"குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்."
(லூக்கா.1:80)
திருமுழுக்கு அருளப்பர் இயேசுவின் முன்னோடி.
முன்னோடியாக இருந்ததால் தான் இயேசு பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அவர் பிறந்து விட்டார்.
வீட்டில் தான் பிறந்தார்.
வீட்டில் பிறந்த அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வரக் காரணம் என்ன?
இயேசு தனது பெற்றோருடன் எகிப்துக்குச் சென்றதுக்கு எது காரணமோ அதுதான் அருளப்பர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்ததற்கான காரணம்.
குழந்தை இயேசுவைக் கொல்லும் நோக்கோடு ஏரோது மன்னன்
பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி
இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்லக் கட்டளையிட்டான்.
அந்தக் கொலையிலிருந்து தப்பிப்பதற்காகத் தான்
எலிசபெத் தன் மகனை மனிதர்கள் வாழாத பாலைவனப் பகுதிக்கு எடுத்துச் சென்றாள்.
குழந்தையை எங்கே என்று கொலை வீரர்கள் சக்கரியாவிடம் கேட்டபோது அவர் சொல்ல மறுத்து விட்டதால்
அவர்கள் அவரைக் கொன்று விட்டார்கள்.
மாசில்லாக் குழந்தைகளோடு சக்கரியாவும் இயேசுவுக்காக வேத சாட்சியாக மரித்தார்.
மகனை இயேசுவுக்காக வாழ வைப்பதற்காக தந்தை மரித்தார்.
ஆன்மீக ரீதியாக இயேசுவுக்காக வாழ விரும்புகிறவர்கள்
அவருக்காக இவ்வுலக மரணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும்
என்ற பாடத்தை நாம் சக்கரியாவின் மரணத்திலிருந்து கற்றுக் கொள்கிறோம்.
இயேசு மனிதனாகப் பிறந்தது நாம் மறுவுலகில் அவரோடு நிரந்தரமாக வாழ வேண்டும் என்பதற்காக.
மறுவுலகில் நிரந்தரமாக வாழ வேண்டுமென்றால் தற்காலிகமான இவ்வுலக வாழ்வை இழந்து தான் ஆக வேண்டும்.
இயேசு நமது துன்ப துயரங்களில் இருந்து விடுதலை தருவார்,
நமது கடன் தொல்லைகளைத் தீர்த்து வைப்பார்,
குழந்தை வரம் தருவார்,
நம்மைச் செல்வச் செழிப்புடன் வாழ வைப்பார்.
ஆகவே இயேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நாம் மற்றவர்களிடம் போதிக்கக் கூடாது.
இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
விண்ணக வாழ்வுக்காகத்தான் இயேசுவைப் பின்பற்றுகிறோம்.
ஆனால் சிலுவை இல்லாமல் விண்ணுலக வாழ்வு இல்லை.
இயேசு சர்வ வல்லவர்.
அவர் நினைத்திருந்தால் ஏரோது ஒருவனை அழிப்பதின் மூலம் மாசில்லாக் குழந்தைகளையும், சக்கரியாவையும் சாவிலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.
தன் பெற்றோரையும் எகிப்துக்கு நடக்கவும், அங்கு அகதிகள் போல் வாழவும் விடாமல் காப்பாற்றியிருக்கலாம்.
அருளப்பரையும் பாலை நிலத்தில் காட்டுத் தேனையும், வெட்டுக்கிளியையும் சாப்பிடாமல்
வீட்டில் நல்ல உணவு சாப்பிடும்படிச் செய்திருக்கலாம்.
ஆனால் அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை.
ஏன்?
கிறிஸ்தவம் என்றாலே சிலுவைகள் நிறைந்த வாழ்வு என்பதை வாழ்ந்து காட்டவே
இயேசு தாயின் வயிற்றில் உற்பவித்த வினாடியிலிருந்தே சிலுவையைச் சுமக்க ஆரம்பித்து விட்டார்.
நாம் கற்க வேண்டிய பாடம் துன்பங்கள் வரும்போது அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்,
அவற்றை நமது பாவங்களுக்கும் உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்புக் கொடுப்போம்.
அருளப்பர் பாலை நிலத்தில் தன் தவ வாழ்வின் மூலம் மன வலிமை பெற்றது போல
நாமும் தவ வாழ்வின் மூலம் ஆன்மீக வலிமை பெறுவோம்.
சிலுவை இயேசு அரசரின் சிம்மாசனம்.
சிலுவையை ஏற்றுக் கொள்பவர்கள் தங்கள் மீட்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment