Thursday, June 20, 2024

"ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் ‌கொடுக்கப்படும்."(மத்தேயு.6:33)

''ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத்தேயு.6:33)

ஒரு பெற்றோருக்கு ஒரு மகன்.

படித்து, பட்டம் பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து, நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான்.

அவனுக்குத் திருமணம் முடித்து வைக்க வேண்டுமென்று பெற்றோர் தீர்மானிக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் 

திருமணத்திற்கென்று loan போட்டு பணம் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

ஜவுளிக் கடைக்குச் சென்று எல்லோருக்கும் துணிமணிகள் எடுத்து விட்டார்கள்.

கல்யாண மண்டபம் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

சமையல்காரர் பார்த்து விட்டார்கள்.

சமையலுக்கு உரிய பொருட்கள் எல்லாம் வாங்கி விட்டார்கள்.

கல்யாண தேதியையும் குறிப்பிட்டு விட்டார்கள்.

குறிப்பிட்ட தேதியில் கல்யாணம் நடக்குமா?

எப்படி நடக்கும்?

பெண் பார்க்கவில்லையே!

மேற்சொல்லப்பட்ட எதுவும் இல்லாமல் பெண் பார்த்து விட்டால் திருமணத்தை முடித்து விடலாம்.

பெண் பார்க்காமல் வேறு எதைப் பார்த்தாலும் திருமணம் நடக்காது.

நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம்?

அறுசுவை உணவு சாப்பிடவா?

 உடை அணியவா?

படித்து பட்டம் பெறவா?

நல்ல வேலையில் அமரவா?

சம்பளம் வாங்கவா?

வீடு கட்டவா?

இவற்றை எல்லாம் எல்லோரும் செய்கிறோம்.

தப்பே இல்லை.

ஆனால் இவற்றுக்காக நாம் மனிதராகப் பிறக்கவில்லை.

நாம் பிறந்திருப்பதன் ஒரே நோக்கம் புண்ணியங்கள் நிறைந்த ஆன்மீக வாழ்வு வாழ்ந்து,

இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் முடிவில்லா பேரின்ப வாழ்வு வாழவே மனிதனாகப் பிறந்திருக்கிறோம்.

இதை மறந்து உலகில் எல்லா விதமான வசதிகளுடன், எவ்வளவு செல்வச் செழிப்பான வாழ்வு வாழ்ந்தாலும் ஒரு பயனும் இல்லை.

இவ்வுலகில் நாம் தேட வேண்டியது உணவையும், உடையையும், வீட்டையும், வேலையையும், சம்பளத்தையும் அல்ல.

அனைத்திற்கும் மேலாக இறைவனது ஆட்சியையும்,

 அவருக்கு ஏற்புடையவற்றையும் தேட வேண்டும். 

மற்றவை அனைத்தையும் இறைவனே நமக்கு ஏற்பாடு செய்வார்.

மற்றவை அனைத்தும் இவ்வுலகில் வாழ நமக்குத் தேவை.

ஆனால் மறுவுலக வாழ்க்கைக்குத் தேவையானது அருள் நிறைந்த வாழ்வு மட்டும் தான்.

இவ்வுலக வசதிகள் எதுவும் இல்லாமல் இறையருளோடு மட்டும் வாழ்பவன் நித்திய பேரின்ப வாழ்வை ஈட்டுவான்.

அருள் இல்லாமல் பொருளோடு மட்டும் வாழ்பவனுக்கு பேரின்ப வாழ்வு கிட்டாது.

அருளோடு வாழ்வது எப்படி?

இறை அருளின் ஊற்று இயேசு ஏற்படுத்திய தேவத் திரவிய அனுமானங்கள்.

இவற்றைப் பெறும் போது தூய ஆவியானவர் தனது அருள் வரங்களோடு நம்மீது இறங்குவார்.

நாம் தூய வாழ்வு வாழவும், நற்செயல்கள் புரியவும் வேண்டிய அருள் வரங்களை நம்மீது பொழிவதோடு

நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்திச் செல்வார்.

நாம் பாவம் செய்யாமல் வாழ வேண்டும்.

பலகீனத்தின் காரணமாக பாவத்தில் விழ நேர்ந்தால்

அதற்காக வருந்தி, பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற வேண்டும்.

அடிக்கடி திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

பாவமின்றி நாம் உண்ணும் திவ்ய நற்கருணை நமக்கு ஆன்மீக சக்தியைத் தரும்.  

நற்கருணை நாதரின் துணை எப்போதும் நம்மோடு இருக்கும்.

நமது பிறர் அன்புச் செயல்கள் மூலம் இறைவனுக்குச் சேவை செய்ய வேண்டும்.

இயேசுவின் நற்செய்தியை நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் வாழ்வாக்க வேண்டும்.

இவ்வாறு அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவோம்.

நமது தேவைகளை அவரே பூர்த்தி செய்வார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment