Monday, June 24, 2024

"ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்." .(மத்தேயு.7:12)

" ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."
(மத்தேயு.7:12)

விண்ணகத் தந்தை மனுக்குலத்தின்‌ தந்தை.

மனிதர்கள் அனைவரும் உடன் பிறந்த ககோதர சகோதரிகள்.

மனுக்குலம் ஒரு குடும்பம்.

குடும்பத்தினர் அனைவரும் அன்பு என்னும் கயிற்றால் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள்.

அனைவரும் ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரும் தன்னை நேசிப்பது போல மற்றவர்களை நேசிக்க வேண்டும்.

மற்றவர்களை நேசிப்பது போல் தான் தங்களை நேசிக்க வேண்டும்.

மற்றவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

மற்றவர்கள் நம்மை எப்படி நேசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அப்படியே நாமும் அவர்களை நேசிக்க வேண்டும்.

நேசம் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் தன்னை வெளிக்காட்ட வேண்டும்.

ஒருவருக்கொருவர் உதவி செய்வதைத் தான் அன்புச்‌ செயல் என்கிறோம்.

பிறர் நமக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ

அதே உதவியை நாம் பிறருக்குச் செய்ய வேண்டும்‌.

அனைவரும் இவ்வாறு செய்தால் மனிதர்கள் அனைவரும் அன்புக் கடலில் அன்புதவிகள் என்னும் படகுகளில் பயணித்து மகிழ்வார்கள்.

வெறுப்பு, பொறாமை, கோபம், பழிக்குப்பழி வாங்குதல் போன்ற எதிர்மறைக் குணங்கள் மனித சமுதாயத்தில் இருக்கவே இருக்காது.

சினிமாவில் கூட வில்லன் இருக்க மாட்டான்.

அனைவர் மனதிலும் அன்பு மட்டுமே இயக்க சக்தியாக இருந்தால் உலகில் பாவத்தின் நிழல் கூட படாது.

பூலோகமே மோட்சமாக மாறிவிடும்.

கடவுள் அன்பு மயமானவர்.

பரிசுத்தர்.

பூவுலகில் வாழும் போது யாரெல்லாம் அன்பிலும், பரிசுத்தத்தனத்திலும் வாழ்கிறார்களோ  

அவர்கள் மட்டும் தான் மோட்சத்தில் இறைவனோடு ஒன்றித்து வாழ்வார்கள்.

மோட்சவாசிகளின் ஒரே வேலை அன்பு செய்வதும், உலகில் வாழும் நமக்காக தங்கள் செபத்தின் மூலமாக உதவி செய்வது மட்டும் தான்.

அவர்களுக்கு நம்முடைய உதவி தேவையில்லை.

ஆனால் நமக்கு அவர்களுடைய உதவி தேவை.

கடவுள் தான் நம்முள் வாழ்கிறாரே,

கேளுங்கள் தரப்படும் என்று சொல்லியிருக்கிறாரே, 

நாம் அவரிடம் கேட்டால் போதாதா

எதற்காக புனிதர்களிடம் கேட்க‌ வேண்டும் 

என்று பிரிவினை சபையினர் கேட்கிறார்கள்.

தந்தையிடம் செபிக்க இயேசுவே கற்றுத் தந்திருக்கிறார்.

ஆனாலும் விண்ணில் வாழ்பவர்களும், மண்ணில் வாழ்பவர்களும் ஒரே குடும்பத்தினர் என்ற உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும்.

ஒரு குடும்ப‌ உறுப்பினர்கள் பெற்றோருடன் மட்டுமல்ல தங்களுக்குள்ளேயும் தொடர்பில் இருப்பது தானே குடும்ப வாழ்க்கை.

" எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! 

தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்

 அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! 

நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். 

இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக.

 இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல்

 அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்."

இது இயேசு தந்தையை நோக்கி வேண்டிய செபம்.

தந்தை, மகன், தூய ஆவி  மூவரும் ஒருவருக்குள் ஒருவர் ஒன்றாய் இருக்கிறார்கள்.

கடவுளுடைய பிள்ளைகளாகிய நாம் நமக்குள் ஒன்றாய் இருப்பதோடு

அவரோடும் ஒன்றித்து வாழ வேண்டும்.

விண்ணக வாசிகளும், மண்ணக வாசிகளாகிய நாமும் ஒரே இறைக் குடும்பத்தின் உறுப்பினர்கள்.

ஆகவே இறைவனும், விண்ணக வாசிகளும்,   நாமும் ஒருவரோடு ஒருவர் செபத் தொடர்பில் இருக்க வேண்டும்.

விண்ணக வாசிகள் இறைவனுள் இருப்பதால் நாம் அவர்களை நோக்கி வேண்டும் செபம் அவர் வழியாகத்தான் அவர்களை அடையும்.

நாம் ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிக்கும் போது புனிதர்களும் அதே கருத்துக்காக இறைவனிடம் செபிப்பார்கள்.

நமது செபத்தின் வலு அதிகமாகும்.

இயேசுவின் விருப்பப்படி 

நமது சகோதரர்களாகிய புனிதர்களோடும்,

நமது தந்தையாகிய இறைவனோடும் ஒன்றித்திருப்போம்.

இயேசுவின் விருப்பப்படி நாம் செயல்படும் போது நமது செபத்தின் வலிமை அதிகமாகும்.

அதாவது இறைவனுக்கேற்ற செபமாக இருக்கும்.

யாருடன் அதிகம் பழகுகிறோமோ அவர்களுடைய குணநலன்கள் நம்மையும் பற்றிக் கொள்ளும்.

புனித அந்தோனியாரை நினைத்து செபித்தால் நமது விசுவாசம் அதிகரிக்கும்.

புனித பிரான்சிஸ் அசிசியாரை நினைத்து செபித்தால் அவரைப் போல எளியவர்களாக வாழ்வோம்.

புனித அல்போன்சாளை நினைத்து செபித்தால் துன்பங்களை நேசிக்க ஆரம்பிப்போம்.

அன்னை மரியாளை நினைத்து செபித்தால் அவளைப் போல நாமும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வோம்.

புனிதர்களை நோக்கி செபிக்கும் போது அவர்களைப் பற்றி தியானித்துக் கொண்டே செபிக்க வேண்டும்.

நண்பர்களுக்குக் கடிதம் எழுதும் போது கடைசியில் 

"எனக்காக செபியுங்கள்" என்று ஒரு வரி எழுதுவோம்.

நல்ல பழக்கம் தான்.

நாமும் அவர்களுக்காக செபிக்க வேண்டும்.

பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ 

அதை நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment