Wednesday, June 12, 2024

"மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்."(மத்தேயு.5:20)

" மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு.5:20)

மறைநூல் அறிஞர்கள் பழைய ஏற்பாட்டின் சமய நூல்களையும், சட்டங்களையும் கற்றுத் தேர்ந்தவர்கள். அவற்றைப் பற்றி யூத மக்களுக்குப் போதிப்பவர்கள்.

பரிசேயர்கள் மோயீசனின் சட்டங்களை அனுசரிப்பதில் கண்ணும், கருத்துமாய்
இருப்பவர்கள். மக்கள் சட்டப்படி வாழ வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள்.

"மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். 

 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்.

 ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். 

ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். "
(மத்தேயு.23:2,3)

என்று ஆண்டவர் சொல்கிறார்.

மறைநூல் அறிஞரும், பரிசேயர்களும் யூத சமயத்தில் நிர்வாகப் பொறுப்புக்களை வகித்தார்கள்.

ஆனால் அவர்கள் பொறுப்புகளுக்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை.

பரிசேயர்கள் சட்டத்தின் நோக்கத்தை விட எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

The pharisees gave more importance to the letter of the law than to its spirit.

ஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது என்பது சட்டம்.

எந்த நோக்கத்திற்காக வேலை செய்யக் கூடாது?

ஓய்வு நாளில் இறைவழிபாடு சம்பந்தப்பட்ட செயல்களையும்,

பிறர் அன்பு சார்ந்த செயல்களையும் செய்வதற்காக அன்று வேலை செய்யக் கூடாது.

எழுத்து - வேலை செய்யக் கூடாது.

அதை மட்டும் பின்பற்றினார்கள்.

நோக்கத்தைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை.

இயேசு நோயாளிகளைக் குணமாக்கியது பிறரன்புச் செயல்.

இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதை அவர்கள் எதிர்த்தார்கள்.

அவர்களும் யாருக்கும் உதவி செய்யவில்லை.

செய்தவர்களையும் குறை சொன்னார்கள்.

 "அவர்கள் வருமானத்தில் பத்தில்‌ ஒரு பகுதியைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும் என்ற சட்டப் பகுதியை வலியுறுத்தினார்கள்.

ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விட்டார்கள். 

காணிக்கைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நல்ல வாழ்க்கைக்கும் கொடுக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார்.

அவர்கள் வெளிப்புற தூய்மைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ஆன்மீகத் 
தூய்மைக்குக் கொடுக்கவில்லை.

அவர்களை ஆண்டவர் 
 வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பிடுகிறார்.

அவர்களின் வாழ்க்கையைப் போல் நமது வாழ்க்கை இருக்கக் கூடாது.

நமது உள்ளும், புறமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

சட்டங்களை அவற்றின் நோக்கத்தை மையமாக வைத்து அனுசரிக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி காண வேண்டும் என்பது சட்டம்.

அதன் நோக்கம் அன்று திருப்பலி காண்பதோடு   முடியவில்லை.

திருப்பலியில் நாம் பெற்ற இயேசுவை அன்றைய நாள் முழுவதும் பிறரன்புச் செயல்களின் மூலம் நமது அயலானுக்குக் கொடுக்க வேண்டும்.

பூசை முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுத் தூங்கக் கூடாது.

"ஞாயிற்று கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் முழுப் பூசை காண வேண்டும்" என்பது சட்டம்.

ஆனால் முடிந்தால் தினசரி பூசை கண்டு, ஆண்டவரை உட்கொண்டால் ஆன்மீக வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

"வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கிர்த்தனம் செய்ய வேண்டும் என்பது சட்டம்.

ஆனால் நாம் பரிசுத்தத் தனத்தில் வளர வேண்டுமென்றால் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

சாவான பாவம் இல்லாவிட்டாலுங்கூட அற்பப் பாவங்களை சங்கீர்த்தனம் செய்யலாம்.

உடலில் சகதி பட்டால் மட்டுமா குளிக்கிறோம்?

வியர்வையைக் கழுவி விடுவதற்காகத் தினமும் குளிப்பதில்லை?

அதுபோல அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்தால் நமது ஆன்மா பாவமாசு இல்லாமல் பரிசுத்தமாய் இருக்கும்.

'வெள்ளிக் கிழமைகளிலும் மற்றுமுள்ள சுத்த போசன நாட்களில் சுத்த போசனமும் ஒரு சந்தி நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்க வேண்டும்" என்பது சட்டம்.

ஆனாலும் ஆண்டு முழுவதும் உணவு விசயத்தில் ஆண்டவருக்காக கட்டுப்பாடு அனுசரித்தால் ஆன்மாவுக்கும் நல்லது, உடலுக்கும் நல்லது.

அநேக உடல் நோய்கள் விருப்பம் போல் சாப்பிடுவதால் தான் வருகின்றன.

"கொலை செய்யாதே" என்பது சட்டம்.

நாம் அதற்கு அடிப்படைக் காரணமான கோபத்தை விட்டொழிப்பதோடு, பிறரோடு அன்பாகப் பேச வேண்டும்.

அயலானோடு எப்போதும் நல்லுறவில் இருக்க வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வில் வேகமாக முன்னேற வேண்டுமென்றால்

பரிசேயர்களைப் போல் சட்டங்களை எழுத்தளவில் மட்டும் வாழாமல் 

நோக்கத்தின் அடிப்படையிலும் வாழ்வோம்,

இறையன்பிலும், இறைவனுக்கேற்ற வாழ்விலும் வளர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment