Saturday, June 29, 2024

"ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்."(மாற்கு.5:28)

"ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்."
(மாற்கு.5:28)

 பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் குணமாக விரும்புகிறார்.


அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தேடி வருகிறார்.


இயேசு தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவரது மகளைக் குணமாக்கப் போய்க்கொண்டிருக்கிறார்.

பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இரத்தப் போக்குள்ள பெண் தன்னைக் குணமாக்கும் படி இயேசுவிடம் கேட்கவில்லை.

 அவருடைய ஆடையைத் தொட்டாலே குணம் கிடைக்கும் என்று அப்பெண் உறுதியாக நம்புகிறாள்.

இயேசுவுக்குப் பின்னால் வந்து அவருடைய மேலுடைத்‌ தொடுகிறாள்.

பூரணக்‌ குணமடைகிறாள்.

அவளுடைய நம்பிக்கையின் ஆழத்தைப் பாருங்கள்.

தனக்குச் சுகமில்லை என்று இயேசுவிடம் அவள் சொல்லவில்லை.

தான் சொல்லாமலேயே அவருக்குத் தெரியும் என்று உறுதியாக நம்புகிறாள்.

கடவுளுக்கு மட்டும் நாம் சொல்லாமலேயே நம்மைப் பற்றித் தெரியும்.

ஆகவே இயேசு கடவுள் என்று உறுதியாக நம்புகிறாள்.

குணமாக்குபவர் அவர்தான்.

ஆகவே அவருடைய ஆடையைத் தொடப்போவதும் அவருக்குத் தெரியும்.

ஆகவே அவரிடம் சொல்லாமலே அவருடைய மேலாடையைத் தொடுகிறாள்.

அவளது ஆழமான நம்பிக்கை அவளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது.

மேலாடையைத் தொட்டுக் குணமான பெண்ணிடமிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நமது அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை விட மற்றவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வது எளிது.

இயேசு கடவுள் என்று நம்புகிறோம்.

கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று நம்புகிறோமா?

நமது ஆன்மீக வாழ்வுக்கு என்னவெல்லாம் தேவை என்று கடவுளுக்குத் தெரியும் என்று நம்புகிறோமா?

நாம் கேளாமலேயேயே நம்மைப் படைத்த கடவுள் நமக்கு தேவையானவற்றை நாம் கேளாமலேயே தருவார் என்று நம்புகிறோமா?

நாம் கடவுளின் விருப்பப்படி வாழ்ந்து கொண்டிருந்தால் நமக்கு தேவையானவற்றைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகிறோமா?

கடவுளுடைய விருப்பப்படி வாழ்வது ஒன்றுதான் நமது வாழ்க்கையின் நோக்கம் என்று நம்புகிறோமா?

கடவுளை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பு செய்து அவருக்காகவே வாழ்ந்து வந்தால் நமக்குத் தேவையானவற்றை அவரே நாம் கேளாமல் தருவார் என்று நம்புகிறோமா?

இந்த கேள்விகளுக்கு நம்புகிறோம் என்று பதில் வந்தால் நாம் நம்மைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே!!

நாம் நாம் நம்மைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்தால் நமக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்.

சுகமில்லாத பெண்மணி இயேசுவின் மேலாடையை மட்டுமே தொட்டாள்.

 அவள் குணமடைந்தாள்.

நாம் இயேசுவையே நாவால் வாங்கி உட்கொள்கிறோம்.

திவ்ய நற்கருணை உட்கொள்ளும்போது நாமும் இயேசுவும் ஒரே உடலாக இணைந்து விடுகிறோம்.

திவ்ய நற்கருணை நமக்கு விருந்து மட்டுமல்ல, 

மருந்தும் கூட.

திவ்ய நற்கருணையை அருந்தும் நாம் நமது உடலால் அவர் உடலைத் தொடுவதால்

நம்மைப் பற்றி கவலைப்படாமல் அவருக்காகவே வாழ்வோம்.

நாம் நோய்கள் என்று கருதுபவற்றைப் புனிதர்கள் நோய்களாகவே கருதவில்லை.

 அருள் ஈட்டித்தரும் சிலுவைகளாகவே கருதினார்கள்.

உடலில் வரும் நோய்களால் ஏற்படும் துன்பங்களை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டு

 அவைகளுக்கு ஈடாக நித்திய பேரின்பத்தை பெற்றுக் கொண்டார்கள்.

நாமும் அப்படியே செய்யலாமே!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment