Tuesday, June 11, 2024

"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன்."(மத்தேயு.10:16)

"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன்."
(மத்தேயு.10:16)

நற்செய்தியை அறிவிக்க பன்னிருவரையும் அனுப்பிய போது இயேசு கூறிய வார்த்தைகள் இவை.

"ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்."

சீடர்கள் ஆடுகளைப் போல சாதுவானவர்கள்.

ஆனால் அவர்கள் நற்செய்தியை அறிவிக்கச் செல்லுமிடத்தில் உள்ள எல்லா மக்களும் அவர்களைப் போல் இருக்க மாட்டார்கள்.

சாதாரண மக்களும் இருப்பார்கள், ஓநாய்களைப் போன்றவர்களும் இருப்பார்கள்.

இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த யூதேயா, கலிலேயா பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களும் அப்படித்தானே இருந்தார்கள்.

நற்செய்தியைக் கேட்கவும், தங்கள் நோய்களிலிருந்து குணமடையவும் அவரைப் பின்தொடர்ந்த மக்களோடு

அவரைக் கொல்வதற்கென்றே அவரைப் பின்தொடர்ந்த பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இருந்தார்களே.

அவர்களால் தானே அவர் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப் பட்டார்.

சீடர்கள் நற்செய்தியை அறிவிக்கும் போதே ஓநாயைப் போன்றவர்களால் கடிக்கப் படவும் தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார்.

திருச்சபையின் தொடக்க காலத்தில் நற்செய்தியை அறிவித்த சீடர்கள் வேதசாட்சிகளாகத் தானே மரித்தார்கள்.

தொடக்க காலத்திலிருந்து இந்நாள் வரை திருச்சபையின் வரலாறே வேதசாட்சிகளால் நிறைந்தது தானே.

நமது காலத்திலேயே 

நமது இந்தியாவிலேயே

 பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடியதோடு,

 அவர்களிடையே நற்செய்தியை அறிவித்ததற்காக

 வேதசாட்சியாக மரித்த 
சங்.ஸ்டேன் சுவாமி சே.ச

இன்னும் நமது ஞாபகத்தில் இருக்கிறாரே.

மணிப்பூரில் நடந்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியுமே.

மக்களோடு அவர்கள் வழிபடும் கோவில்களும் வேத சாட்சிக்களாக மரித்துக் கொண்டிருக்கின்றன.

ஆக இயேசு கூறிய வார்த்தைகள் அன்றைய சீடர்களுக்கு மட்டுமல்ல, இன்றைய சீடர்களுக்கும் பொருந்தும்.

கத்தோலிக்க திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் இயேசுவின் சீடர்கள் தான்.

நமக்கும் நற்செய்தியை அறிவிக்கும் கடமை உண்டு.

அதன் விளைவுகளை ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

இயேசு நமக்காகச் சிலுவையைச் சுமந்தார்.

நமக்காக அதில் மரித்தார்.

உணவை நெருப்பில் வேக வைத்தால் தான் நாம் அதை உண்ண முடியும்.

நாம் சிலுவையைச் சுமந்து அதில் மரித்தால்தான் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியும்.

இயேசுவுக்காக வாழ்வோம்.

இயேசுவுக்காக மரிப்போம்

இயேசுவோடு பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment