"அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது."
(மாற்கு.4:31)
இயேசு இறையாட்சியைக் கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார்.
இறைவன் எங்கும் இருக்கிறார்.
அவருடைய படைப்புகள் எல்லாம் அவருடைய சீடர்களாகிய ஆட்சிக்கு உட்பட்டவைதான்.
உலகில் வாழும் அத்தனை கோடி மக்களும் அவருடைய ஆட்சிக்கு உட்பட்டவர்கள் தான்.
ஆனால் இறையியல் ரீதியாகப் பேசும்போது அவருடைய ஆட்சியை ஏற்றுக் கொள்பவர்களை மட்டுமே இறையாட்சிக்கு உட்பட்டவர்கள் என்று கூறுகிறோம்.
ஒவ்வொரு நாளும் இறைத் தந்தையை நோக்கி, " உமது ஆட்சி வருக" என்று செபிக்கும் போது " மக்கள் அனைவரும் உமது ஆட்சியின் கீழ் வர அருள் வரம் தாரும், தந்தையே" என்று செபிக்கிறோம்.
இறைவன் மனிதர்களைப் படைக்கும் போது முழு மனச் சுதந்திரத்தோடு படைத்து விட்டார்.
ஆகவே மனம் மாறி இறையாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இயேசு போதித்தார்.
" அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார்."
(மத்தேயு.4:17)
துவக்கத்தில் கடுகு மணி எவ்வளவு சிறியதோ அவ்வளவு சிறிய அளவில் தான் இறையாட்சி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இயேசு மனித உரு எடுத்தபோது அவரை மெசியாவாக ஏற்றுக் கொண்டவர்கள் வெகு சிலரே.
அன்னை மரியாள், சூசையப்பர், எலிசபெத், அவளுடைய கணவர், அருளப்பர், சில இடையர்கள், கீழ்த்திசை ஞானிகள் மட்டுமே.
அவர் நற்செய்தியை போதிக்க ஆரம்பித்தபோது அவருடைய பன்னிரு சீடர்கள் இறையாட்சியை ஏற்றுக் கொண்டார்கள்.
அன்று கடுகு மணி போல் ஆரம்பித்த இறையாட்சி இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.
ஆகவே தான் இயேசு இறையாட்சியைக் கடுகு மணிக்கு ஒப்பிட்டார்.
" அது கடுகு விதைக்கு ஒப்பாகும்.
அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.
அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி,
வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்" என்று கூறினார்."
(மாற்கு.4:31,32)
உலக அரசர்கள் தங்கள் நாட்டை விரிவுபடுத்த வேண்டுமென்றால்
போர்கள் செய்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று
மற்ற நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தார்கள்.
ஆனால் கிறிஸ்து அரசர் அதற்கு எதிர்மாறானவர்.
முதலில் அவரே தன் உயிரைச் சிலுவையில் பலிகொடுத்து தன் அரசை நிறுவினார்.
அவருடைய சீடர்கள் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்து இறையரசைப் பரப்பினார்கள்.
அவர்களுக்கு வாரிசுகளான மறைபரப்புப் பணியாளர்கள் வேத சாட்சிக்களாக மரித்தே இறையரசை உலகெங்கும் பரப்பினார்கள்.
"வேத சாட்சிக்களின் இரத்தம் திருச்சபையின் வித்து" என்ற கூற்று உண்மையாயிற்று.
இன்றும் உலகெங்கும் ஆயிரக்கணக்கானோர் இறை அரசுக்காக உயிரைக் கொடுத்துக் கொண்டு தானிருகாகிறார்கள்.
இயேசு சர்வ வல்லவ கடவுள்.
மற்ற உலக அரசுகள் மற்றவர்களைக் கொன்று தங்களை விரிவு படுத்தும் போது
ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் கொல்லப்பட்டு தங்கள் மறையைப் பரப்ப இயேசு சித்தமானார்?
மற்ற உயிர்களைக் கொன்று உயிர் வாழும் அரசுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அழிந்து விடும்.
ஆனால் இறந்து இறையரசைப் பரப்புவோர் என்றென்றும் பேரின்ப வாழ்வு வாழ்வார்கள்.
இறலயரசுக்கு அழிவேயில்லை.
ஆகவே கிறித்தவர்கள் எதிரிகளால் துன்புறுத்தப் படுகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டால் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
ஏனெனில் இவ்வுலகில் துன்புறுவோருக்கு மறுவுலகில் பேரின்பம் காத்துக் கொண்டிருக்கிறது.
இவ்வுலகில் மரணம்தான் விண்ணகத்துக்கான வாசல்.
எதிரி நம்மைக் கொல்லும் போது நமக்காக விண்ணக வாசலைத் திறந்து விடுகிறான்.
கடுகு மணி போலிருந்த இறையாட்சி மரம் போல் வளரக் காரணமாக இருப்பது சிலுவையும், மரணமும் தான்.
ஆகவே அவை வரும்போது அகமகிழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment