Friday, June 28, 2024

"எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."(மத்தேயு.16:18)

"எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு.16:18)

இயேசு " நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று தனது சீடர்களைக் கேட்டபோது. 

 சீமோன் பேதுரு 

, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று கூறினார். 

அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

நான் உனக்குக் கூறுகிறேன்; 

உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

 பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."

இப்போது மட்டுமல்ல.

முதன் முதல் அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துச் சென்றபோது 

 இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். 

"கேபா" என்றால் "பாறை" என்று அருளப்பர் எழுதுகிறார். 
(அரு.1:42)

இயேசு சீமோனுக்குப் பாறை என்று பெயரிட்டுருப்பதும்,

அந்தப் பாறையின்மேல்தான்,

அதாவது சீமோனின் தலைமையில் தான் தனது திருச்சபையை நிறுவப் போவதாகச் சொன்னதும்

பைபிளில் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும்

பைபிளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு வாழும் நமது பிரிவினை‌‌ சபையினர் இராயப்பரின் தலைமையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

வசனத்திற்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுக்கிறார்கள்.

"பாறை" இயேசுவைக் குறிக்கும் என்கிறார்கள்.

"கேபா எனப்படுவாய்." சீமோனைப் பார்த்து சொல்லப் பட்ட வார்த்தைகள் எப்படி இயேசுவைக் குறிக்கும்?

இயேசுவின் வார்த்தைகளை பன்னிரு சீடர்களும் எப்படிப் புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இராயப்பரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.

இராயப்பர் எங்கு ஆயராக இருந்தாரோ (உரோமாபுரி) அதையே கிறிஸ்தவத்தின் தலை நகராக ஏற்றுக் கொண்டார்கள்.

இயேசுவின் திருச்சபை 'அப்போஸ்தலிக்கத் திருச்சபை.

இயேசுவால் நிறுவப்பட்டு அப்போஸ்தலர்கள் வழியாக நமக்கு வந்திருக்கும் திருச்சபை.

இயேசு நற்செய்தியை அறிவித்தார்.

நற்செய்தி நூல்கள் இயேசுவைப் பற்றியவை.

ஆகவே அவர் கையில் நற்செய்தி நூல்கள் இல்லை.

பைபிளை நமக்குத் தந்தது "அப்போஸ்தலிக்க கத்தோலிக்கத் திருச்சபை,"

பிரிவினை சபைகள் அல்ல.

 இயேசுவின் கத்தோலிக்கத் திருச்சபையை விட்டு வெளியேறியவர்கள்

எதற்காக கத்தோலிக்கத் திருச்சபை தந்த பைபிளை மட்டும் கையில் எடுத்துச் செல்ல வேண்டும்?

குடும்பத்தை விட்டு வெளியேறிய மகன் பெற்றோரிடமிருந்து பெற்ற வாயை அவர்களைத் திட்ட பயன்படுத்துவது போல,

கையை அவர்களை அடிக்கப் பயன்படுத்துவது போல

கத்தோலிக்கத் திருச்சபையின் பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு

அதைக் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்.

அவர்களின் நோக்கம் கத்தோலிக்கர்களைத் தங்களை நோக்கி ஈர்ப்பது தான்.

இதில் வருந்தக்கூடிய விசயம் என்னவென்றால் நம்மவர்கள் அவர்களுடைய ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து,

அவர்கள் நடத்தும் சுகமளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதுதான்.

நம்மவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

காலையில் நமது ஆலயத்தில் திருப்பலியில் கலந்து விட்டு,   

மாலையில் பிரிவினை சபையாரின் கூட்டங்களுக்குப் போகும் நம்மவர்கள் சிந்திக்க வேண்டும்.

கேட்டால் அவர்களும் இயேசுவைத்தானே வழிபடுகிறார்கள் என்பார்கள்.

அவர்கள் வழிபடுவது நமது இயேசுவை அல்ல.

மக்களுக்கு பாவமன்னிப்புத் தருவதற்காக உலகிற்கு வந்தவர் நம் இயேசு.

அதற்காகத் தான் தனது சீடர்களுக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, பாவசங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தை நிறுவினார்.

நமது ஆன்மீக உணவாகிய தேவ நற்கருணையை நிறுவியவர் நம் இயேசு.

புனித வியாழனன்று திருப்பலி நிறைவேற்றி, உலகம் முடியுமட்டும் திருப்பலி நிறைவேற்ற குருத்துவத்தை நிறுவியவர் நம் இயேசு.

எங்கே பாவசங்கீர்த்தனம் இருக்கிறதோ,

எங்கே திருப்பலி நிறைவேற்றும் குருக்கள் இருக்கிறார்களோ,

எங்கே திவ்ய நற்கருணை இருக்கிறதோ

அங்கு மட்டும் தான் இறைமகன் இயேசு இருக்கிறார்.


பிரிவினை சகோதரர்களிடையே பாவசங்கீர்த்தனம் இல்லை, திருப்பலி இல்லை,
திவ்ய நற்கருணை இல்லை.

ஆகவே அவர்கள் வழிபடுவது இறைமகன் இயேசுவை அல்ல.

இயேசு என்னும் பெயரை வைத்திருப்பவர்கள் எல்லாம் இறைமகன் இயேசு ஆகிவிட முடியாது.

அவர்கள் இறைமகன் இயேசுவையும், அவரது நற்செய்தியையும் வியாபாரப் பொருளாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் செய்யும் வியாபாரத்தில் நாம் பங்கு பெறலாமா?

அவர்கள் நடத்தும் வியாபாரக் கூட்டங்களுக்கு நம்மவர்கள் போகக்கூடாது.

ஆனால் நாம் அவர்களை வெறுக்கக் கூடாது.

விண்ணகத் தந்தையில் அவர்களும் நம்முடைய சகோதரர்கள்.

விண்ணகத் தந்தை அவர்களையும் நேசிக்கிறார்.

நாமும் அவர்களை நேசிக்க வேண்டும்.

அவர்கள் மனம் திரும்பி இறைமகன் இயேசுவிடம் திரும்பி வர அவர்களுக்காக தந்தையிடம் வேண்ட வேண்டும்.

நம்மைப் பகைப்பவர்களையும் நேசிப்பது தான் உண்மையான கிறிஸ்தவ அன்பு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment