Monday, June 3, 2024

இயேசுவின் உடலும், இரத்தமும்.(தொடர்ச்சி)

இயேசுவின் உடலும், இரத்தமும்.
(தொடர்ச்சி)

கடவுள் நித்திய காலமாகத் விண்ணகத்தில் வாழ்பவர்.

அவர் மனிதர்கள் வாழ்வதற்காக உலகைப் படைத்தார்.

மனிதர்களை அவர்களுடைய பாவத்திலிருந்து மீட்பதற்காக அவர் மனிதனாகப் பிறந்தார்.

அதற்காக அவர் பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரித்து விண்ணகம் சென்ற பின்பும் 

தொடர்ந்து மனிதனாக மனிதர்களோடு மண்ணுலகில் வாழ விரும்பினார்.

அதற்காக அவர் பாடுகள் படுவதற்கு முந்திய நாள் இரவில் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அப்ப ரசக் குணங்களுக்குள்

 கன்னி மரியின் வயிற்றில் உற்பவித்த போது எடுத்த 

அதே உடலோடும், உதிரத்தோடும், 
தன்னுடைய ஆன்மாவோடும், தெய்வீகத்தோடும் 

இருப்பதுதான் திவ்ய நற்கருணை.

திவ்ய நற்கருணையை நமது ஊனக் கண்களால் பார்ப்பதற்கு அப்பமும் திராட்சை ரசமுமாய்த் தோன்றினாலும்

அது 2024 ஆண்டுகளுக்கு முன் பெத்லகேமில் பிறந்து,

 நாசரேத்தில் வளர்ந்து,

 கலிலேயாவிலும், யூதேயாவிலும் நற்செய்தியை அறிவித்து, 

செருசலேமில் நமக்காகப் பாடுகள் பட்டு மரித்த அதே இயேசு.

மரித்து, உயிர்த்து, விண்ணகம் எய்திய அதே இயேசு

திவ்ய நற்கருணையில் 

உடலோடும் உயிரோடும் நம்மோடு வாழ்கிறார்.

அதே இயேசுவை நமது குருவானவர் ஒவ்வொரு நாளும் திருப்பலியின்போது 

பரம‌ பிதாவுக்குப் பலியாக ஒப்புக் கொடுப்பதோடு

நமக்கு ஆன்மீக உணவாகத் தருகிறார்.

திவ்ய நற்கருணையில் இருப்பது 

அன்னை மரியாளிடமிருந்து பிறந்த இயேசுதான் என்பதை உணர்வுப் பூர்வமாக விசுவசிக்கிறோமா,

 அல்லது விசுவசிக்கிறோம் என்று வெறும் வார்த்தைகளால் சொல்கிறோமா?

நாம் உண்மையாகவே விசுவசித்தால் நமது விசுவாசம் செயலில் வெளிப்பட வேண்டுமே!

நமது விசுவாசம் உண்மையானால்

திவ்ய நற்கருணையின் முன் முழந்தாள் படியிடுவோம்,

வெறுமனே தலை குனிய மாட்டோம்.

ஏனெனில் அவர் கடவுள்.

திவ்ய நற்கருணையை முழந்தாள் படியிட்டு நாவினால் வாங்குவோம்,

தின்பண்டத்தை வாங்குவதைப் போல் கையினால் வாங்க மாட்டோம்.

திவ்ய நற்கருணையை வாங்கிய பின் ஆண்டவரோடு பேசுவோம்,

நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்க மாட்டோம்.

பகலில் நேரம் கிடைக்கும் போது நற்கருணை நாதரைச் சந்தித்து உரையாடுவோம்.

நற்கருணை நாதரை வாங்கிய நாவினால் பொய், புறணி பேச மாட்டோம்.

நற்கருணை நாதர் நம்மோடு வாழ்கிறார் என்ற எண்ணம் இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் பாவம் செய்ய மாட்டோம்.

திருவிருந்தின்போது நம்முள் வரும் இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தவர் என்றும்,

இறந்தவர்களுக்கு உயிர் அளித்தவர் என்றும்,

நோயாளிகளைக் குணமாக்கியவர் என்றும்

என்று நாம் உறுதியாக விசுவசித்தால்

தேவைகள் ஏற்படும் போதும், நோய் நொடிகள் ஏற்படும் போதும் அஞ்ச மாட்டோம்.

என்ன நடந்தாலும் இயேசுவின் சித்தப்படி தான் நடக்கும் என்ற எண்ணம் மனதுக்கு ஆறுதல் தரும்.

மரணமே வந்தாலும் பயப்பட மாட்டோம்.

ஏனெனில் நம்மோடு இருப்பவர் மரணத்தை வென்றவர்.

அவரை உணவாக உண்பவர்களுக்கு நித்திய பேரின்ப வாழ்வை அளிப்பவர்.

மரணத்தால் அவரிடமிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.

மாறாக நம்மை நித்திய காலமும் அவரோடு இணைத்து வைக்கும்.

திவ்ய நன்மை வாங்குவதன் மூலம் நமது உடலையும் இரத்தத்தையும் இயேசுவின் உடலோடும் இரத்தத்தோடும் இணைத்து வாழ்வோம்.

நிலை வாழ்வைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment