Sunday, June 9, 2024

"இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்."(மத்தேயு நற்செய்தி 5:7)

"இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்."
(மத்தேயு நற்செய்தி 5:7)

எங்கே அன்பு இருக்கிறதோ அங்கு இரக்கம், கருணை, தயவு, உதவி மனப்பான்மை, ஆறுதல் கூறுதல் போன்ற பண்புகளும் இருக்கும்.

இவற்றுள் முக்கியமான பண்பு இரக்கம்.

அன்பே உருவான கடவுளிடம் இரக்கம் இருப்பதால் தான்

" ஆண்டவரே, இரக்கமாயிரும்,
கிறிஸ்துவே இரக்கமாயிரும்"

என்ற மனவல்லப செபங்களை அடிக்கடி சொல்கிறோம்.

நமது அயலானை நம்மை நோக்கி ஈர்க்கும் நட்புதான் அன்பு.

நமது அயலானை கஷ்டப்படும்போது அவன் கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்று நம்மைத் தூண்டும் உணர்வு தான் இரக்கம்.

கடவுளிடம் அளவு கடந்த விதமாய் இரக்கம் இருப்பதால் தான், ‌

இரக்கமே உருவானவராக இருப்பதால் தான் 

பாவத்தில் விழுந்து கிடக்கும் நம்மை அதிலிருந்து தூக்கிவிட அளவு கடந்த விதமாய் ஆசைப்படுகிறார்.

நமது பாவம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவரது இரக்கத்தை விடப் பெரியதாக இருக்க முடியாது.

அவரது இரக்கம் அளவிட முடியாதது.

அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசையே நண்பனே என்று அழைக்க வைத்தது அவருடைய இரக்கம் தான்.

அவருடைய சாவுக்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தன்னுடைய தந்தையை நோக்கி வேண்டுவதற்குக் காரணமாக இருந்தது அவருடைய இரக்கம் தான்.

அவர் நம்மைப் படைக்கும் போது தன்னுடைய இரக்க குணத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ஒரு நண்பருடைய வீட்டுக்கு விருந்துக்குப் போகிறோம். அவர் நமக்கு உணவு பரிமாறுகிறார்.

அவர் பரிமாறிய உணவை நாம் ருசித்து சாப்பிட்டால் அவர் மகிழ்ச்சி அடைவார்.

சாப்பிடாமல் அதை மொத்தமாகக் குப்பைத் தொட்டியில் போட்டால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?

கடவுள் நம்மைப் பற்றி அப்படித்தான் நினைப்பார்

நம்மோடு பகிர்ந்து கொண்ட இரக்கத்தைப் நாம் பயன்படுத்தாவிட்டால்.

 நாம் நமது அயலானுக்கு இரக்கம் காட்டினால் தான்

கடவுளைப் பார்த்து,  "ஆண்டவரே இரக்கமாயிரும்" என்று உரிமையோடு செபிக்கலாம்.

நமது அயலாணை நாம் இரக்கப்பட்டு மன்னித்தால் தான் கடவுள் நம்மையும் இரக்கப்பட்டு மன்னிப்பார்.

மற்றவர்கள் நம்மிடம் உதவி கேட்கும் போது நாம் இரக்கத்தோடு அவர்களுக்கு கொடுத்தால் தான் 

கடவுள் நாம் கேட்பதை எல்லாம் இரக்கத்தோடு தருவார்.

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். 

 மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். 


 கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; 

அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். 

நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.''
(லூக்கா.6:36,3738)

கடவுள் நமக்குச் செய்ததை நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.

அதைப் பார்க்கும் கடவுள் நமக்கு இன்னும் அதிகமாகச் செய்வார்.

இரக்கம் வெறும் உணர்வாக நின்று விடக்கூடாது.

இயேசு தனது இரக்கத்தைச் சிலுவையில் காட்டினார்.

நாமும் நமது இரக்கத்தைச் செயலில் காட்ட வேண்டும்.

பட்டினி கிடப்பவன் மீது இரங்கினால் போதாது,

பசிதீர உணவு கொடுக்க வேண்டும்.

சுகமில்லாதவன்மீது இரங்கினால் போதாது,

வைத்தியம் பார்க்க உதவ வேண்டும்.

செயலில் காட்டாவிட்டால்

உணர்வாலும், சொல்லாலும் எந்தப் பயனும் இல்லை.

செயலில் இரக்கப் படுவோம்.

வாழ்வில் ஏற்றம் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment