Saturday, June 22, 2024

"அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்." (மாற்கு.4:41)

"அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்." 
(மாற்கு.4:41)

இயேசு கடலில் வீசிய புயலையும், ஓங்கி எழுந்த‌ அலைகளையும் தனது வார்த்தைகளால் அமர்த்திய போது

அவருடைய சீடர்கள் பேரச்சம் கொண்டு, 

"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" 

என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

சீடர்களுடைய செயல்களைப் பார்க்கும் போது நமக்குச் சிரிப்பு வருகிறது.

சீடர்கள் இயேசுவால் அழைக்கப் பட்டவர்கள்.

அழைக்கப் பட்டவுடன் தங்கள் குடும்பத்தையும், சொத்து சுகங்களையும் விட்டு விட்டு அவரே கதி என்று அவரைப் பின் தொடர்ந்தவர்கள்.

அவர் செய்த புதுமைகளைக் கண்ணால் பார்த்தவர்கள்.

அவரை இறைமகன் என்றும், யூதர்களின் விடுதலைக்காக அவர்கள் எதிர்பார்த்த மெசியா என்றும் நம்பினார்கள் என்று‌ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அவர் புயலையும் கடலையும் வார்த்தைகளால் அடக்கிய புதுமையைப் பார்த்து  

"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! 

இவர் யாரோ!" 

என்று வியப்புடன் கூறுகின்றனர்.

கப்பர்நாகுமில் முடக்குவாதக் காரனைக் குணமாக்கிய போது,

"மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன." என்று கூறியதைக் காதால் கேட்டவர்கள்.

கடவுளால் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் இப்போது "இவர் யாரோ!" என்று வியக்கிறார்கள்.

அவர்களுடைய விசுவாசத்தின் அளவைப் பார்க்கும் போது நமக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அவர்களை விட்டு விடுவோம்.

நம்ம கதைக்கு வருவோம்.

நமக்கு இயேசு யார் என்று தெரியுமா?

இயேசு யார் என்று நம்மிடம் யாராவது கேட்டால் மனப்பாடமாகச் சொல்லி விடுவோம்,

" நம்மைப் பாவத்திலிருந்து மீட்க மனிதனாகப் பிறந்த‌ 
தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன்."

ஞானோபதேச வகுப்பில் படித்ததை ஒப்பித்து விடுவோம்.

ஆனால் உண்மையில் இயேசு யாரென்று நமக்குத் தெரியுமா?

எங்கள் வீட்டு விழாவுக்கு Video coverage செய்த Studioவுக்கு Photo album தயாரிப்பது சம்பந்தமாக phone message அனுப்பினேன்.

இரண்டு நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து Studio owner க்கு Phone செய்து Message பற்றி விசாரித்தேன்.

அவர் கொடுத்த பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

அவரிடம் இருந்தது Apple Phone.

அவர் சொன்னார், "Phone ல் பேச மட்டும் தான் தெரியும். Message பற்றி எதுவும் தெரியாது.

எதுவும் சொல்ல வேண்டுமென்றால் Phone ல் சொல்லுங்கள், அல்லது, நேரில் வந்து சொல்லுங்கள்." என்றார்.

அவரிடம் Phone இருந்தது.‌ அது மட்டும் தெரியும். அதைப் பயன்படுத்தத் தெரியாது.

Phone இருந்து என்ன பயன்?

இப்போது நமது கேள்விக்கு வருவோம்.

"இயேசு யார்?" என்ற கேள்விக்குப் பதில் நமது மனதில் இருக்கிறது.

எல்லாருக்கும் வருவது போல நமது வாழ்வில் ஒரு துன்பம் வருகிறது.

நாம் என்ன செய்வோம்?

ஞானோபதேச வகுப்பில் ஆசிரியர் கூறியிருக்கிறார்,

''இறை மகன் இயேசு நம்மை நமது பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாகப் பிறந்து

 பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்து 

பாவப் பரிகாரம் செய்தார்.

நமது வாழ்வில் நமக்கு ஏதாவது துன்பம் வந்தால்

நாம் அதைப் பாவப் பரிகாரமாக தந்தை இறைவனுக்கு ஒப்புக்‌ கொடுக்க வேண்டும்.

அப்போது தான் இயேசு பட்ட பாடுகளின் பலன் நமக்குக் கிடைக்கும்."

ஆசிரியர் கூறிய வார்த்தைகள் நமது மனதில் இருக்கின்றன.

யாராவது "நமக்குத் துன்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டால்

நமது மனதில் உள்ள வார்த்தைகளை அப்படியே ஒப்பித்து விடுவோம்.

ஆனால் நாம் நமது துன்பம் உடல் ரீதியான நோயாக இருந்தால் மருத்துவரைத் தேடுவோம்.

பணம் சம்பந்தப் பட்டதாக இருந்தால் வங்கிக்குப் போவோம்.

நிலம்  சம்பந்தப் பட்டதாக இருந்தால் வக்கீலைப் பார்ப்போம்.

ஆனால் அதைப் பாவப் பரிகாரமாக பரம தந்தைக்கு ஒப்புக் கொடுப்போமா?

துன்பத்தை சிலுவையாக ஏற்றுக் கொண்டு அதைப் பாவப் பரிகாரமாக தந்தைக்கு ஒப்புக் கொடுத்தால் இயேசுவைப் பற்றி நமக்குத் தெரியும் என்று நாம் சொல்லலாம்.

இயேசுவைப் பற்றி நமக்குத் தெரிந்ததை நாம் வாழ்ந்தால் தான் தெரிந்ததால் நமக்குப் பயன்.

வாழாவிட்டால் தெரிந்தாலும் தெரியாதது மாதிரி தான்.

நமது வாழ்க்கையை நாமே கூர்ந்து நோக்கினால்

 இயேசுவைப் பற்றி நமக்கு ஏதாவது தெரியுமா அல்லது ஒன்றும் தெரியாதா என்பதைக் கண்டு கொள்ளலாம்.

அநேக சமயங்களில் இயேசுவைப் பற்றித் தெரியாதவர்களாகத் தான் வாழ்கிறோம்.

இயேசு எங்கு இருக்கிறார் என்று கேட்டால்

நமது உள்ளத்தில் இருக்கிறார் என்று சொல்வோம்.

இது சாமியாருடைய பிரசங்கத்தில் கேட்டது.

ஆனால் அதே உள்ளத்தில் ஆயிரம் கவலைகளைக் குடியேற்றியிருப்போம்.

இயேசு இருக்கும் இடத்தில் கவலைகள் இருக்கலாமா?

அப்போ நமது வாழ்க்கையில் இயேசு இல்லை!

"நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் சீடர்களிடம் கேட்டபோது


சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். 

இயேசு அவரைப் புகழ்ந்ததுமல்லாமல்


 "உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

என்று பெருமையாகச் சொன்னார்.

ஆனால் அதே இராயப்பர் 


 இயேசு தாம் படவேண்டிய பாடுகளைப் பற்றிக் கூறிய போது 


 "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்று கூறினார். 


 இயேசு அவரைப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கூறினார். 

நாமும் சில சமயங்களில் இராயப்பரைப் போலவே நடக்கிறோம்.

இயேசுவை நமது மீட்பர் என்று கூறி விட்டு 

 அவர் நம்மில் செயல்படத் தடையாய். இருக்கிறோம். 

.
 கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறோம்.

அவரை மீட்பர் என்று கூறி விட்டு அவருக்கு ஏற்றவை பற்றி எண்ணாவிட்டால் எப்படி மீட்பு கிடைக்கும்?

இயேசுவைப் பற்றிய நமது அறிவை வாழ்வாக்கினால் தான் நமது அறிவு உண்மையான அறிவு.

வாழாவிட்டால் நமது அறிவு அறிவல்ல.

இயேசுவை அறிவோம்.

அறிந்ததை வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment