவுள் அன்பு மயமானவர்.
இயேசு கடவுள்.
ஆகவே இயேசு அன்பு மயமானவர்.
இயேசு என்றவுடன் நினைவுக்கு வரவேண்டியது அன்பு.
இயேசுவின் அன்பு= இயேசுவின் இருதயம்.
இயேசுவின் இருதயம் = இயேசுவின் அன்பு.
இயேசு நம் மீது கொண்டிருக்கும் அன்பின் மிகுதியால்
அவரது பாடுகளின் போது சிந்திய இரத்தம் அவருடைய இருதயத்திலிருந்து வந்தது தான்.
மிகக் கொஞ்சமாக மீதியிருந்த இரத்தத்தையும் ரோமைப் படைத்தளபதி செந்தூரியன் ஒரு ஈட்டியால் குத்தி வெளியேற்றி விட்டான்.
நமது கடவுள் மீது அன்பின்மை என்னும் பாவத்துக்குப் பரிகாரமாக இயேசுவின் இருதயம் ஈட்டியால் குத்தப்பட்டது.
இயேசு நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பை நமக்குள் ஏற்றுவதற்காகத்தான்
தாய்த் திருச்சபை நமக்கு இயேசுவின் திரு இருதய பக்தி இருக்க வேண்டுமென்று போதிக்கிறது.
இயேசுவின் அன்பும், நமது அன்பும் ஒன்றிணைய வேண்டும்.
இயேசுவின் அளவு கடந்த அன்பு நமது இருதயத்தை நிறப்பி பொங்கி வடிய வேண்டும்.
" என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது."
(திருப்பாடல்கள்.23:5)
கடவுள் தரும் விருந்து அவரின் அன்பு தான்.
நமது இருதயமாகிய பாத்திரம் நிரம்பி வழியும் அளவுக்கு அவரது அன்பை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
நமது மீட்பர் இயேசு.
அவர் நம்மை மீட்கக் காரணமாய் இருப்பது அவருடைய அன்பு.
அன்பில்லையேல் மீட்பு இல்லை.
இயேசுவின் அன்பின் மீது உள்ள பக்தி தான் இயேசுவின் திரு இருதய பக்தி.
நமது திரு இருதய பக்தியின் அடையாளமாகத்தான் நமது
பங்குக் குரு மூலமாக நமது வீட்டில் திரு இருதயப் படத்தை ஸ்தாபித்திருக்கிறோம்.
அதாவது இயேசுவை நமது வீட்டின் அரசராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் இயேசுவின் திரு இருதய படத்தின் முன் குடும்பத்தோடு முழந்தாள் படியிட்டு செபம் சொல்ல வேண்டும்.
இயேசு நமது இல்லத்தை தனது அன்பினால் ஆள்பவர்.
இவ்வுலக அரசர்கள் தங்கள் அதிகாரத்தைக் கொண்டு நாட்டை ஆள்வதோடு
முப்படைகளின் உதவியுடன் அதை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறார்கள்.
இயேசு அரசரின் அதிகாரம் அவருடைய அன்பு.
நமது ஆன்மாவின் எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாப்பதும் அவருடைய அன்பு தான்.
நமது அரசருக்கும் நமக்கும் இடையே உள்ள உறவும் அன்பு தான்.
நமது ஆன்மா உயிர் வாழ அவசியமான உணவும் இயேசுவின் அன்பு தான்.
தனது அன்புடன் தான் இயேசு தன்னையே நமக்கு உணவாகத் தருகின்றார்.
நமது ஆன்மா அன்பில் வளரும் போது நலம் பெறுகிறது.
பாவத்தினால் அன்பை இழக்கும் போது மரணம் அடைகிறது.
பாவ மன்னிப்பு பெறும் போது உயிர் பெறுகிறது.
சர்வமும் அன்பு மயம்.
இயேசுவின் திரு இருதயத்தின் மீது பக்தி உள்ளவர்கள்
தங்கள் குடும்பத்தை முழுமையாக திரு இருதயத்துக்கு ஒப்புக் கொடுத்து விடுவார்கள்.
முழுமையான அன்புடன் இயேசுவுக்காக மட்டும் வாழ்வார்கள்.
முழுமையான அன்புடன் வாழ்ந்தால்
குடும்ப உறுப்பினர்களிடையே அன்புக்கு எதிரான எந்த உணர்வும் இருக்காது.
அன்பின் குழந்தைகளான இரக்கம், கனிவு, பொறுமை, மன்னிக்கும் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை போன்ற பண்புகளால் நிறப்பப்பட்டிருப்பார்கள்.
இவற்றுக்கு எதிர்ப் பண்புகள் எதுவும் அவர்களிடம் இருக்காது.
எல்லோரும் அன்பினால் இயக்கப் படுவதால் குடும்பத்திலும், பக்கத்து வீட்டாருடனும் சண்டை, சச்சரவு, கோள், புறணி போன்ற
அன்புக்கு எதிரான எதுவும் இருக்காது.
இயேசுவோடு இணைந்த இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.
முன்மாதிரியாக வாழ்வது என்றால் வாழ்க்கை மூலம் நற்செய்தியை அறிவித்தல் என்று பொருள்.
இவர்களைச் சுற்றி வாழ்வோரிடமும் திரு இருதய பக்தி பரவும்.
விண்ணகப் பேரின்ப வாழ்வின் போது இவர்களின் முன்மாதிரிகையால் மனம் திரும்பிய ஒரு சமூகமே இவர்களுடன் வாழும்.
நாம் அனைவரும் இயேசுவின் திரு இருதயத்துக்கு நமது கூடும்பங்களை ஒப்புக் கொடுத்து வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment