Wednesday, June 5, 2024

என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?(மத்தேயு . 27:46)

என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
(மத்தேயு . 27:46)

இயேசு மனிதர் செய்த எல்லா பாவங்களுக்கும் தனது பாடுகள் மூலம் பரிகாரம் செய்தார்.

மீட்புப் பெற வேண்டுமானால் முதலில் நம்மிடம் தேவ சம்பந்தமான மூன்று புண்ணியங்களும் இருக்க வேண்டும்.

விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம்.

விசுவாசத்தின் மூலம் இறைவனை ஏற்றுக் கொள்கிறோம்.

நம்பிக்கையின் மூலம் அவர் நமது பாவங்களை மன்னித்து நம்மை மீட்பார் என்று நம்புகிறோம்.

தேவசிநேகத்தின் மூலம் இறைவனை நேசிக்கிறோம்.

புண்ணியத்துக்கு எதிர்ப்பதம் பாவம்.

நம்பிக்கைக்கு எதிரான பாவம் அவநம்பிக்கை.

எந்த சூழ்நிலையிலும் கடவுள் நம்மைக் கைவிட மாட்டார் என்று நம்ப வேண்டும்.

கைவிட்டு விட்டார் என்று எண்ணுவது அவநம்பிக்கை.

இயேசு கடவுள்.

அவர் மனிதனாகப் பிறக்க வேண்டும், நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிக்க வேண்டும் என்று மனிதர்கள் யாரும் அவரைக் கட்டாயப் படுத்தவில்லை.

சிலுவை நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பினால் அவரே நித்திய காலமாக எடுத்த முடிவு.

பின் ஏன் அவர் பாடுகள் பட்டு முடிக்கப் போகும் நேரத்தில் 

"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" 

என்று திருப்பாடல்கள்.(22:1) திருப்பாடல் வரிகளைச் செபித்தார்?

இரண்டு நோக்கங்களுக்காக,

1. நாம் கட்டிக் கொள்ளும் அவநம்பிக்கை என்னும் பாவத்துக்குப் பரிகாரமாக.

2. நம்பிக்கை ஊட்டுவதற்காக.

1. கடவுள் மீது நம்பிக்கை கொண்ட சில மனிதர்கள் கூட தாங்கள் மிக அதிகமான, தாங்க முடியாத துன்பங்களைச் சந்திக்க நேரும் போது கடவுள் மீதுள்ள நம்பிக்கையை இழப்பதுண்டு.

அது மனித பலகீனத்தின் காரணமாக ஏற்படுவது.

இயேசு பாடுகள் படுவதற்காகவே பாவம் தவிர மற்ற எல்லா மனித பலகீனங்களையும் ஏற்றுக் கொண்டார்.

அதன் காரணமாக தனது பாடுகளின் அளவு கடந்த வேதனையைத் தாங்க முடியாமல்

திருப்பாடல்களின் இவ்வரிகளைக் கூறி

அவநம்பிக்கை என்னும் நமது பாவத்துக்குப் பரிகாரம் செய்கிறார்.

(இறைவன் திருச் சித்தத்தை ஏற்க விரும்பாத நமது பாவத்துக்குப் பரிகாரமாக

பூங்கா வனத்தில் இரத்த வியர்வை வியர்த்து

"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்," என்று செபித்தது போலவும்,

தலையிலுள்ள உறுப்புகளால் நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக தலையில் முள்முடி சூட்டப்பட்டு அடிபட்டது போலவும் 

அவநம்பிக்கை என்னும் பாவத்துக்குப் பரிகாரம் இந்த செபம்.)

அவர் கடவுள். அவரே அவரைக் கைவிட முடியாது.

அவநம்பிக்கை என்னும் நமது பாவத்துக்குப் பரிகாரமாகவே திருப்பாடல் வரிகளைக் கூறி செபித்தார்.

இதன் மூலம் அவரது பாடுகளின் அளவு கடந்த வேதனையை நாம் புரிந்து கொள்ளலாம்.

நமக்காக அளவு கடந்த வேதனையை அனுபவித்த அவருக்கு எதிராக பாவம் செய்ய மனது வரலாமா?

2. எவ்வாறு நம்பிக்கை ஊட்டுகிறார்?

இயேசு தான் எப்படிப்பட்ட பாடுகளைப் பட வேண்டும் என்று அவர்தான் தேர்வு செய்தார்.

அவர் விரும்பியிருந்தால் பாடுகள் படாமலேயே நமது பாவங்களை மன்னித்திருக்கலாம்.

ஆனால் நம் மேல் அவர் கொண்டுள்ள அன்பின் அளவில்லாத தன்மையை நமக்கு அறிவிக்கவே வேதனையோடு கூடிய பாடுகள் பட தீர்மானித்தார்.

அவர் பட்ட பாடுகளும், அவர் மரித்த சிலுவையும் 

அவர் நம்மீது கொண்டுள்ள அன்பின் அடையாளம்.

இயேசு நமக்காக சுமந்த சிலுவை மட்டுமல்ல 

நாம் அவருக்காக சுமக்கும் சிலுவையும் அன்பின் அடையாளம்தான்.

அவர் சுமந்த சிலுவை அவர் நம்மீது கொண்டுள்ள அன்பின் அடையாளம்.

நாம் சுமக்கும் சிலுவை நாம் அவர்மீது கொண்டுள்ள அன்பின் அடையாளம்.

அதனால் தான் அவரைப் பின் பற்ற விரும்புகிறவர்கள் அவர்களின் சிலுவையைச் சுமந்து கொண்டு பின் பற்ற வேண்டும் என்கிறார்.

நமக்கு ஏற்படும் துன்பங்கள் நமது பாவத்தின் விளைவு.

ஆனால் அவற்றை நமது பாவங்களுக்கும், உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தால் அவை சிலுவைகளாக மாறிவிடுகின்றன.

அவற்றை எதற்காகவும் ஒப்புக் கொடுக்கா விட்டால் அவை வெறும் துன்பங்கள் தான்.

நாம் நமது சிலுவையைச் சுமக்க வேண்டும் என்று இயேசு கூறுவதால்

நமக்கு துன்பங்கள் வர அனுமதிப்பவர் அவர்தான்.

ஆகவே துன்பங்கள் வரும் போது நாம் அவற்றை பாவத்தின் விளைவாக அல்ல 

கடவுள் நமக்குத் தரும் பரிசாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் அத்துன்பங்களைச் சிலுவைகளாகச் சுமந்தால் 

அதற்குப் பரிசாக விண்ணகத்தில் நமக்குப் பேரின்ப வாழ்வு கிடைக்கும்.

இயேசு பாரமான சிலுவையைச் சுமந்தார்.

அது அவர் சுமக்க முடியாத அளவுக்குப் பாரமாக இருந்தது.

அதனால் சீரோனாகிய சீமோன் சிலுவையைச் சுமக்க அவருக்கு உதவி செய்தார்.

அது மட்டுமல்ல பாரம் தாங்க முடியாமல் மூன்று முறை கீழே விழுந்தார்.

ஆனால் அவர் நமக்கு அவர் அனுமதிக்கும் சிலுவை நாம் சுமக்கக் கூடியதாகவே இருக்கும்.

சிலுவை மிகப் பாரமாக இருந்தால் அதைச் சுமக்கப் போதுமான சக்தியை அவர் நமக்குத் தருவார்.

ஆகவே நமக்குச் சிலுவைகள் வரும் போது அவற்றிலிருந்து விடுதலை கேட்காமல்

 அவற்றைச் சுமக்கப் போதுமான சக்தியைக் கேட்க வேண்டும்.

இயேசு அவரது செபத்தில் நமக்கு எப்படி நம்பிக்கை ஊட்டுகிறார்?

"ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற செபத்தில்

"தந்தையே நான் சுமந்த சிலுவை  

"ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று நான் செபிக்குமளவுக்கு பாரமாக இருந்தது.

என்னைப் பின்பற்றி சிலுவையைச் சுமக்கவிருக்கும் எனது சீடர்களைக் கைவிடாதீர்." என்ற செபமும் அடங்கியிருக்கிறது.

இயேசுவுக்கு நமது பலகீனம் தெரியும்.

ஒரு தாய் தனது குழந்தையிடம் ஒரு சுமையைக் கொடுக்கும் போது குழந்தையால் சுமக்க முடியாத சுமையை கொடுக்க மாட்டார்.

தாயினும் மேலான அன்பு கொண்ட நமது இயேசு நாம் சுமக்க முடியாத சுமையை நம் மீது சுமத்து வாரா?

தனது உடலையும் இரத்தத்தையுமே நமது ஆன்மீக உணவாக நமக்குத் தந்து நம்மைப் பேணி வருபவர் நம் இயேசு. 

நமது சிலுவையை சுமந்து கொண்டு இயேசுவைப் பின்பற்றுவதுதான் நமது ஆன்மீக வாழ்க்கை.

நமது ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவையான சக்தியை நமக்குத் தர தன்னையே நமக்கு உணவாகத் தருகின்றார்.

ஆகவே நாம் சுமக்க வேண்டிய சிலுவையைக் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை.

தினமும் திவ்ய நற்கருணையை உட்கொண்டால் அன்றைய சிலுவையை அவரும் நம்மோடு சேர்ந்தே சுமப்பார்.

ஆகவே எப்படிப் பட்ட சிலுவை வந்தாலும் நமது சக்தியினால் மட்டுமல்ல சர்வ வல்லவரான இயேசுவோடு சேர்ந்தே சுமப்போம்.

"என் நுகம் இனிது" என்று அவரே கூறியிருக்கிறார்.

இயேசு நம்முடன் இருக்கும் போது சிலுவையைச் சுமப்பது எவ்வளவோ இனிமையானது.

தாய் கூட இருக்கும் போது குழந்தை சிங்கத்தைப் பார்த்து கூட பயப்படாது

"அது மேல உடகாரட்டுமா, அம்மா?" என்று கேட்கும்.

சிலுவை இயேசுவின் சிம்மாசனம்.

சிம்மாசனத்தைப் பார்த்து யாராவது பயப்படுவார்களா?

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment