Tuesday, June 25, 2024

"என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்."(மத்தேயு.7:21)

"என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்."
(மத்தேயு.7:21)

ஒரு நாள் என் வகுப்பு மாணவன் ஒருவனின் தந்தை நான் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது வகுப்புக்கு வந்தார்.

"என்ன சார், பையனைப் பார்க்க வேண்டுமா?''

"இல்லை சார், உங்களைத்தான் பார்க்கணும்."

"சொல்லுங்க, என்ன விசயம்?"

''பைனனைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.

மாதத் தேர்வில் பாஸ் பண்ணல."

" கொஞ்சமல்ல, நிறையவே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அவன் வீட்டில் பாடங்களைப் படிப்பதாகத் தெரியவில்லை."

"உண்மைதான், வீட்ல TVய விட்டு எழுந்திருக்கவே மாட்டேன் என்கிறான்."

"நான் உங்கள் வீட்ல வந்து பையனை எழுப்பி விட வேண்டுமா?"

"அப்படிச் சொல்லவில்லை. கண்டித்து படிக்க வையுங்கள் என்றேன்."

" வகுப்பில் பையனுக்கு விளங்கும்படி பாடம் நடத்த வேண்டியதும், 

படிக்காவிட்டால் கண்டிக்க வேண்டியதும் என் பொறுப்பு.

வீட்டில் அவனைப் படிக்க வைப்பது பெற்றோர் பொறுப்பு.

பையனின் படிப்பு முடியுமட்டும் வீட்ல TVய அப்புறப்படுத்துங்கள்.

பையன் படிக்க ஆரம்பித்து விடுவான்."

மாணவன் பள்ளிக்கூடத்துக்கு வந்தால் மட்டும் போதாது, பாடங்களைப் படிக்க வேண்டும்.

பெற்றோர் மகனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால் மட்டும் போதாது, வீட்டில் படிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

ஆன்மீக விசயத்திலும் பையனைப் போலவும், அவனுடைய அப்பாவைப் போலவும் நடந்து கொள்கிறோம்.

செய்ய வேண்டியதைச் செய்வதில்லை.

செய்ய எளிதானதை மட்டும் செய்கிறோம்.

காலையிலும் மாலையிலும் செபம் சொல்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குப் போகிறோம்.

திவ்ய நற்கருணையை உட்கொள்கிறோம்.

நமது ஆண்டவர் எல்லா ஆன்மீக காரியங்களிலும் நமக்கு முன் மாதிரியாகக் நடந்து கொண்டார்.

அவரே கடவுளாக இருந்தாலும் இரவு முழுவதும் தந்தையை நோக்கி செபித்தார்.

அதோடு தனது தந்தையின் சித்தத்தை நிறைவேற்றினார்.

மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்து நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது தந்தையின் சித்தம்.

அதை நிறைவேற்றினார்.

நாமும் மீட்புப் பெற வேண்டுமென்றால்

செபிப்பதோடு தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவும் வேண்டும்.

திருப்பலி கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான செபம்.

திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.

காலை மாலை செபிக்க வேண்டும்.

ஆனால் அது மட்டும் போதாது.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

தந்தையின் சித்தத்தை எப்படி அறிவது?

எல்லாருக்கும் பொதுவான தந்தையின் சித்தம் நல்ல கிறித்தவனாய் வாழ்வது.

அவரை நேசிப்பதோடு அவரால் படைக்கப் பட்ட அனைவரையும் நேசிக்க வேண்டும்.

நமது நேசம் நற்செயல்கள் மூலம் வெளிப்பட வேண்டும்.

கடவுள் அவரது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டது போல, நம்மிடம் உள்ளதை நமது பிறனோடு பகிர்ந்து வாழ வேண்டும்.

நமது அயலானுக்கு என்ன தேவை என்பதை அறிந்தபின்னும் அதை நம்மால் இயன்ற அளவு பூர்த்தி செய்யா விட்டால் நாம் நமது கடமையில் தவறியவர்கள் ஆவோம்.

நம்மைப் பகைப்பவர்களை நேசிக்க வேண்டும் என்பது தந்தையின் சித்தம்.

நேசிப்பது மட்டுமல்ல அவனுக்கு நம்மால் இயன்ற நன்மையைச் செய்ய வேண்டும்.

' நான் நிலை வாழ்வைப் பெற வேண்டுமென்றால், கட்டளைகளைக் கடைபிடிப்பது போக வேறென்ன செய்ய வேண்டும்" என்று கேட்டவனிடம் இயேசு 

, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், 

உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

 அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். 

பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"" என்று சொன்னார். 
(மத்தேயு.19:21)

இறைவனின் இந்த சித்தத்துக்குப் பெயர் 'தேவ அழைத்தல்.'

இது எல்லோருக்கும் கொடுக்கப் படுவதில்லை.

அழைக்கப் பட்டவர்கள் தங்கள் உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு இறைப்பணி ஆற்றச் செல்ல வேண்டும்.

பெண்கள் கன்னிமை வாழ்வு வாழ அழைக்கப்படுவதும் தேவ அழைத்தல் தான்.

ஆக விண்ணரசில் நிலையாக வாழ விரும்புவோர்

இயேசுவை நோக்கி செபிப்பதோடு,

விண்ணகத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவும் வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வின் குறிக்கோள் அதுதான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment