(மத்தேயு.6:21)
நமது செல்வம் இருவகை,
உலகியல் செல்வம்.
ஆன்மீகச் செல்வம்.
உலகியல் செல்வம் இவ்வுலகைச் சார்ந்த பொருட்களால் ஆனது.
நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வாழும் வீடு, நிலபுலன்கள், பணிபுரியும் அலுவலகம், பணிக்காகப் பெறும் சம்பளம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.
ஆன்மீகச் செல்வம் விண்ணகத்தைச் சார்ந்தது.
ஆன்மீக வாழ்வில் நம்மை இயக்கும் இறையன்பு, பிறரன்பு, இறையருள், நமது நல்வாழ்வால் நாம் ஈட்டும் புண்ணியங்கள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.
உலகியல் செல்வம் நமது ஐம்புலன்களால் உணரப் படக்கூடியது.
ஆன்மீகச் செல்வம் நமது ஆன்மாவினால் உணரப் படக்கூடியது.
உலகியல் செல்வம் அழியக் கூடியது.
ஆன்மீகச் செல்வம், பாவத்தினால் அல்லாமல், அழிய முடியாதது.
நாம் பாவமின்றி வாழ்ந்தால் நமது ஆன்மீகச் செல்வம் என்றென்றும் அழியாது.
நாம் உடலும் ஆன்மாவும் சேர்ந்தவர்களாகையால் நம்மால் இருவகைச் செல்வங்களையும் ஈட்ட முடியும்.
ஆனால் நமது ஆன்மா உடலை விட்டுப் பிரியும் போது ஆன்மீகச் செல்வம் மட்டும் அதனுடன் செல்லும்.
உலகியல் செல்வம் உடன் வராது, உலகில் தங்கி விடும்.
உலகியல் செல்வத்தால் நமக்கு எந்த வித ஆன்மீகப் பயனும் இல்லையா?
அதை இறைப்பணிக்காகப் பயன்படுத்தினால் அது ஆன்மீகச் செல்வத்தைத் தருவதாக மாறிவிடும்.
உதாரணத்திற்கு,
பணம் உலகியல் செல்வம். அதைப் பிறரன்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தினால்
அது இறைவனிடமிருந்து ஆன்மீகச் செல்வமாகிய இறையருளை ஈட்டித் தரும்.
உலகியல் செல்வம் நம்மோடு வராது, ஆனால் அது ஈட்டிய இறையருள் நம்மோடு என்றென்றும் தங்கும்
இறைவன் உலகியல் செல்வத்தை நமக்குத் தருவதே அதை அவரது பணியில் பயன்படுத்துவதற்காகத் தான்.
கட்டடம் ஒரு உலகியல் செல்வம்.
அதை நாம் தங்கப் பயன்படுத்தினால் வீடு,
இறை வழிபாட்டுக்குப் பயன்படுத்தினால் அது கோவில்.
பெத்லகேமில் மாட்டுத் தொழுவம் கூட கோவிலாக மாறிய வரலாறு நமக்குத் தெரியும்.
மாடுகள் மட்டும் தங்கியபோது அது மாட்டுத் தொழுவம்.
அங்கு கடவுள் மனிதனாகப் பிறந்தபோது அது கோவில்.
இயேசுவின் பாடுகளுக்கு முன் சிலுவை ஒரு தண்டனைக் கருவி.
இயேசு அதில் அறையப்பட்ட பின் அது நமது மீட்பின் அடையாளம்.
நமது உள்ளத்தை சரக்கு அறை (Store room) மாற்றுவதும், கோவிலாக மாற்றுவதும் நமது கையில் தான் இருக்கிறது.
உள்ளத்தில் உலகைச் சார்ந்த எண்ணங்களுக்கு மட்டும் இடம் கொடுத்தால் அது சரக்கு அறை.
இறைவனுக்கு மட்டும் இடம் கொடுத்தால் அது கோவில்.
அதற்குள் வரும் உலகைச் சார்ந்த எண்ணங்களை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து,
அவற்றைக் காணிக்கையாக மாற்றிவிட வேண்டும்.
பணத்தை நாம் நமக்காகப் பயன்படுத்தினால் அது பணம்.
அதையே கோவில் உண்டியலில் போட்டால் அது காணிக்கை.
நமது செல்வம் எங்கு உள்ளதோ அங்கே நமது உள்ளமும் இருக்கும்.
நமது செல்வத்தை இறைவனிடம் கொடுத்து விட்டால் நமது உள்ளம் இறைவனிடம் இருக்கும்.
உள்ளத்தில் இறைவன் வாழ்ந்தால் அது கோவில்.
உள்ளம் இறைவனிடம் வாழ்ந்தால் அது மோட்சம்.
Heaven is our eternal union with God.
"உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்." என்று நமது ஆண்டவர் சொல்லுகிறார்.
நமது செல்வம் முழுவதையும் ஆன்மீகச் செல்வமாக மாற்றி அதை ஆண்டவரிடம் கொடுத்து விடுவோம்.
நாம் நித்திய காலமும் ஆண்டவருடனே இருப்போம்.
நாம் படைக்கப் பட்டிருப்பதே அதற்காகத்தான்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment