Wednesday, June 19, 2024

ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்."(மத்தேயு.6:31)

"ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்."
(மத்தேயு.6:31)

கவலை என்றால் அர்த்தமற்ற பயம்.

Worry is meaningless fear.

சிறு குழந்தைகள், "உலகில் பிறந்து விட்டோமே, எப்படி வாழப் போகிறோமோ!" என்று நினைத்து கவலைப் படுவதில்லை.

அவை செய்வதெல்லாம் பசித்தால் அம்மாவைப் பார்த்து அழும்.

வயிறு நிறைந்து விட்டால் யாரைப் பார்த்தாலும், பார்க்கா விட்டாலும், சிரிக்கும்.

அவற்றின் தேவைகளுக்கு அம்மா.

அம்மா அருகில் இருக்கும் போது அவை எதற்கும் கவலைப் படுவதில்லை.

கடவுள் முன் நாம் அவருடைய குழந்தைகள் தானே.

அவர் எப்போதும் நம்முடன் தானே இருக்கிறார்.

எல்லாம் வல்ல தந்தை நம்முடன் இருக்கும் போது நாம் எதற்குக் கவலைப் பட வேண்டும்?

"ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; 

உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். 

உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? 

 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; 

அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. 

உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். 

அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! 

 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? 

உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

 காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; 

அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. 


நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் 

உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?"

என்று நம்மைப் படைத்துப் பராமரித்து வரும் நமது ஆண்டவர் சொல்லுகிறார்.

கவலைப் படுவதற்காக அவர் நம்மைப் படைக்கவில்லை.

வாழ்வதற்காகப் படைத்தார்.

அன்பு செய்து வாழ்வதற்காகப் படைத்தார்.

இவ்வுலகிலும், மறுவுலகிலும் அன்பு செய்வது மட்டுமே நமது வேலை.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும்

கடவுளையும், பிறனையும் அன்பு செய்வது மட்டுமே நமது வேலை.

எவ்வளவு இனிமையான வேலை!

What can be sweeter than love? 

God Himself is Love.

அன்பு செய்யும் வேலையை மட்டும் நாம் ஒழுங்காகச் செய்தால் போதும்.

நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய நம்மைப் படைத்த நமது தந்தை நம்மோடு இருக்கிறார்.

பணம் இருந்தால் தானே உலகில் வாழ முடியும்!

அன்பு செய்து கொண்டேயிருந்தால் செலவுக்குப் பணம் தானே வந்து விடுமா?

வந்து விடும்.

விடிந்தது முதல் அடையும் வரை கடவுளை நோக்கி செபித்துக் கொண்டிருந்தால்

உண்ண உணவும், உடுக்க உடையும் வந்து விடுமா?

வந்து விடும்.

எப்படி?

செபம் என்றால் என்ன?

எதைச் செய்தாலும் இறைவனுடைய மகிமைக்காக செய்வது தான் செபம்.

நமது அந்தஸ்தின் கடமைகளை இறைவனுடைய மகிமைக்காகச் செய்தால் அது செபம்.

நாம் படிப்பது, தேர்வு எழுதுவது, அதில் வெற்றி பெறுவது, அலுவலகத்தில் பணி புரிவது, அதற்காக ஊதியம் பெறுவது, பயிர்த் தொழில் செய்வது, வியாபாரம் செய்வது போன்ற

அந்தஸ்தின் கடமைகளை இறைவனுடைய மகிமைக்காகச் செய்தால் அது செபம் தானே.

அந்த செபத்தை ஒழுங்காகச் செய்தால் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும், மற்றவர்களுக்கு உதவியாகக் கொடுக்க பொருளும் தானே வந்து விடுமே!

நமது கடமையை ஒழுங்காகச் செய்வது செபம் தான்.

இந்த செபத்தைச் செய்யக் கவலை எதற்கு?

கவலைப் படுவதால் நமக்கு வளர்ச்சி ஏற்படாது.

எல்லாவற்றுக்கும் கடவுள் பொறுப்பு என்ற உணர்வோடு நமது கடமைகளை இறைவனுடைய மகிமைக்காகச் செய்தால் போதும்.

மற்றவற்றைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.

இப்போது மனதில் ஒரு கேள்வி எழும்.

கடவுளைப் பற்றி நினைக்கவே செய்யாதவர்கள்,

இலஞ்சம் வாங்குபவர்கள், திருடர்கள், எல்லா விதமான பாவங்களையும் செய்பவர்கள்

எல்லா விதமான வசதிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடவுளையே நினைத்து அவருக்காக வாழ்பவர்களுக்கு அவ்வளவு வசதிகள் கிடைக்காதது மட்டுமல்ல,

துன்பங்களோடு அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

இது ஏன்?

ஒரு ஒப்புமை.

ஒரு விவசாயி இரவும் பகலும் நிலத்தில் கஷ்டப்பட்டு உழைக்கிறான்.

இன்னொரு விவசாயி வயல் பக்கமே போகாமல் ஜாலியாக ஊர் சுற்றுகிறான்.

வட்டிக்குக் கடன் ஹோட்டலில் ருசியாகச் சாப்பிடுவது, சினிமாவுக்குப் போவது, டாஸ்மாக் கடைக்குப் போவது என்று ஆனந்தமாக வாழ்கிறான்.

ஆண்டின் இறுதியில் வயலில் கஷ்டப்பட்டு உழைத்தவன் அறுவடை முடிந்து ஆனந்தமாக வீட்டுக்கு வருவான்.

ஜாலியாக ஊர் சுற்றியவன் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் ஜெயிலுக்குப் போவான்.

இவ்வுலகில் ஜாலியாக வசதிகளோடு வாழ்பவன் மறுவுலகில் பேரிடர் வாழ்வு வாழ்வான்.

இவ்வுலகில் குறைந்த வசதிகளோடு துன்பங்கள் சூழ இறைவனுக்காக வாழ்பவன் 

மறுவுலகில நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வான்.

இவ்வுலகில் வாழ குறைந்த வசதிகள் போதும்.

உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும் மட்டும் போதும்.

வேறு வசதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் கடவுளுக்காக வாழலாம். 

அவருக்காக வாழ நமக்கு என்னென்ன தேவை என்று கடவுளுக்குத் தெரியும்.
  
நம்மை அவர் கையில் ஒப்படைத்து விட்டால் நமக்கு வேண்டியதை நாம் கேளாமலே தருவார்.

நாம் விண்ணக வாழ்வை அடைவதற்கு இவ்வுலகில் நமக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் உறுதியாகத் தருவார்.

எதெல்லாம் நமது விண்ணகப் பயணத்தில் நமக்கு இடைஞ்சலாக இருக்குமோ அதையெல்லாம் உறுதியாகத் தரமாட்டார்.

மருத்துவரிடம் வைத்தியம் பார்க்கும்போது அவர் தரும் மருந்தைச் சாப்பிட வேண்டும், நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.

ஆன்மீக வாழ்வில் நமக்கு என்னென்ன தேவை என்பதைத் தீர்மானிப்பதை இறைவன் கையில் விட்டு விடுவோம்.

அதுதான் நமக்கு நல்லது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment