Thursday, June 13, 2024

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."(மத்தேயு.6:1)

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."
(மத்தேயு.6:1)

இறையன்பின் வெளிப்பாடு தான் பிறரன்பு.

இறையன்பு இல்லாதவர்களிடம் பிறரன்பு இருக்க முடியாது.

இறையன்பு உள்ளவர்களிடம் உறுதியாக பிறரன்பு இருக்கும்.

அன்பு ஒன்றுதான். 

கடவுள் தன்னையும் நேசிக்கிறார், நம்மையும் நேசிக்கிறார்.

நாமும் கடவுளை நேசிக்க வேண்டும்,

நம்மையும் நேசிக்க வேண்டும்,

பிறரையும் நேசிக்க வேண்டும்.

நமது நேசம் கடவுளை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

நாம் படைக்கப்பட்டது இறைவனால்.

நாம் வாழ வேண்டியது இறைவனுக்காக.

நமது  பிறரன்புகூட இறைவனுக்காகத்தான்.

நாம் நம்மை நேசிக்க வேண்டியதும் இறைவனுக்காகத்தான்.

எங்கும் நிறைந்துள்ள கடவுள் நமது சிந்தனை, சொல், செயல் முழுவதும் நிறைந்திருக்க வேண்டும்.

சிந்தனை, சொல், செயல்தான் நாம்.

நமது ஒவ்வொரு அணுவிலும் இறையுணர்வு இருக்க வேண்டும்.

நாம் சிந்திப்பது இறைவனுக்காக.

நாம் பேசுவது இறைவனுக்காக.

நாம் செயல் புரிவது இறைவனுக்காக.

நாம் நமது அயலானுக்கு உதவி செய்வது,  தர்மம் செய்வது எல்லாம் இறைவனுக்காகத்தான்.

பிறருதவியின்போது நம்மைப் பற்றி நாமே தம்பட்டம் அடிக்கக்கூடாது. 

 வெளிவேடக்காரர்கள் தான், தங்களை மக்கள் புகழ வேண்டுமென்று 

தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். 

அவர்கள் தம்பட்டமே அவர்களுக்குரிய கைம்மாறு.

 அவர்களுக்கு இறைவனிடமிருந்து எந்த கைம்மாறும் கிடைக்காது.

நாம் தர்மம் செய்யும்போது, நமது வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரிய‌க் கூடாது. 

 நாம் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

  நாம் செய்யும் தர்மம் கடவுளுக்கு மட்டும் தெரிந்தால் போதும்.

ஏனெனில் அவர்தான் நமக்குக் கைம்மாறு அளிப்பவர். 


நாம் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் வேண்டக் கூடாது.

அவர்கள்  மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக பொது இடங்களில் நின்று கொண்டு சப்தமாக வேண்டுவார்கள்.

அதனால் கிடைக்கும் பெருமை மட்டுமே  . அவர்களுக்குரிய கைம்மாறு.

 இறைவனின் கைம்மாறு அவர்களுக்குக் கிடைக்காது.

செபம் நமக்கும் இறைவனுக்கும் மட்டும் உள்ள உரையாடல்.

அது அவருக்கும் நமக்கும் தெரிந்தால் போதும்.

இறைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் திருப்பலி, திருவிருந்து, தியானம் போன்ற சமூக வழிபாடுகளில் கலந்து கொள்கிறோம்.

அது மற்றவர்கள் நம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல, இறைவனுக்காக.

நாம் தனியாக இருக்கும் போது எப்போதும் இறைப் பிரசன்னத்தில் இருக்க வேண்டும்.

அதுவே சக்திவாய்ந்த செபம்.

நமது  உள்ளம் இறைவனோடு ஒன்றித்து இருப்பதுதான் உண்மையான செபம்.

அதற்கு தந்தை நமக்குக் கைம்மாறு அளிப்பார். 

செபம் என்பது வார்த்தைகளின் தொகுப்பு அல்ல, உள்ளங்களின் இணைப்பு.

ஆகவே செபத்தின்போது மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை.

 நாம் செபத்தில் நமக்கு வேண்டியதை இறைவனிடம் கேட்கலாம்.

அதற்காக அதிக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

காலையில் குழந்தை 'அம்மா' என்று அழைத்தால்.

அது உணவு கேட்கிறது என்று அவளுக்குத் தெரியும்.

உடனே உணவு ஊட்டுவாள்.

 நாம் என்ன கேட்கப் போகிறோம் என்பது நாம் கேட்கு முன்பே நமது விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.

ஆகவே அவரை அழைத்தால் போதும்.

வார்த்தைகளுக்குரிய சக்தியை பக்திக்குப் பயன்படுத்தி,

குறைந்த வார்த்தைகளால் அவரை அழைத்தால் போதும்.

நமக்குத் தர வேண்டியதை தர வேண்டிய நேரத்தில் தருவார்.

நம்மைப் படைக்க வேண்டுமென்று நித்திய காலத்திலிருந்தே திட்டமிட்டுக் கொண்டிருந்த கடவுள்

நாம் வாழ என்ன தேவை என்பதையும் நித்திய காலத்திலிருந்தே அறிந்திருந்தார்.

அவரை நம்பாதவர்களுக்குக் கூட அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வுலக வாழ்வைப் பொறுத்தமட்டில் அவர்கள் நம்மை விட அதிக வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவருக்காக  வாழாதவர்களுக்கே தேவையானதைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கடவுள்

அவருக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மைக் கைவிடுவாரா?

ஒவ்வொரு வினாடியும் நம்மோடிருந்து நம்மை அவரது விருப்பப்படி பராமரித்து வருகிறார்.

நாம் அவருக்காகவே   அறச் செயல்களைச் செய்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment